Friday, August 7, 2009

வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 3

ஐரோப்பா நாடுகளுக்கு வல்லினம் செல்ல நூலகவியலாளர் செல்வராஜா பெரும் பங்காற்றினார். அதிகம் பயணம் செய்யும் அவருடன் எப்போதும் வல்லினம் இருக்கும். அதை அவர் மலேசிய இலக்கிய வளர்ச்சிக்காகச் செய்தார் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் மலேசிய இலக்கியம் அதன் எல்லைகளைக் கடக்க பெரும் பங்காற்றியவர் செல்வராஜா. அவருடன் நான் லண்டனில் இருந்த 7 நாட்களும் ஒரு தீவிரமான படைப்பாளியின் மனோநிலையில் இருந்தார். (அவர் எழுத்தாளர் அல்ல)மார்க்ஸியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் பேச அவரிடம் விசயங்கள் நிறையவே இருந்தன. மிக முக்கியமான பிரதிகளை வாசித்திருந்தார்.அது குறித்து பேசவும் செய்தார்.ஒரு செயலையும் அதன் பின் பொதிந்துள்ள அரசியலையும் அவரால் உணர முடிந்திருந்தது. அவ‌ர் அறிமுக‌ம் செய்து வைத்த‌ ஐ.தி.ச‌ம்ப‌ந்த‌ன் அவ‌ர்க‌ளும் த‌ன் ப‌ங்கிற்கு ஒரு மாத‌ இத‌ழ் ந‌ட‌த்திக்கொண்டிருந்தார். அவ‌ர் வீட்டில் இருந்த‌ இர‌ண்டு தின‌ங்க‌ளும் த‌ன் ம‌க‌னைப்போல‌வே ந‌ட‌த்தினார். செல்வ‌ராஜாவின் மூல‌ம் கிடைத்த‌ ம‌ற்றுமொரு ந‌ட்பு இளைய‌ அப்துல்லாவினுடைய‌து. தீப‌ம் தொலைக்காட்சிக்காக அவ‌ர்தான் 1 ம‌ணிநேர‌ம் என்னை நேர்காண‌ல் செய்தார். நேர்காண‌லுக்குப்பின் மிக‌ இய‌ல்பாகி நெருங்கிய‌ ந‌ட்பாக‌ ம‌ல‌ர்ந்த‌து.

இலங்கை வாழ்வு சூழல் கொடுத்தப் படிமங்கள் பொதுவாகவே இலங்கைத் தமிழர்களை நுட்பமாகச் சிந்திப்பவர்களாக மாற்றியிருந்தது. ஏறக்குறைய இதே போன்ற காத்திரமான போக்கு உள்ளவராக 'தேசம்' ஜெயபாலன் இருந்தார். ஒரு வங்கியின் உயர் அதிகாரியாக இருந்த அவர் நான்கு இதழ்களை நடத்திக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. நான் சென்றிருந்த போது 'இன்மை'எனும் சிற்றிதழை ஜெயபாலன் வெளியிட்டிருந்தார். ஜெயபாலன் மூலமாக யமுனா ராஜேந்திரனைச் சந்தித்தேன். உரையாடல் முடிவில் தனது எழுத்துகள் குறித்து கேட்டார். நான் ஏற்கனவே அறிந்த விசயமெல்லாம் அவர் எழுத்தில் குழம்பிவிடும் உண்மையைக் கூறினேன். எளிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும் அவ‌ர் குழ‌ப்பி எழுதுவ‌து வாசிக்க‌ சிர‌மமாக‌ உள்ளது என்றேன்.பல‌ரும் அப்ப‌டிதான் கூறுவ‌தாக‌ அவ‌ர் குறை ப‌ட்டார்.

இதே போன்று பிரான்ஸ் நகரில் லஷ்மி மற்றும் பிரதீபன் உயிர்நிழல் தயாரிப்பில் தீவிரமாக இருந்தனர். சுமாரான வருவாய் கொண்டிருந்த சூழலிலும் இதழை அவர்கள் தொடர்ந்து கொண்டுவருவதில் முனைப்பாக இருந்தனர். ஷோபா சக்தி தனி இயக்கமாகவே செயல்பட்டார்.

ல‌ண்ட‌ன் ம‌ற்றும் பிரான்ஸ் ப‌ய‌ண‌ம் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளின் க‌லை இல‌க்கிய‌ம் தொட‌ர்பான‌ தீவிர‌த்தை அவ‌தாணிக்க‌ உத‌விய‌து(ய‌முனா ராஜேந்திர‌ன் த‌மிழ் நாட்டிலிருந்து ல‌ண்ட‌னுக்குக் குடிபெய‌ர்ந்திருந்தார்). புல‌ம்பெய‌ர்ந்த‌ சூழ‌லிலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கான‌ அடையாள‌த்தைப் பெற்றிருந்த‌தையும் ஒவ்வொரு ப‌டைப்பாளியும் தான் சார்ந்த‌ இல‌க்கிய‌ம் அல்ல‌து க‌லைக்காக‌ அக்க‌றையோடு சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளையும் த‌ங்க‌ள் வ‌ருவாயில் ஒரு ப‌குதியையும் ஒதுக்குவ‌து அவ‌ர்க‌ள் கொண்டிருந்த‌ தீவிர‌த்தைக் காட்டிய‌து. குறிப்பாக‌ 'த‌மிழ் நாட்டு எழுத்தாள‌ர்க‌ள் எங்க‌ளை அங்கீக‌ரிக்க‌வில்லை' போன்ற‌ அச‌ட்டுத்த‌ன‌மான‌ புல‌ம்ப‌ல்க‌ள் அங்கு இல்லாம‌ல் இருந்த‌து நிம்ம‌தியாக‌ இருந்த‌து. நான் ச‌ந்தித்த‌ வ‌ரை இல‌ங்கை ப‌டைப்பாளிக‌ளில் பெரும்பாலோர் எதிர்ப்பார்ப்பில்லாம‌ல் உத‌வுப‌வ‌ர்க‌ள் உப‌ச‌ரிப்ப‌வ‌ர்க‌ள். நாம் எதிர்ப்பார்ப்பில்லாம‌ல் நேர்மையாக‌ ந‌ட‌ந்துகொள்ளும் வ‌ரை.

வ‌ல்லின‌ம் செல்ல‌ப்போகும் இல‌க்கை உறுதி செய்வ‌தில் அந்த‌ப் ப‌ய‌ண‌ம் மிக‌ முக்கிய‌ப் ப‌ங்கை வ‌கித்த‌து.புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் வாழ்வும் அவ‌ர்க‌ள் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தின்பால் கொண்ட‌ அக்க‌ரையும் அவ‌ர்க‌ள் த‌னித்த‌ன்மையும் வ‌ல்லின‌ம் முற்றிலும் ம‌லேசிய‌ வாச‌த்தோடு வெளிவ‌ருவ‌தை உறுதிப‌டுத்திய‌து. இதில் எம்.ஏ.நுக்மானின் ம‌லேசிய‌ வ‌ருகையும் அட‌ங்கும். அவ‌ர் ம‌லேசியாவில் இருந்த‌ ஒரு வ‌ருட‌மும் வ‌ல்லின‌த்திற்கான‌ ந‌ல்ல‌ ஆலோச‌க‌ராக‌ இருந்தார் என‌லாம்.அவ‌ர் அறிமுக‌த்தில் வ‌ல்லின‌ம் ப‌ல‌ர் கைக‌ளுக்குக் கிடைத்த‌து. ல‌ண்ட‌ன் ம‌ற்றும் இல‌ங்கை ப‌த்திரிகைக‌ளில் வ‌ல்லின‌ம் தொட‌ர்பான‌ செய்திக‌ள் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌. ஓர‌ள‌வு வ‌ல்லின‌ம் ப‌ல‌ருக்குத் தெரிந்திருக்கும் ஒரு சூழ‌லில் சிவா பெரிய‌ண்ண‌னுட‌ன் ஏற்ப‌ட்ட‌ ந‌ட்பு வ‌ல்லின‌த்திற்குப் புதிய‌ வ‌டிவ‌ம் கொடுத்த‌து.

சிவா பெரிய‌ண்ண‌னை என‌க்கு 8 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே அறிமுக‌ம்.அதிக‌ம் பேசிய‌தில்லை.அவ‌ருக்கும் யுவ‌ராஜ‌னுக்கும் எங்காவ‌து ஒரு மூலையில் அம‌ர்ந்து கொண்டு யாரையாவ‌து முறைத்துப் பார்த்த‌ப‌டி இருப்ப‌துதான் முழு நேர‌ ப‌ணி. ப‌குதி நேர‌மாக‌ இல‌க்கிய‌ம் ப‌டித்துக்கொண்டும் என்றாவ‌து ஓய்வு கிடைத்தால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ புத்த‌க‌ங்க‌ளைப் புர‌ட்டிக்கொண்டும் இருப்பார்க‌ள். வ‌ல்லின‌ம் எங்க‌ளை இணைத்திருந்த‌து. சிவா வ‌ல்லின‌த்தை அக‌ப்ப‌க்க‌மாக்க உத‌வினார்.அவ‌ரே வ‌ல்லின‌த்தின் பெய‌ரை ப‌திவு செய்து அத‌ற்கு ப‌ண‌மும் செலுத்தி அக‌ப்ப‌க்க‌த்தையும் வ‌டிவ‌மைத்துக் கொடுத்த‌போது எளிதாக‌ ந‌ன்றி ம‌ட்டுமே சொல்ல‌ முடிந்த‌து.அக‌ப்ப‌க்க‌த்தில் வ‌ல்லின‌த்தை இருப‌துக்கும் மேற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் படிப்ப‌து ம‌கிழ்ச்சியைக் கொடுத்த‌து. இணைய‌த்தின் ப‌ல‌ம் என‌க்கு ஓர‌ள‌வு புரிந்தது.

இதே ச‌மைய‌த்தில் என‌க்கும் எழுதுவ‌த‌ற்கான‌ ப‌டிப்ப‌த‌ற்கான‌ அவ‌காச‌ம் தேவைபட்ட‌து. மூன்று மாத‌த்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் கொடுக்கும் சில‌ரின் முண‌க‌ல்க‌ள் கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே கேட்க‌த்தொட‌ங்கின‌. ப‌ண‌ம் கொடுப்ப‌தாலேயே சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் சில‌ரை பொருத்துப் போக‌வேண்டிய‌து ப‌டைப்ப‌த‌ற்கான‌ ம‌ன‌தை மேலும் ந‌சுக்க‌த்தொட‌ங்கியது. இல‌க்கிய‌ம் க‌லை என்று கூறி ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தை அசிங்க‌ப்ப‌டுத்திக் கொண்டு இருக்கும் சில‌ரின் உத‌வி வ‌ல்லின‌த்திற்குத் தேவையில்லை என‌த்தோன்றிய‌து.

இந்த‌ச் ச‌மைய‌த்தில் சிங்கை இள‌ங்கோவ‌ன் ம‌லேசியா வ‌ந்திருந்தார். நான்கு இர‌வுக‌ள் அவ‌ருட‌னான‌ (ம‌ஹாத்ம‌ன், யுவ‌ராஜ‌ன் ம‌ற்றும் சிவாபெரிய‌ண்ண‌ன் அதில் இருந்த‌ன‌ர்)ச‌ந்திப்பில் ஒரு க‌ணம் ம‌ன‌ம் திற‌ந்து முத‌ன் முறையாக‌ச் சொன்னேன்.

'வ‌ல்லின‌த்திற்காக‌ ப‌ல‌ரிட‌ம் ச‌ம‌ர‌ச‌ம் செய்வ‌து போல் உள்ள‌து சார். நிறுத்திட‌லாமுன்னு இருக்கேன்...'

நாளைக்கு ஒரு நாள்...அப்புற‌ம் முடிஞ்சிடும்

No comments:

Post a Comment