Friday, July 31, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...21

வ‌ன்முறைக‌ளும் திமிரும் நிர‌ம்பிய‌ ம‌ன‌தோடுதான் மீண்டும் நான்காம் ப‌டிவ‌த்தில் கால‌டி எடுத்து வைக்க‌ முடிந்த‌து. மீண்டும் ந‌ண்ப‌ர்க‌ள் கூட்ட‌ம்.ஆசிரிய‌ர்க‌ள் நான்காம் ப‌டிவ‌த்தை 'ஹ‌னிமூன் இய‌ர்'என்ற‌ன‌ர். அர‌சாங்க‌த் தேர்வு இல்லாத‌ ப‌டிவ‌ம் அது.மூன்றாம் ப‌டிவ‌ சோத‌னையில் த‌மிழில் ம‌ட்டும் 'ஏ' எடுத்திருந்தேன். த‌மிழ் ஆசிரியை வாசுகிக்கு என் மீது ந‌ல்ல‌ ம‌திப்பு இருந்த‌து.(இவ‌ர் நான்காம் ஐந்தாம் ப‌டிவ‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் த‌மிழ்ப்பாட‌ம் எடுப்ப‌வ‌ர்)என‌து தீவிர‌ பிர‌ச்சார‌த்தில் அவ‌ர் என்னை எழுத்தாள‌ன் என‌ அடையாள‌ம் க‌ண்டு கொண்டிருந்தார்.அதே போல‌ புதிதாக‌ த‌லைமையாசிரிய‌ரும் மாற்ற‌ம் க‌ண்டிருந்தார்.

த‌மிழ் த‌லைமையாசிரிய‌ர்.அவ‌ர் பெய‌ரும் வாசுகிதான்.சுங்கை ப‌ட்டாணிகார‌ர் என‌ விசாரித்து அறிந்து கொண்டோம்.குள்ள‌மாக இருந்தார்.அவ‌ர‌து கைக‌ள் வ‌ள‌க்க‌மான‌ நீள‌த்தில் இல்லாம‌ல் இடுப்போடு முடிந்து போயிருந்த‌து.முற்றிலும் வெள்ளை ந‌ரை.ஒரு த‌மிழ‌ர், இடைநிலைப் ப‌ள்ளிக்குத் த‌லைமையாசிரிய‌ராக‌ வ‌ந்த‌தும் எங்க‌ளுக்குப் பெருமை பிடிப‌ட‌வில்லை.இனி ப‌ய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை என‌ நினைத்தோம்.அடுத்த‌ இன‌த்த‌வ‌ர்க‌ளால் தொந்த‌ர‌வு ஏற்ப‌டும்போது ஒரு அம்மாவிட‌ம் முறையிடுவ‌து போல‌ முறையிட்டால் பிர‌ச்ச‌னை தீர்ந்த‌து என‌ ந‌ம்பினோம்.

புதிய‌ த‌லைமையாசிரியைப் பேசினார்.அவ‌ர் உரையின் முடிவில் எல்லாப் ப‌ள்ளியிலும் த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள்தான் பிர‌ச்ச‌னைக்குறிய‌வ‌ர்க‌ள் என்றும் இந்த‌ப்ப‌ள்ளியிலும் அந்த‌ நிலை இருந்தால் முற்றிலும் அதை துடைத்தொழிக்க‌ப் போவ‌தாக‌வும் உறுமினார்.

நாங்க‌ள் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக்கொண்டோம். எங்க‌ளுக்கென்று யாரும் இல்லாத‌து போல‌ உண‌ர்ந்தோம்.சுற்றிலும் எங்க‌ளை அக‌ற்ற‌ வேண்டிய‌ குப்பைக‌ளாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கும் ப‌ல்வேறு ச‌மூக‌த்தின‌ர் ம‌த்தியில் வ‌ன்முறையோடுதான் வாழ‌வேண்டும் என‌ அறிந்து கொண்டோம்.ஒரு ச‌மூக‌ம் தன‌க்கான‌ பாதுகாப்பை அதை வ‌ழ‌ங்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ளிட‌மிருந்து பெற‌ முடியாத‌போது அதுவே த‌ன‌க்கான‌ பாதுகாப்பு வேலிக‌ளை அமைத்துக் கொள்ளும் ஒரு 'தீ' எங்க‌ள் அனைவ‌ருக்கும் ப‌ற்றிய‌து.அந்த‌ உண‌ர்வை இப்போது வார்த்தைக‌ளால் சொல்ல‌முடிகிற‌து என்றாலும் அப்போது எங்க‌ளிட‌ம் எந்த‌ வார்த்தைக‌ளும் இல்லை.அடுத்த‌ இன‌த்த‌வ‌னிட‌ம் ப‌ய‌ப்ப‌டாம‌ல் வாழ‌ வேண்டும் என்ற‌ உண‌ர்வு ம‌ட்டும் இருந்த‌து.

தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...20

அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்திற்குப் பிற‌கு மாமா பீர் பாட்டில்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அனைத்துப் பொறுப்பிலும் என்னைத் த‌விர்த்தார்.அதை அவ‌ர் த‌ண்ட‌னையாக‌க் க‌ருதியிருக்க‌லாம். என‌க்கோ அது பெரும் சுத‌ந்திர‌ம். அத‌ன் பின்ன‌ர் காப்பி,டீ க‌லக்குவ‌து 'மீ கோரேங்' பிர‌ட்டுவ‌து என‌ என‌து க‌வ‌ன‌த்தைத் திருப்பினேன்.'மீ கோரிங்'கில் ருசி கூட்டுவ‌த‌ற்கான‌ இர‌க‌சிய‌ங்க‌ளும், தேநீர் க‌ல‌க்க‌ வேண்டிய‌ நுட்ப‌மும் ஓர‌ள‌வு புரிய‌த்தொட‌ங்கிய‌து.ச‌மைத்த‌ல் என்ப‌து மிக‌ உன்ன‌த‌ப் ப‌ணியாக‌ என‌க்குத் தெரிந்த‌து. நான் செய்யும் ஒரு ச‌மைய‌லை யாரோ ஒருவ‌ன் ந‌ம்பி சாப்பிட்டுவிட்டு அத‌ற்கு ப‌ண‌மும் த‌ந்துவிட்டுப்போகும் போது ஏற்ப‌டும் ப‌ர‌வ‌ச‌ம் எல்லாரும் போல‌ என‌க்கும் சில‌ நாட்க‌ள் ம‌ல‌ர்ந்து பின் ம‌றைந்து போன‌து.

மாமா என்னிட‌ம் முன்பு போல் பேசுவ‌தை த‌விர்த்தார்.அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தில் என்னைக் காப்பாற்ற‌ மாமா அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு அவ‌ர்களை அடித்து துற‌த்திவிட்டாலும் க‌டையைப் பொறுத்த‌வ‌ரையில் அது அவ‌ருக்கு ந‌ஷ்ட‌க்க‌ண‌க்கு.அவ‌ர்க‌ள் க‌ட‌ன் வைக்காத‌ ப‌ல‌ மாத‌ வாடிக்கையாள‌ர்க‌ள்.மாமாவுக்கும் என‌க்கும் மெல்லிய‌ இடைவெளி விழுந்த‌து.அந்த‌க்க‌டையில் தேவையில்லாத‌ ஒருவ‌னாக‌ நான் வ‌ல‌ம் வ‌ர‌த் தொட‌ங்கினேன்.தேவையில்லாத‌வ‌னாக‌ ஒரு இடத்தில் இருக்கும் கொடுமை பிந்தைய‌ நாட்க‌ளில் என்னை வாட்டிய‌து.க‌டையில் நான் விரும்பும் வேலைக‌ளைச் செய்ய‌த் தொட‌ங்கினேன்.அதில் முக்கிய‌மான‌து தேனீர் க‌ல‌க்குவ‌து.

தேனீர் க‌ல‌க்குவ‌து அதிலும் 'தே தாரேக்' க‌ல‌க்குவ‌து என‌து முக்கிய‌ ப‌ணியாக‌ மாறிய‌ப்பின்தான் அந்த‌ ஆயுத‌த்தை க‌ண்டெடுத்தேன்.தேனீர் க‌ல‌க்குவ‌து என் ஆயுத‌மான‌து.தூர‌த்தில் நின்று யாருக்கும் தெரியாம‌ல் க‌ல் எரியும் ஒரு கோழையின் ஆயுத‌ம்.த‌னிய‌னாக நிர்கையில் மிர‌ட்ட‌ப்ப‌டும் போது என‌க்குக் கிடைத்த‌ ஒரே ஒரு ஆயுத‌ம்.

உண‌வ‌க‌த்தில் வ‌ந்து ஒழுங்காக‌ சாப்பிட்டுவிட்டு போன‌வ‌ர்க‌ள் புனித‌மாக‌ வெளியேறினார்க‌ள்.தொட‌ர்ந்து அதிக‌ப் பிர‌ச‌ங்கித் த‌ன‌மாக‌வும் அத‌ட்ட‌லான‌ பேச்சு பேசுப‌வ‌ர்க‌ளுக்கும் தே தூள்,சீனி,டின் பால் இவ‌ற்றோடு சுண்டுவிர‌ல் ந‌க‌த்த‌ள‌வு எச்சிலையும் சேர்த்து க‌ல‌க்கிக் கொடுத்தேன்.(மித‌க்கும் தே தாரேக் நுரையுட‌ன் என் எச்சிலைக் குடித்து வ‌ள‌ர்ந்த‌ ம‌னித‌ர்க‌ள் இன்னும் லுனாஸில் உயிரோடுதான் ந‌ட‌மாடிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்).அது என‌க்கு பெரும் ம‌ன‌ அமைதியைக் கொடுத்த‌து.'டேய்...'என‌ மிர‌ட்ட‌லாக‌ அழைத்த‌வ‌னின் நாவில் என் எச்சில் ஏறி மிதித்து ப‌லி தீர்ப்ப‌து ஒவ்வொரு இர‌வும் உற‌க்க‌த்தைக் கொடுத்த‌து.

என் கையில் கிடைப்ப‌தெல்லாம் ஆயுத‌மாகும் வித்தை ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொருவிதமான‌ ஆயுத‌ம்.அதில் ஆச்ச‌ரிய‌ம், நான் ஏந்தி நிர்ப்ப‌து ஆயுத‌ம் என்ப‌தை யாரும் அறிய‌வில்லை.இப்போதும்.


‍தொட‌ரும்

Thursday, July 30, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...19

பீர் பாட்டில்க‌ளின் எண்ணிக்கைக் குறைகிற‌து என‌த் தெரிந்த‌வுட‌ன் மாமா உஷாராகியிருந்தார்.

(மாமா அம்மாவின் த‌ம்பி.அதற்கு முன் ச‌பாவில் போலிஸ் உய‌ர் அதிகாரியாக‌ வேலை செய்த‌வ‌ர். த‌மிழ‌ர்க‌ளைக் கேவ‌லாமாக‌ பேசினார் என‌ தன‌க்கு மேல் உள்ள‌ அதிகாரியை துவ‌ச‌ம் செய்துவிட்டு வேலையை ராஜினாமா செய்திருந்தார்.அம்மா என்னையும் மாமாவையும் அடிக்க‌டி ஒப்பிட்டு பேசுவ‌துண்டு.க‌ட‌ந்த‌ ஆண்டு மாமா இனிப்பு நீர் முற்றி இற‌ந்தார்)அவ‌ருக்கு உண‌வ‌க‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ளின் மீது ச‌ந்தேக‌ம் எழுந்த‌து. அத்த‌னை நாட்க‌ளும் அந்த‌ உண‌வ‌க‌த்தில் பீர் பாட்டில்க‌ளுக்குப் பொறுப்பாய் இருந்த‌ ஒரு ப‌ணியாள‌ரிட‌மிருந்து பொறுப்பு ப‌றிக்க‌ப்ப‌ட்டு என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ங்குக‌ளைக் க‌ழுவிக்கொண்டே பீர் பாட்டில்க‌ளை அவ்வ‌ப்போது பார்த்துக்கொள்ள‌ வேண்டும்.க‌ட‌ந்து செல்கிற‌ க‌ண‌ நேர‌த்தில் ஒன்றிர‌ண்டு பீர் பாட்டில்க‌ள் ஊழிய‌ர்க‌ளால் க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌ அபாய‌ம் இருந்த‌து.நான் பீர் பாட்டில்க‌ளின் காவ‌ல‌ன் ஆனேன்.

சிறிது நாட்க‌ளில் பீர் குடிக்க‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு பாட்டில்க‌ள் எடுத்துத் த‌ருவ‌து முத‌ல் அதை திற‌ந்து ஊற்றுவ‌து வ‌ரையிலான‌ வேலைக‌ள் என் த‌லையில் விடிந்த‌ன‌. அப்போது என‌க்கு பீர் பாட்டில்களின் பெய‌ர்க‌ள் கூட‌ அறிமுக‌ம் இல்லை.இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் வ‌ருப‌வ‌ர்க‌ள் அவைக‌ளுக்கு புனைப்பெய‌ரெல்லாம் வேறு வைத்திருந்தார்க‌ள்.அவ‌ர்க‌ள் பீர் கேட்கும் வித‌மும் என்னிட‌ம் பேசும் வித‌மும் எரிச்ச‌லை மூட்டும்.அப்போது நான் முன் புற‌ம் உள்ள‌ முடியை ம‌ட்டும் முக‌ம் ம‌றைக்கும் அள‌வு நீள‌மாக‌வும் பின் ம‌ண்டையை 'பொக்ஸ் க‌ட்டிங்'எனும் ஸ்டைலிலும் வெட்டி என் அழ‌கை பேணி வ‌ந்தேன்.குனியும் போதும் நிமிரும் போதும் முன்புற‌ முடி பொத்தென‌ ச‌ரிந்து காற்றில் ப‌ற‌ந்து அழ‌கு காட்டும்.அதில் கை வைக்காம‌ல் முக‌த்தை ஒரு சிலுப்பு சிலுப்பினால் மீண்டும் ப‌த்திர‌மாக‌ ம‌ண்டைக்கு மேல் சென்று அம‌ர்ந்து கொள்ளும்.


இப்ப‌டி முடி ச‌ரியும் போதும் ப‌ற‌க்கும் போதும் வ‌ழ‌க்க‌மாக‌ உண‌வ‌க‌த்திற்கு பீர் குடிக்க‌ வ‌ரும் ஒரு கூட்ட‌ம் கூச்ச‌லிடும். அடுத்த‌ முறை வ‌ரும்போது இது இருக்கக்கூடாது என‌ முடியைக் காட்டி க‌ட்ட‌ளையிடும்.நான் அவ‌ர்க‌ளிட‌ம் எதிர்த்து ஒன்றும் பேசிய‌தில்லை.அது அவ‌ர்க‌ளின் ப‌குதி.மேலும் ச‌ராச‌ரியான‌ இர‌ண்டு பேரை ச‌மாளிக்க‌வே நாய் பாடு ப‌ட‌ வேண்டும்; அவ‌ர்க‌ள் த‌டிய‌ர்க‌ள்.நிச்ச‌ய‌ம் என்னைத் துவைத்து காய‌ப் போட்டுவிடுவார்க‌ள்.தின‌ம் இர‌வு ஏழு ம‌ணியென்ப‌து என‌க்கு ந‌ர‌க‌மாக‌வே இருந்த‌து.எப்போது ம‌ணி ப‌தினொன்று ஆகிற‌தென‌ பார்த்துக்கொண்டே இருப்பேன்.ப‌தினொன்றான‌து என‌க்குத் தூக்க‌ம் வ‌ந்துவிடும்.போட்ட‌தை போட்டப‌டி போட்டுவிட்டு திரும்பிபார்க்காம‌ல் க‌டையின் ப‌ர‌ப‌ர‌ப்பினூடே மேலே ஓடிவிடுவேன்.அங்கு என‌க்காக‌ வைர‌முத்துவும் மேத்தாவும் காத்திருப்பார்க‌ள்.


அன்று பிர‌ச்ச‌னை வித்தியாச‌மான‌தாக‌ தொட‌ங்கிய‌து. என்னைக் கிண்ட‌ல் செய்யும் கூட்ட‌த்தில் ஒருவ‌ன் 'ஐஸ்ல‌ வ‌ச்ச‌ கிளாஸ‌ எடுத்துவா' என்றான்.நான் ஒரு கிளாஸில் ஐஸ் க‌ட்டிக‌ளைப்போட்டு கொண்டு வ‌ந்து வைத்தேன்.கேட்ட‌வ‌ன் எகிறினான்.'ஏய் ஐஸ் கிளாஸ்டா'என்றான்.என‌க்கு அவ‌ன் கேட்ட‌து புரியாத‌தால் விழித்தேன்.ச‌ட்டென‌ த‌ண்ணீர் க‌ல‌க்குப‌வ‌ர் குளிர்சாத‌ன‌ப்பெட்டியில் கிட‌ந்து சில்லிட்டிருந்த‌ கிளாஸை எடுத்து வ‌ந்து அவ‌ர்க‌ள் அருகில் வைத்து என்னை அந்த‌ இட‌த்திலிருந்து ந‌க‌ர‌ சொன்னார்.அதோடு அவ‌ர்கள் கேலி ஆர‌ம்ப‌மான‌து.இப்போது அவ‌ர்க‌ள் சொன்ன‌ வார்த்தையெல்லாம் நினைவில் இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ள் மேல் கோப‌ப்ப‌ட‌ அவ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளுக்கு எந்த‌ அவ‌சிய‌மும் இருக்க‌வில்லை.சாதார‌ண‌ அவ‌ர்க‌ளின் சிரிப்பும் கோப‌த்தை உந்த‌க்கூடிய‌து.

ஒரு முறை ர‌ஜினிகாந்தை நினைத்துக்கொண்டேன்.'என்ன‌டா'என்றேன்.அதில் ஒருவ‌ன் மெதுவாக‌ எழுந்து 'ஏய் என்னா பெர‌ச்ச‌னையா?'என்றான்.என் முக‌த்துக்கு நேராக‌ அவ‌ன் மார்பு சில‌ வெட்டுகாய‌ங்க‌ளோடு நின்ற‌து.உட‌னே ர‌ஜினிகாந்த் காணாம‌ல் போனார்.அத‌ன் பின் எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ர‌ஜினிகாந்த் வ‌ர‌வே இல்லை.


தொட‌ரும்

Monday, July 27, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...18













எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன்
எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் ம‌து அருந்துவார் என்ப‌து நான் அதுவ‌ரை க‌ற்ப‌னை கூட‌ செய்து பார்க்க‌ முடியாத‌து. அதிலும் ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லும் ஆதி.கும‌ண‌ன் ப‌ட்ட‌ப்ப‌க‌லில் ம‌து அருந்துவ‌து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த‌து.எழுத்தாள‌ன் என்ப‌வ‌ன் ஒரு போத‌க‌ன்.அவன் ச‌மூக‌த்திற்காக‌ எதையாவ‌து போதித்துக்கொண்டே இருக்க‌ வேண்டும் என‌ ந‌ம்பினேன். நான் வாசிக்கும் புத்த‌க‌ங்க‌ளில் அப்போது மு.வ‌ர‌த‌ராச‌னுக்கும் முக்கிய‌ இட‌ம் இருந்த‌து.வார‌ம் ஓர் அறிவுரையைத் தேர்ந்தெடுத்து அதை க‌விதையாக்கி பெரும் ச‌மூக‌ப் ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்தேன்.ம‌து என‌க்கு இத‌ற்கு முன் கொடுத்த‌க் காட்சிக‌ள் இள‌ஞ்செல்வ‌னின் பால் இருந்த‌ ம‌ரியாதையைக் குறைத்த‌து.நான் ம‌ன‌த‌ள‌வில் இள‌ஞ்செல்வ‌னிட‌மிருந்து வில‌கினேன்.அதோடு அவ‌ரைச் ச‌ந்திப்ப‌தையும் குறைத்துக் கொண்டேன்.

இறுதியாண்டு சோத‌னை முடிந்து விடுமுறை தொட‌ங்கிய‌தும் அம்மாவுக்கு ப‌ய‌ம் வ‌ந்திருக்க‌க்கூடும். ஒன்ற‌ரை மாத‌மும் நான் ச‌ர‌வ‌ண‌னோடு செய்ய‌ப்போகும் சாக‌ச‌ங்க‌ள் அவ‌ரின் க‌ற்ப‌னையில் எட்டியிருக்க‌ வேண்டும்.என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கும் ஏற்ப‌ட்டிருக்கும் இடைவெளி அவ‌ர் அறியாத‌து.ப‌ள்ளி விடுமுறையில்'தாமான் க‌ங்கோங்கில்' இருந்த‌ என் மாமாவின் உண‌வ‌க‌த்தில் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார்.என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கு இடைவெளி மேலும் விரிவ‌டைய‌ அதுவும் ஒரு கார‌ண‌மாக‌ இருந்த‌து.

முத‌லில் ம‌ங்குக‌ளைக் க‌ழுவுவ‌து மேசை துடைப்ப‌து போன்ற‌ அடிப்ப‌டையான‌ வேலைக‌ள் என‌க்குக் க‌ற்றுக்கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌.ஒரு சில‌ நாட்க‌ளிலேயே நான் அவ‌ற்றில் தேறிவிட்டேன்.குவிந்து கிட‌க்கும் எச்சில் ப‌டிந்த‌ ம‌ங்குக‌ள் முத‌லில் அலுப்பை மூட்டினாலும் பின்னாலில் ம‌ங்குக‌ளைக் க‌ழுவுவ‌தில் உள்ள‌ லாவ‌க‌மும் விர‌ல்களில் அவ‌ற்றை சுற்றி சுழ‌ற்றி அடுக்கி வைக்கும் பாவ‌னையும் ஒரு விளையாட்டு போல் ஆன‌து.க‌டித்து உரிஞ்ச‌ப்ப‌ட்ட‌ எலும்புத்துண்டுக‌ள் ம‌ட்டும் ப‌ல்வேறு வ‌கையிலான‌, அள‌விலான‌ ப‌ற்க‌ளை நினைவுறுத்துவ‌தாய் இருந்தன‌.

க‌டையிலிருந்து வீடு திரும்ப‌ என‌க்கு அனும‌தி இல்லை.க‌டையின் மேல் த‌ள‌த்தில் இருந்த‌ அறையில் த‌மிழ்நாட்டுத் தொழிலாள‌ர்க‌ளோடு த‌ங்கிக் கொண்டேன்.ப‌க‌லில் க‌டுமையாக‌ உழைக்கும் அவ‌ர்க‌ளுக்கு இர‌வில் ஒரே ஆறுத‌ல் பீர் பாட்டில்க‌ள்தான்.ஏற‌க்குறைய‌ நான்கு த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ர்க‌ள் போதையில் என்னைப்புடைச் சூழ‌ சுவார‌சிய‌மாக‌ப் பேசிக்கொண்டிருப்பார்க‌ள்.நான் போர்வையை த‌லை வ‌ரை இழுத்து மூடி தூங்குவ‌து போல் பாசாங்கு செய்து கொண்டிருப்பேன்.நான் அங்குத் த‌ங்கியிருந்த‌ நாட்க‌ள் முழுவ‌தும் அவ‌ர்க‌ள் என்னை பீர் குடிக்க‌ வைக்கும் க‌டும் முய‌ற்சியில் இற‌ங்கின‌ர்.மௌன‌ங்க‌ளாலும் தூக்க‌ங்க‌ளாலும் அவ‌ர்க‌ளை நிராக‌ரித்துக் கொண்டிருந்தேன்.ந‌ண்ப‌ர்க‌ளால் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து கொடுமை.ப‌திலுக்குத் திட்ட‌ முடியாது.முற்றிலும் ஏற்க‌வும் முடியாது.திட்டாம‌ல் நிராக‌ரிக்கும் ஒரு மெல்லிய‌ கோட்டில் ப‌ய‌ணிக்க‌ வேண்டும்.
அதைவிட‌ பெரிய‌ கொடுமை சில‌ தின‌ங்க‌ளுக்குப் பின் என‌க்கு நிக‌ழ்ந்த‌து.

தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...17

உடும்பு, அலுங்கு,ப‌ற‌வைக‌ள் என‌ கொய்தியோ ம‌ணிய‌ம் என‌க்கு ஏற்ப‌டுத்திய‌ உண‌வு ப‌ழ‌க்க‌ங்க‌ள் ஏராள‌ம்.அவ‌ர‌து அசாத்திய‌ தைரிய‌ம் அவ‌ரின்பால் ஒரு ஈடுபாட்டை வ‌ர‌ வ‌ழைத்திருந்தது.ப‌ல‌வித‌மான‌ வில‌ங்குக‌ளைத் தின்ப‌து என்னையே நான் ஒரு மிருக‌மாக்கிக் கொள்ளும் ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்திய‌து. காடுக‌ளில் அலைந்து திரிய‌ அந்த‌ ந‌ம்பிக்கை முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌து.

க‌ம்ப‌த்தில் ப‌ல‌ருக்கும் கொய்தியோ ம‌ணிய‌த்தின் போக்கு பிடிக்காவிட்டாலும்,பாம்புக‌ளின் புள‌க்க‌ம் அதிக‌ம் உள்ள‌ எங்க‌ள் க‌ம்ப‌த்தில் அவ‌ருக்கு முக்கிய‌த்துவ‌ம் இருந்த‌து.ப‌தினான்கு வ‌ய‌திலேயே பாம்பைக் கொள்ளும் திற‌னை நான் பெற்றிருந்தேன்.செங்க‌ல் குழியில் ப‌துங்கி கிட‌க்கும் குட்டிப்பாம்பின் மேல் கொதிநீர் ஊற்றி கொள்வ‌து முத‌ல் வீட்டில் ப‌ல‌கை இடுக்கில் ப‌துங்கி கிட‌க்கும் பாம்பின் த‌லையை ந‌சுங்குவ‌து வ‌ரை பாம்புக‌ளைக் க‌ண்ட‌தும் கொன்ற‌தும் அதிக‌ம்.ஆனால் காண்ப‌த‌ற்கு அறிதான‌ ஏற‌க்குறைய‌ 15 அடிக‌ளுக்கு மேல் நீள‌ம் உள்ள‌ ம‌லாய் நாக‌த்தை கொய்தியோ ம‌ணிய‌ம் ஒரு முறை த‌னியாளாக‌ அடித்துக் கொன்று அத‌ன் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்த‌ காட்சி அவ‌ர் துணிவிற்கு ஓர் எடுத்துக்காட்டு.

க‌ம்ப‌த்தில் ஒரு வீர‌னாக‌ விஷ‌ ஜ‌ந்துக‌ளுக்கு ச‌வாலாக‌ இருந்த‌ கொய்தியோ ம‌ணிய‌ம் ஒரு நாள் த‌ற்கொலை செய்து கொண்டார்.

அன்று ம‌து அருந்திவிட்டு அடிக்க‌ வ‌ந்த‌வ‌ரை ஓல‌ம்மா சொன்ன ஒரு வார்த்தை அவ‌ரைத் த‌ற்கொலைக்குத் தூண்டியிருந்த‌து.வ‌ழ‌க்க‌மாக‌க் குடிக்கும் பீருட‌ன் புற்க‌ளுக்கு அடிக்கும் ம‌ருந்தையும் க‌ல‌ந்து குடித்திருந்தார். ஓல‌ம்மா ஒன்றும் பேசாம‌ல் அழுத‌வாரே அவ‌ர் அருகில் இருந்தார்.அம்மாவும் அப்பாவும் அவ‌ரை ம‌ருத்துவ‌ ம‌னைக்கு அனுப்ப‌ ஏற்பாடுக‌ள் செய்த‌ன‌ர்.நான் கொய்தியோ ம‌ணிய‌த்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.வ‌லியில் துடித்த‌ப்ப‌டி கொய்தியோ ம‌ணிய‌ம் அம்மாவிட‌ம் முண‌ங்கினார்,"என்னை அந்த‌க் கேள்வி கேட்டுடிச்சி...".'எந்த‌க் கேள்வி' என‌ அம்மாவும் கேட்க‌வில்லை.என‌க்குத் தெரிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருந்த‌து.அந்த‌ வ‌ய‌தில் தெரிந்த‌ சொற்ப‌மான‌ கொச்சை வார்த்தைக‌ளை வ‌ரிசை ப‌டுத்தி எதுவாக‌ இருக்கும் என‌ யூகித்தேன்.க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை.

ம‌ருத்துவ‌ ம‌னையிலிருந்து வீடு திரும்பிய‌ ம‌றுநாள் மீண்டும் கொய்தியோ ம‌ணிய‌ம் மீண்டும் ம‌துவில் புல் ம‌ருந்தை க‌ல‌ந்து குடித்து இற‌ந்திருந்தார்.ஓல‌ம்மா வாயிலும் வ‌யிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள்.பின்ன‌ர் ஓரிரு மாத‌ம் அவ‌ரும் அதிக‌மாக‌ ம‌து அருந்தி இற‌ந்துவிட்டார்.என் வாழ்வில் இர‌ண்டாவ‌தாக‌ நான் பார்த்த‌ ம‌து சார்ந்த‌ ம‌ர‌ண‌ங்க‌ள் அவை.

இன்றும் ஓல‌ம்மா என்ன‌ வார்த்தை சொல்லி கொய்தியோ ம‌ணிய‌த்தைத் திட்டியிருப்பார் என‌த் தெரிய‌வில்லை.ச‌தா ஏச்சுக‌ளையும் இழிச் சொற்க‌ளையும் கேட்டே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ கொய்தியோ ம‌ணிய‌த்தை கொல்ல‌ அப்ப‌டி எந்த‌ச் சொல்லுக்கு வ‌லு இருந்த‌து என‌வும் தெரிய‌வில்லை.

ஆனால் ஒன்று ம‌ட்டும் உறுதி...ஓல‌ம்மா நிச்ச‌ய‌ம் இந்த‌ச் ச‌மூக‌ம் ந‌ம்பிக்கொண்டிருக்கும் 'கெட்ட‌ வார்த்தை'க‌ளில் ஒன்றையும் உப‌யோகித்திருக்க‌ மாட்டார்.அவைக‌ளுக்கு அத்த‌னை ச‌க்தி கிடையாது.


தொட‌ரும்

Sunday, July 26, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...16

இர‌ண்டு வார‌த்திற்கு ஒரு முறையாவ‌து ஓல‌ம்மாவின் இர‌த்த‌த்துளிக‌ள் எங்க‌ள் வீட்டின் அஞ்ச‌டியில் சொட்டு விட்டிருக்கும். கொய்தியோ ம‌ணிய‌ம் பெரிய‌ ம‌ர‌க்க‌ட்டையைச் சும‌ந்த‌ப‌டி 'இனிமே இந்த‌ வீட்டுப்ப‌க்க‌ம் வ‌ராத‌டி' என‌த்தொட‌ங்கி ஓல‌ம்மாவின் க‌ற்பு குறித்தும் அவ‌ர் அம்மாவின் க‌ற்பு குறித்துமான‌ ச‌ந்தேக‌ம் க‌ல‌ந்த‌ வார்த்தைக‌ளை கொச்சையாக‌ உமிழ்வார். ஓல‌ம்மாவும் தான் பாதுகாப்பாக‌ இருக்கும் தைரிய‌த்தில் எங்க‌ள் வீட்டிலிருந்த‌ப‌டியே கொய்தியோ ம‌ணிய‌த்தின் சொல் அம்புக‌ளை சில‌ உப‌ரிக‌ளோடு இணைத்து மீண்டும் அவ‌ரை நோக்கியே பாய்ச்சுவார். என் அம்மா காதை மூடிய‌ப‌டி ஒரு மூலையில் அம‌ர்ந்து கிட‌ப்பார். ஓல‌ம்மாவின் கோப‌ம் தீர்ந்த‌தும் அவ‌ர் காய‌த்திற்கு ம‌ருந்து போட்டுவிடுவார். அது போன்ற‌ ச‌மய‌மெல்லாம் என‌க்கு அம்ம‌வின் மீது கோப‌மாக‌ இருக்கும். 'இவ‌ங்க‌ளுக்கெல்லாம் எதுக்கு உத‌வி செய்றீங்க‌' என‌ க‌த்துவேன். அம்மா, "உத‌வின்னு கேட்டு வ‌ந்தா செய்யாம‌ இருக்க‌க் கூடாது" என்பார்.


கால‌ப்போக்கில் என‌க்கும் இந்த‌ சூழ‌ல் ப‌ழ‌கிவிட்ட‌து. கொய்தியோ ம‌ணிய‌ம் போதையில் ஒருவ‌ராக‌வும் தெளிந்த‌ நிலையில் வேரொருவ‌ராக‌வும் காட்சிய‌ளித்தார். தெளிவாக‌ இருக்கும் பொழுதுக‌ளில் கொய்தியோ ம‌ணிய‌ம் தாத்தாவிட‌ம் பொழுதைக்க‌ளிப்ப‌து சுவார‌சிய‌மான‌து. அவ‌ர் சில‌ மூலிகைக‌ள் குறித்து அறிந்து வைத்திருந்தார். கால் க‌ட்டைவிர‌லால் புற்க‌ளைத் த‌ட‌விய‌ப‌டி ந‌ட‌ப்ப‌வ‌ர் திடீரென‌ 'தெ...இதுதான்'என‌ சிறிதாய் இருக்கும் ஒரு வ‌கை இலையைப் ப‌றித்து மெல்வார். அந்த‌ இலையில் உள்ள‌ பால் இர‌த்த‌த்தில் க‌ல‌க்கும் போது அது வெளிப‌டுத்தும் வாடை பாம்புக‌ளை அச்ச‌ம் கொள்ள‌ச்செய்யும் என்பார்.


கொய்தியோ ம‌ணிய‌ம் வேட்டைக்குப் போவ‌தைப் பார்க்க‌வே ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும். வெரும் லாஸ்டிக் ம‌ட்டுமே அவ‌ர் ஆயுத‌ம். கூட‌வே இர‌ண்டு நாய்க‌ள் ஓடும். அரைகால் ச‌ட்டை ம‌ட்டுமே அணிந்திருப்பார். வெற்றுட‌ல். சிறு த‌ழும்புகூட‌ இல்லாம‌ல் அவ‌ர் சுற்றிவ‌ரும் காட்டிலிருந்து போன‌மாதிரியே மூட்டைநிரைய‌ உடும்புக‌ளை அள்ளிக்கொண்டு வ‌ருவார். காடு அவ‌ருக்கு ப‌ழ‌க்க‌மான‌ பிர‌தேச‌ம். காட்டுக்குள் நுழையும் போது அவ‌ர் ம‌து அருந்தி நான் பார்த்த‌தில்லை.


ஒரு முறை அவ‌ரோடு பொழுதைக் க‌ழித்துக் கொண்டிருக்கும் போது க‌த்தி வீசுவ‌து குறித்து என்னிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்தார். க‌த்தி ந‌ம்மை நோக்கி வ‌ருகையில் அதை எப்ப‌டி கையாள்வ‌து என‌ அவ‌ரே வீசி அவ‌ரே த‌டுத்தும் காண்பித்தார். ச‌த்த‌த்துட‌ன் இட‌து கையால் க‌த்தியை வீசி லாவ‌க‌மாக‌ ஆள்காட்டி விர‌லுக்கும் ந‌டு விர‌லுக்கும் ந‌டுவில் அதை அட‌ங்க‌ச்செய்வ‌தை ஆச்ச‌ரிய‌மாக‌ப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிற‌கு க‌த்தியை என் கையில் கொடுத்து வீச‌ச் சொன்னார். கைக‌ள் ந‌டுங்கின‌. க‌த்தி த‌ன்னால் கீழே விழுந்த‌து.

கொய்தியோ ம‌ணிய‌ம் 'பொட்டை' என்றார்.


தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...15

ம‌து குறித்த தீராத‌ க‌ற்ப‌னையும் ப‌ய‌மும் அந்த‌ வ‌ய‌தில் என‌க்கு இருந்த‌து. ஒவ்வொரு மாத‌மும் வீட்டிற்கு வ‌ந்து சேரும் 'ப‌ய‌னீட்டாள‌ர் ச‌ங்க‌ குர‌ல்' ப‌த்திரிகையும் 'ம‌துவை ஒழிப்போம்... ம‌தியை வ‌ள‌ர்ப்போம்' என்று பிர‌ச்சார‌ம் செய்து கொண்டிருந்தது. நான் வாழ்ந்த‌ லுனாஸ் ப‌குதி சாராய‌த்திற்குப் பேர் போன‌து. எண்ப‌துக‌ளில் ந‌ச்சுக்க‌ல‌ந்த‌ சாராய‌ம் குடித்து லுனாஸ் தோட்ட‌த்தில் உள்ள ப‌ல‌ வீடுக‌ளில் பிண‌ங்க‌ள் வ‌ரிசைப் பிடித்து நின்ற‌தையும் ஒப்பாரி ஓல‌த்தில் லுனாஸ் மூழ்கி போய் கிட‌ந்த‌தையும் இன்றும் ப‌ல‌ர் நினைவில் நிறுத்தி விசாரிப்ப‌துண்டு.


கெடாவைத் தாண்டி உள்ள‌ ம‌க்க‌ளிட‌ம், நான் என‌து ஊர் பெய‌ரைச் சொல்வ‌தில் ஆர‌ம்ப‌த்திலிருந்தே சில‌ ம‌ன‌த்த‌டைக‌ள் இருந்த‌ன‌. பிண‌ வாடையிலிருந்து தொட‌ங்கும் உரையாட‌ல்க‌ளை எதிர்கொள்வ‌து அருவருப்பான‌தாக‌ இருந்த‌து. ப‌ய‌னீட்டாள‌ர் ச‌ங்க‌ம் வெளியிட்ட‌ ஒரு கையேடும் லுனாஸில் ந‌ட‌ந்த‌ இந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தைப் ஒப்பாரிப் ப‌ட‌ங்க‌ளோடு காட்டியிருந்த‌து. நான் ஆர‌ம்ப‌க்க‌ல்வி ப‌யின்ற‌ வெல்ல‌ஸிலி ப‌ள்ளியின் அருகேதான் அந்த‌ வ‌ர‌லாற்றுக்குறிய‌ சின்ன‌ங்க‌ள் காடும‌ண்டி கிட‌ந்த‌ன‌. பாதியாய் உடைக்க‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ளின் ம‌தில்க‌ளுக்குப் பின்னே 'அச்சிக்கா' விளையாட‌ வ‌ச‌தியாய் இருக்குமென்றாலும் க‌ண்ணுக்குத்தெரியாத‌ பிண‌ங்க‌ளின் நிழ‌ல்க‌ள் அங்கு அசைவ‌தாக‌வும் ம‌து அருந்துவ‌தாக‌வுமே என் க‌ண்க‌ளுக்குத் தெரிந்த‌ன‌.


என‌து ப‌த்தாவ‌து வ‌ய‌தில் க‌ம்போங் லாமாவிலிருந்து க‌ம்போங் செட்டிக்கு வீடு மாறி வ‌ந்த‌வுட‌ன் ம‌துவின் வாச‌னை என்னை வேறு வ‌கையாக‌த் துர‌த்தி வ‌ந்த‌து.


கொய்தியோ ம‌ணிய‌த்தையும் ஓல‌ம்மாவையும் அநேக‌மாக‌ லுனாஸ் வ‌ட்டாராத்தில் தெரியாத‌வ‌ர்க‌ள் குறைவு. கொய்தியோ ம‌ணிய‌ம் பெரிய‌ தாதாவாக‌ ஒரு கால‌த்தில் வ‌ள‌ம் வ‌ந்த‌வ‌ர். அந்த‌மான் தீவிலிருந்து த‌ப்பித்து லுனாஸில் த‌ஞ்ச‌ம் அடைந்திருந்தார். உடும்பு வேட்டியாடுவ‌தில் அவ‌ருக்கென‌ த‌னி உக்திக‌ளை வைத்திருந்தார். இள‌மை கால‌த்தில் இருவ‌ர் முக்கிக்கொண்டு தூக்கும் மூட்டைக‌ளை த‌னி ஒருவ‌ராக‌ தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போவ‌தை அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். ஒரு கால‌த்தில் இருந்த‌ உட‌ற்க‌ட்டு அவ‌ரின் எழுவ‌தாவ‌து வ‌ய‌திலும் 'விட்டுப்போவேனா' என‌ அவ‌ர் உட‌லிலேயே கொஞ்ச‌மாய் த‌ங்கியிருந்த‌து. கொய்தியோ ம‌ணிய‌மும் ஓல‌ம்மாவும் எங்க‌ளுக்கு அண்டை வீட்டுக்கார‌ர்க‌ளானார்க‌ள்.



நாங்க‌ள் அங்கு சென்ற‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் ஓல‌ம்மா அல‌ரிய‌ப‌டி எங்க‌ள் வீடு நோக்கி ஓடி வ‌ந்தார். அவ‌ர் த‌லையில் இர‌த்த‌ம். என் ஞாப‌க‌த்தில் அவ்வ‌ள‌வு ம‌னித‌ ர‌த்த‌ம் பார்த்த‌து அதுதான் முத‌ன்முறை.


தொட‌ரும்

Wednesday, July 22, 2009

க‌லை இல‌க்கிய‌ விழாவில் க‌ல‌ந்துகொள்ள‌...

க‌லை இல‌க்கிய‌ விழாவில் க‌ல‌ந்துகொள்ள‌...


நீங்க‌ள் தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌

தொலைபேசி எண்: 0163194522
மின்ன‌ஞ்ச‌ல் : na_vin82@yahoo.com.sg
valllinamm@gmail.com

அக‌ப்ப‌க்க‌ம்: http://vallinam.com.my/

முன் ப‌திவு இல்லாத‌வ‌ர்க‌ள் நிக‌ழ்வில் க‌ல‌ந்துகொள்ள‌ அனும‌திக்க‌ப் ப‌ட‌ மாட்டார்க‌ள்

கலை இலக்கிய விழா

இடைவேளையாக...


இன்று ஆஸ்ட்ரோ வானவில் போயிருந்தேன். கடுமையான காய்ச்சல் மற்றும் சளி. குளிர்சாதனதின் கடுமை மேலும் என் நிலையை மோசமாக்கியது. எப்படியோ ஒரு வழியாக 'கலை இலக்கிய விழா' குறித்து பேசிவிட்டேன்.வரும் வெள்ளிக்கிழமை 'விழுதுகள்' நிகழ்வில் ஒளிபரப்பாகும். இப்போது வரை என்ன பேசினேன் எனத் தெரியவில்லை. என் கவனம் முழுவதும் உட்கார்ந்திருக்கும் நாற்காலியிலேயே இருந்தது (மன்னிக்கவும் அந்த நாற்காலிக்கு நான்கு கால் இல்லை.)அது சுழன்று கொண்டே இருந்தது. ஏற்பாட்டாளருக்கு வேறு கோபம். நான் சரியாக அமரவில்லையாம்.கொஞ்சம் உடலை திருப்பினாலே ஒரு சுழற்று சுழற்றிவிடும் இருக்கையை சமாளிக்க மேசையில் கைகளை ஊன்றிக்கொண்டேன்.


வருகிற 29/8/09 கலை இலக்கிய விழா நடைப்பெறுகிறது. மொத்தம் 300 பேருக்கு மட்டுமே அனுமதி. இப்போதைக்கு 200 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இன்னும் 100. நண்பர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். ஒரு டிக்கெட் விலை 50.00 ரிங்கிட். இது உணவு மற்றும் 3 புத்தகங்களின் விலையையும் அடக்கியது. முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.



'அங்க போய் வாங்கிக்கலாம்' என எண்ணியிருந்தால் மன்னிகவும். அதற்கான வாய்ப்பு இல்லை. டிக்கெட்டுகள் இல்லாதவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை. இந்நிகழ்வில் ஓவியர் சந்துருவின் ஓவிய கண்காட்சியும்,சிங்கை இளங்கோவனின் மேடை நாடகமும் ஸ்டார் கணேசனின் நிழல்படக் கண்காட்சியும் இடம்பெரும். 'வல்லினம்'இதழின் புதிய முயற்சி.முதல் முயற்சி. ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.


நேர்காணல் முடிந்தவுடன் இருக்கையை விட்டு எழும்போதுதான் நிம்மதியாக இருந்தது. இரண்டாவது முறையாக இருக்கையை விட்டு எழும்போது ஏற்பட்ட நிம்மதி உணர்வு அது. முதல் அனுபவம் லண்டன் நகரில் 'தீபம்' தொலைக்காட்சிக்காக இளைய அப்துல்லா நேர்காணல் செய்தபோது ஏற்பட்டது. அதுவும் இதே போன்ற சுழலும் இருக்கைதான்.


இது போன்ற இருக்கைகள் எங்கிருந்து இவர்களுக்குக் கிடைக்கின்றன என தெரியவில்லை. தெரிந்தாலாவது சில தலைவர்களுக்கு இந்த இருக்கையை பரிசளிப்பது பற்றி யோசிக்கலாம்.


ம.நவீன்

Tuesday, July 21, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...14

இள‌ஞ்செல்வ‌னின் பேச்சைக் கேட்ப‌து இனிமையான‌ அனுப‌வ‌ம்.என்னையும் ஒரு பொருட்டாக‌ ம‌தித்து அவ‌ர் த‌ன‌து எண்ண‌ங்க‌ளைப் ப‌கிர்ந்து கொண்ட‌தை இப்போது நினைத்தாலும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.அவ‌ர், தான் செய்த‌ இல‌க்கிய‌ வாத‌ங்க‌ளைத் தொகுத்து ஒரு புத்த‌க‌மாக‌ப் போட‌ எண்ணியிருந்தார்."அப்ப‌டிப் போட்டா நல்லா இருக்கும்ல‌..."என‌ வின‌விய‌வ‌ரிட‌ம் என்ன‌ சொல்வ‌தென்று தெரியாம‌ல் ஒரு மார்க்க‌மாக‌த் த‌லையாட்டி வைத்தேன். "போட‌ணும் ... போட‌ணும்" என்றார். அல்ல‌து த‌ன‌க்குத் தானே கூறிக்கொண்டார்.

ஒரு முறை அவ‌ரிட‌ம் நான் எழுதிய‌ முத‌ல் சிறுக‌தையை எடுத்துச்சென்று காட்டினேன்.ப‌டித்துப் பார்த்த‌வ‌ர் "நான் சொன்ன‌ க‌டையில‌ புத்த‌க‌ம் எடுத்து ப‌டிக்கிறீங்க‌ளா?" என‌க்கேட்டார்.பின் அவ‌ரே "நிறைய‌ ப‌டிங்க‌"என்றார்.

என்னைப் பொறுத்த‌வ‌ரை த‌ன‌க்குத் தானே பேசிக்கொள்வ‌தை த‌விர்க்க‌ இள‌ஞ்செல்வ‌னுக்குப் ப‌ய‌ன்ப‌ட்ட‌ க‌ருவி நான்.அப்ப‌டி ஒரு க‌ருவியாய் இருப்ப‌து என‌க்கும் பிடித்திருந்த‌து.சொற்க‌ளைச் சேக‌ரிக்கும் பெட்டி போல்.யாருக்கும் தெரியாம‌ல் ம‌றைத்து வைத்திருக்கும் ஆண‌வ‌த்தின் குர‌லை என்னிட‌ம் காட்ட‌ இள‌ஞ்செல்வ‌னுக்கு வ‌ச‌தியாய் இருந்த‌து.என‌க்கும் அதை ஏந்தி கொள்வ‌தில் எந்த‌த் த‌டையும் இருந்த‌தில்லை.ஒரு வேளை அது ஆண‌வ‌ம் என‌ அப்போது நான் அறியாம‌ல் இருந்திருக்க‌லாம்.


புதுமைப்பித்த‌னைப் பற்றியும் ஜெய‌காந்த‌ன் ப‌ற்றியும் ஓரிரு முறை கூறியுள்ளார்.புதுமைப் பித்த‌னின் சில‌ க‌தைக‌ளை அவ‌ராக‌வே கூறி அவ‌ராக‌வே விய‌ப்பார்.அவ‌ருக்குத் துணையாக‌ வேறு வ‌ழியே இன்றி நானும் விய‌ப்ப‌து போல‌ பாவ‌னை செய்வேன்.என‌க்கு அப்போது தெரிந்த‌தெல்லாம் வைர‌முத்து ம‌ற்றும் மேத்தா ம‌ட்டுமே.அந்த‌ மாபெரும் இல‌க்கிய‌ ஜாம்ப‌வான்க‌ளைப் ப‌ற்றி இள‌ஞ்செல்வ‌ன் பேசாத‌து வ‌ருத்த‌மாக‌ இருக்கும்.அப்ப‌டி அவ‌ர் பேச‌ப்போகும் ஒரு தின‌த்தில் இடையில் புகுந்து எடுத்து விட‌ வைர‌முத்து க‌விதைக‌ள் சில‌வ‌ற்றை ம‌ன‌ன‌ம்கூட‌ செய்து வைத்திருந்தேன்.


அனேக‌மாக‌ வெல்ல‌ஸில் த‌மிழ்ப்ப‌ள்ளியில் என்னுடைய‌ வ‌ருகையும் இள‌ஞ்செல்வ‌னுட‌னான‌ ச‌ந்திப்பும் வ‌ழ‌க்க‌த்துக்குள்ளாகிவிட்ட‌ ஒரு சூழ‌லில் இள‌ஞ்செல்வ‌னைக் காண‌ அன்றும் ப‌ள்ளிக்குச் சென்றேன்.ப‌ள்ளியில் அவ‌ர் கார் இல்லை.அந்த‌ப் ப‌ள்ளியில்தான் என‌து ஆர‌ம்ப‌ க‌ல்வியை முடித்திருந்த‌தால் ஆசிரிய‌ர்க‌ள் ப‌ல‌ர் ந‌ல்ல‌ப் ப‌ழ‌க்க‌ம்.அதில் ஒரு ஆசிரிய‌ர் "ஆதி.கும‌ண‌ன் வ‌ந்திருக்கிறார்.அவருட‌ன் வெளியேறி இருக்கிறார்" என‌க் கிசுகிசுத்தார்.

ஆதி.கும‌ண‌ன் என்ற‌தும் என‌க்கு விய‌ப்பு ஏற்ப‌ட்ட‌து.அப்போது ஆதி.கும‌ண‌ன் ச‌ர்ச்சைக் குறிய‌வ‌ராக‌வும் த‌ன‌க்கென‌ மிக‌ப்பெரிய‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌த்தைக் கொண்ட‌வ‌ராக‌வும் இருந்தார்.அவ‌ரின் 'ஞான‌பீட‌ம்'ப‌குதி ப‌ல‌ராலும் விரும்பி வாசிக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து.அவ‌ர‌து 'பார்வைக‌ள்'க‌ட்டுரை தொகுதியையும் வாசித்து முடித்திருந்தேன்.ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன், ம‌க்க‌ள் ஓசை, இத‌ய‌ம் என‌ பெரிய‌ ப‌த்திரிகை அதிப‌தியாக‌ விள‌ங்கினார் ஆதி.


அடித்த‌து லாட்ட‌ரி.ஆதி.கும‌ண‌னைச் ச‌ந்தித்து என‌து க‌தைகளையும் க‌விதைகளையும் கொடுத்து பிர‌சுரிக்க‌ச் செய்ய‌ வேண்டும் என‌ முடிவெடுத்தேன்.சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தேன். லுனாஸ் ட‌வுன் முச்ச‌ந்தியில் உள்ள‌ 'ஹீத்தாம் மானிஸ்'க‌டையின் ஓர‌மாக‌ இள‌ஞ்செல்வ‌னின் பென்ஸ் கார் நின்ற‌து.க‌ருப்பு க‌ண்ணாடியால் சூழ‌ப்ப‌ட்ட‌ க‌டை அது.இதுவ‌ரை நான் உள்ளே நுழைந்த‌தில்லை.வ‌ழ‌க்க‌மான‌ க‌டைக‌ளைவிட‌ அங்கே ச‌ற்று விலை அதிக‌ம் என‌க் கேள்வி ப‌ட்ட‌துண்டு.மெதுவாக‌ க‌டையை நெருங்கினேன்.உள்ளேதான் அவ‌ர்க‌ள் இருக்க‌ வேண்டும்.இரு கைக‌ளையும் ப‌க்க‌வாட்டில் வைத்து ஒளியை ம‌றைத்த‌ப‌டி க‌ண்ணாடியில் முக‌ம் அழுத்தி உள்ளே பார்த்தேன்.



இள‌ஞ்செல்வ‌னும் ஆதி.கும‌ண‌னும் சில‌ பீர் பாட்டில்க‌ளோடு க‌ண்ணாடி கிளாஸில் நுரை பொங்க‌ அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.


- தொட‌ரும்

Monday, July 20, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...13

ச‌ர‌வ‌ண‌னுக்கும் என‌க்கும் இடையில் மெல்லிய‌ இடைவெளி விழுந்திருந்த‌து. சொற்க‌ளால்... புன்ன‌கையால்... உத‌விக‌ளால் நிர‌ப்ப‌முடியாத‌ சூட்சுமமான‌ இட‌வெளி. அந்த‌ இடைவெளி குறித்து நாங்க‌ள் இருவ‌ருமே பேச‌ விரும்ப‌வில்லை. அது குறித்து பேசுவ‌து மேலும் பிரிவின் வேக‌த்தை அதிக‌ரிக்குமோ என்ற‌ எண்ண‌ம் எங்க‌ள் இருவ‌ருக்குமே இருந்தது. ம‌ன‌தின் ஓர் அந்த‌ர‌ங்க‌மான‌ ப‌குதி விம்பி புடைத்து அத‌ன் அதிர்வை உட‌ல் முழுதும் ப‌ர‌வ‌ செய்த‌ப‌டி இருந்தது. இப்போதும் அந்த‌ உண‌ர்வை அத‌ன் முழுத் த‌ன்மையோடு என்னால் மீட்டுக்கொண‌ர‌ முடிகிற‌து.

ச‌ர‌வ‌ண‌ன் வீட்டின் முன் நிர்ப்பேன். அவ‌ன் த‌ன‌து சைக்கிளை எடுத்துக்கொண்டு என்னோடு ப‌ள்ளிக்குக் கிள‌ம்புவான். ஓய்வு நேர‌ம் என‌க்காக‌க் காத்திருந்து சிற்றுண்டிச்சாலை நோக்கி ந‌ட‌ப்பான். வீட்டிற்கு திரும்புகையில் ஒன்றாக‌ செல்வோம். முத‌லில் அவ‌ன் வீடு வ‌ரும். நெடிய‌ மௌன‌த்தை கைவிடாம‌ல் , ஹேண்ட‌லைப் பிடித்த‌ப‌டி விர‌ல்க‌ளை ம‌ட்டும் தூக்குவான்.ச‌ம‌ய‌ங்க‌ளில் அதுவும் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய‌தும் அவ‌னிட‌மிருந்து வ‌ர‌ப்போகும் அழைப்புக்காக‌க் காத்திருப்பேன். அடிக்க‌டி அவ‌ன் வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து குர‌ல் கேட்ட‌தும் வைத்து விடுவேன். அவ‌ன் வீட்டில் இருப்ப‌தை ம‌ட்டும் உறுதி செய்து கொள்வேன். தொலைபேசிக்குப் ப‌தில் இல்லையென்றால் அவ‌ன் என் வீடு நோக்கி வ‌ருவ‌தாக‌க் க‌ற்ப‌னை செய்து கொள்வேன்.அப்படி ந‌ம்பி ஏமாறும் ப‌ட்ச‌த்தில் அவ‌ன் யாரோ ஒரு புதிய‌ ந‌ண்ப‌னுட‌ன் ஊர் சுற்றுவ‌தாக‌ எண்ண‌ம் வ‌ரும். ம‌ன‌ம் வ‌லிக்கும்.

எழுத்திலும் இல‌க்கிய‌த்திலும் நான் காட்டிய‌ தீவிர‌ம் ச‌ர‌வ‌ண‌னுக்கு ம‌ன‌த்த‌டையை ஏற்ப‌டுத்தியிருந்த‌து. அதிலும் இள‌ஞ்செல்வ‌னுட‌ன் என‌க்கு ஏற்ப‌ட்ட‌ நெருக்க‌ம் அவ‌ன் எதிர்ப்பாராத‌து.

'டே எழுத்தாள‌னுங்க‌ளே பொய் கார‌னுங்க‌டா... சும்மா பேப்ப‌ருல‌ எழுதி என்னாத்த‌டா கிழிச்சானுங்க‌... ஒரு த‌மிழ‌னுக்கு அடிப்ப‌ட்டு ர‌த்த‌ம் கொட்டும் போது தொடைக்க‌ தைரிய‌ம் வ‌ருமா? கொட்ட‌ சுறுங்கிங்க‌தான் எழுத‌ போவானுங்க‌...'எழுத்து, இல‌க்கிய‌ம்,இள‌ஞ்செல்வ‌ன் இதில் எது குறித்து பேசினாலும் ஆத்திர‌ம் அடைந்த‌வ‌ன் பின் த‌ன‌து நெடிய‌ மௌன‌த்தால் என்னைத் த‌ண்டிக்க‌த் தொட‌ங்கியிருந்தான். அவ‌ன் கூறிய‌ கார‌ண‌ங்க‌ள் என‌க்குப் பொய்யாக‌ப் ப‌ட்ட‌து. அவ‌ன் சொற்க‌ளில் அரை ஜீவ‌ன் ம‌ட்டுமே இருந்தது.நான் தொட‌ர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். ச‌ர‌வ‌ண‌ன் வில‌கி கொண்டே சென்றான்.
0 தொட‌ரும்

Sunday, July 19, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...12

ஒவ்வொரு நாளும் ப‌த‌ற்ற‌மாக‌வே விடிந்தது. ஒரு பிரிய‌த்தை த‌க்க‌ வைத்துக்கொள்ளும் ப‌த‌ற்ற‌ம் அது. உருப்ப‌டாத‌வன், அஞ்ச‌டி கார‌ நாய், பொறுக்கி என்று கேட்டுக் கேட்டே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ என் காதுக‌ளுக்கு முத‌ன் முத‌லாக‌ ந‌ம்பிக்கையான‌ வார்த்தைக‌ள் இள‌ஞ்செல்வ‌னிட‌மிருந்துதான் கிடைத்த‌ன‌. பிற‌ர் சொற்க‌ளின் மூல‌மாக‌ என்னையே நான் க‌ட்ட‌மைத்துக் கொண்ட‌ ம‌ண‌ல் சுவ‌ரு இள‌ஞ்செல்வ‌ன் மூல‌மாக‌ உதிர்ந்து உதிர்ந்து உருவ‌ம் இழ‌ந்த‌து. தொட‌ர்ந்த‌ ச‌ந்திப்புக‌ளில் இள‌ஞ்செல்வ‌ன் என் மீது வைத்த‌ ந‌ம்பிக்கையும் என்னை ந‌ம்புவ‌தற்கான‌ அடையாள‌மாய் அவ‌ர் காட்டிய‌ சின்ன‌ஞ் சிறிய‌ பிரிய‌ங்க‌ளும் ஒரு வ‌கையான‌ கூச்ச‌த்தைக் கொடுத்த‌து.

இள‌ஞ்செல்வ‌ன் வ‌ழிகாட்ட‌லில் மு.மேத்தாவையும் வைர‌முத்துவையும் முத‌ன் முத‌லாக‌ வாசிக்க‌ ஆர‌ம்பித்திருந்தேன். ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌மாக‌ புத்த‌க‌ங்க‌ள் கொடுத்த‌ அந்த‌ ஆசிரியை('வீரா நாவ‌ல்' உரிமையாள‌ர்)சில‌ வார‌ங்க‌ளுக்குப் பிற‌கு ப‌ண‌ம் எதிர்ப்பார்க்க‌த் தொட‌ங்கியிருந்தார். அது குறித்து இள‌ஞ்செல்வ‌னிட‌ம் சொல்வ‌து ச‌ரியில்லை என‌ப்ப‌ட்ட‌து. தீவிர‌மாக‌ப் ப‌ண‌ம் சேர்க்க‌த் தொட‌ங்கினேன்.

முத‌லில் பினாங்கு செல்வ‌தைத் த‌விர்த்தேன். வீட்டில் ம‌ளிகைப் பொருட்க‌ள் வாங்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். பொருட்க‌ளின் விலை திடீரென‌ உய‌ர்ந்திருப்ப‌தைக் க‌ண்டு அம்மா அதிர்ச்சிய‌டைந்தார். அதோடு க‌டைக்கார‌ர்க‌ள் என்னைச் சின்ன‌ப்ப‌ய‌ல் என்று ஏமாற்றுவ‌தாக‌ ந‌ம்பினார். இப்ப‌டி இர‌ண்டு வார‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்தாலே ஒரு புத்த‌க‌ம் வாட‌கைக்கு எடுப்ப‌த‌ற்கான‌ ப‌ண‌ம் சேர்ந்துவிடும்.ஒரு புத்த‌க‌ம் என‌க்கு ஒரு வார‌த்திற்குத் தாங்க‌வில்லை. மேலும் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ வேண்டும்.புத்த‌க‌ம் வாங்க‌ வேண்டும். வேறு வ‌ழியில்லை ப‌ள்ளியில் க‌விதைக‌ள் விற்க‌த்தொட‌ங்கினேன்.


அப்போது எங்க‌ள் ப‌ள்ளியில் நிரைய‌ பேர் எப்போதும் போல‌ அப்போதும் காத‌ல் வ‌ய‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ பொத்தி பொத்தி வைத்த‌ அவ‌ர்க‌ள் காத‌லை தெரிவிக்க‌வும் அன்பைப் ப‌கிந்துகொள்ள‌வும் அவ‌ர்க‌ளுக்கு அவ‌ச‌ர‌மாக‌க் க‌விதை தேவைப்ப‌ட்ட‌து. பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌மெல்லாம் 'ம‌க்க‌ள் ஓசை'வாங்கும்ப‌டி நான் பிர‌ச்சார‌ம் செய்து கொண்டிருந்த‌தால் ப‌ல‌ரும் என‌க்கு எழுத‌ வ‌ரும் என‌ அடையாள‌ம் க‌ண்ட‌ன‌ர்.த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை நான் எப்ப‌டியெல்லாம் க‌விதையாக்க‌ வேண்டும் என்று ம‌ன‌முருகி வ‌ர்ணிப்ப‌ர்.ப‌ள்ளி முடிவ‌த‌ற்குள் நான் அவ‌ர்க‌ள் சொல்ல‌ நினைத்த‌தை க‌விதையாக்கி கொடுத்துவிடுவேன். ஒரு க‌விதைக்கு 50 காசு கிடைக்கும்.என் அரைகுறை த‌மிழ் அப்போதே என‌க்கு 50 காசு கொடுத்த‌து.


சில‌ர் எழுதிய‌ க‌விதையை வாசித்து காட்ட‌ச் சொல்வார்க‌ள்.ஒவ்வொரு வ‌ரிக்கும் பின்ன‌ர் 'அப்ப‌டினா... அப்ப‌டினா 'என‌க் கேட்க‌ நான் விள‌க்க‌ உரையையும் ஆற்றிய‌ப‌டி செல்வேன்.'இத‌தாண்டா ம‌ச்சு(எங்க‌ள் ஊரில் ம‌ச்சான் என்ப‌து ம‌ச்சியாக‌ திரிந்து பின் ம‌ச்சுவாக‌ மாறியிருந்தது)நான் எதிர்ப்பார்த்தேன்...'என‌ க‌விதையைக் க‌ண்ணில் ஒற்றிக்கொண்டு செல்வார்க‌ள்.இப்ப‌டி செல்ப‌வ‌ர்க‌ள் மிக‌க் குறைவான‌வ‌ர்க‌ள்தான்.பெரும்பாலோர் 'ம‌ச்சு...அது 'ஈ' கிளாஸ் ப‌டிக்குதுடா இதெல்லாம் புரியாதுடா...சின்னாங்கா எழுதுடா...நான் அவ‌ள‌ ல‌வ் ப‌ண்ணுற‌ன்டா...ப‌ய‌ந்து ஓடிட‌ போகுதுடா'என‌ கெஞ்சுவார்க‌ள்.



இது போன்ற‌வ‌ர்க‌ளுக்கு எழுதுவ‌து மிக‌ சுல‌ப‌ம்...

'நீ ஒரு நிலா
இனிய‌ பலா'...என்ப‌ன‌ போன்ற‌ வ‌ரிக‌ள் இருந்தால் போதுமான‌து.அவ‌ர்க‌ள் தேவை ஒன்றே ஒன்றுதான். க‌விதையில் க‌ண்டிப்பாக‌ 'ம‌யில்,நிலா,வான‌வில்...'போன்ற‌ சொற்க‌ள் இருக்க‌ வேண்டும்.இந்த‌ சொற்க‌ளுக்காக‌ அவ‌ர்க‌ள் எத்த‌னை முறை வேண்டுமானாலும் ஐம்ப‌து சென் செல‌வு செய்ய‌த் த‌யாராக‌ இருந்த‌ன‌ர்.இவ‌ர்க‌ள் மூல‌ம் என‌க்கு ஒன்றே ஒன்று புல‌ப்ப‌ட்ட‌து. 'க‌விதை எல்லோருக்கும் புரியும்ப‌டி இருக்க‌ வேண்டும்.'


நான் ஒரு ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ க‌விஞனாக‌ உருவாகிக் கொண்டிருந்தேன்.

Friday, July 17, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...11

நான் போகும் போது இள‌ஞ்செல்வ‌ன் அலுவ‌ல‌க‌த்தில் இல்லை. ப‌ள்ளி காண்டினில் அம‌ர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருந்தார். என்னைக் க‌ண்ட‌தும் "ந‌வீன் வாங்க‌" என்ற‌வ‌ர் என‌க்கும் தேனீரை காண்டினில் ப‌ணித்தார். "உங்க‌ க‌விதையெல்லாம் ப‌டிச்சேன். ந‌ல்லா இருக்கு. நீங்க அதிக‌ம் வாசிக்க‌ணும். வாசிக்கிற‌ ப‌ழ‌க்க‌ம் உண்டா?"என்றார்.
"உண்டு"என்றேன் அழுத்த‌மாக‌.
"எந்த‌க் க‌விஞ‌ர்க‌ளை வாசித்திருக்கிறீர்க‌ள்"என்றார்.
"அக்கினி,ஜாசின் தேவ‌ராஜ‌ன், பா.ராமு,வ‌ன‌ஜா"என்றேன். என்னை ஏற‌ இற‌ங்க‌ பார்த்த‌வ‌ர்
"ம‌ற்ற‌ மூவ‌ர் ச‌ரி, யார் அந்த‌ வ‌ன‌ஜா?" என்றார்.
"ந‌ய‌ன‌த்துல‌ இத‌ய‌ம் துடிக்கிற‌து ப‌குதிக்கு எழுதுவாங்க‌. பெரிய‌ க‌விஞ‌ர் சார்" என்றேன். ந‌ல்ல‌ க‌விஞ‌ர்க‌ளையெல்லாம் இள‌ஞ்செல்வ‌னுக்குத் தெரியாதது வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து. இள‌ஞ்செல்வ‌ன் கொஞ்ச‌ நேர‌ம் அமைதிகாத்தார். அவ‌ர் ப‌ள்ளியில் உள்ள‌ ஒரு ஆசிரியையை அழைத்தார். அந்த‌ ஆசிரியை 'வீரா நாவ‌ல்'எனும் புத்த‌க‌க் க‌டையைப் 'பாயா பெசாரில்'தொட‌ங்கி ந‌ட‌த்தி வ‌ந்தார்.


அங்கு ச‌ற்று வித்தியாச‌மாக‌, த‌மிழ் புத்த‌க‌ங்க‌ளை வாட‌கைக்கு விடப்ப‌ட்ட‌து. புத்த‌க‌ விலையில் 25% ம‌ட்டுமே வாட‌கை. இள‌ஞ்செல்வ‌ன் அவ‌ரிட‌ம் என்னை அறிமுக‌ம் செய்து சில‌ புத்த‌க‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளைக் கூறி,என‌க்கு அவ‌ற்றைத் த‌ரும்ப‌டி ப‌ணித்தார். அந்த‌ ஆசிரியையும் எந்த‌ குறிப்பும் எடுக்காம‌ல் த‌லையை த‌லையை ஆட்டிக்கொண்டார்.

அவ‌ர் சென்ற‌வுட‌ன் இள‌ஞ்செல்வ‌ன் மிக‌ இய‌ல்பாக‌ப் பேச‌த்தொட‌ங்கினார்."நான் கொஞ்ச‌ம் ச‌ண்ட‌கார‌ன். இந்த‌ ம‌ர‌பு க‌விஞ‌ர்க‌ளோட‌ ஆர‌ம்ப‌த்துல‌ நிரைய‌ ச‌ண்டை போட்டிருக்கேன்.அண்மையில‌ சீனி நைனா 'க‌ட‌லோர‌க் க‌விதைக‌ள்'ன்னு எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம் செஞ்ச‌ புதுக்க‌விதை திற‌னாய்வ‌ 'க‌ட‌லோர‌க் க‌ழுதைக‌ள்னு' உங்க‌ள் குர‌ல்லு கிண்ட‌ல் ப‌ண்ணியிருக்கிறாரு.ப‌டிச்சீங்க‌ளா?"என‌ வின‌வினார்.

'யார் சீனி நைனா?...லுனாஸுல‌ சீனி விக்கிற‌ ஒரே த‌மிழ் க‌டை அம்புல‌ங்க‌டை.க‌டைக்கார‌ர் பேரு அம்ப‌ல‌ம்'என‌ கேட்க‌ நினைத்தேன்.

என் ப‌திலுக்குக் காத்திருக்காம‌ல், "அவ‌ருக்கு நான் ப‌திலுக்குப் போட்டேன் 'நைனாக்க‌ள் நாக்கு வ‌ளித்த‌ மைனாக்க‌ள்'ன்னு".அத‌ன் பின்ன‌ர் இள‌ஞ்செல்வ‌னின் பேச்சுக‌ள் நீண்ட‌து.என‌க்குப் பெரும் ப‌குதி விள‌ங்க‌வில்லை.அவ‌ர் விர‌ல்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ மெல்லிய‌ ந‌டுக்க‌ம் ம‌ட்டும் என் க‌வ‌ன‌த்தை ஈர்த்த‌ப‌டி இருந்த‌து.இள‌ஞ்செல்வ‌ன் பேச்சுக‌ளில் பெரும்பாலும் அவ‌ர் ம‌ர‌புக்க‌விஞ‌ர்க‌ளோடு செய்த‌ வாக்குவாத‌ங்க‌ளும் இல‌க்கிய‌ விவாத‌ங்க‌ளுமே இருந்த‌ன‌.அவையெல்லாம் முத‌லில் சுவார‌சிய‌மாக‌வும் பின்ன‌ர் அலுப்பையும் கொடுத்த‌ன‌.அவ‌ருக்காக‌ ஏதாவ‌து செய்ய‌வேண்டும் போல் இருந்தது. அத‌ன் மூல‌ம் அவ‌ருட‌னான‌ ந‌ட்பை வ‌லுப்ப‌டுத்த‌ எண்ணினேன்.

உட‌லில் வ‌ர்ம‌ம் உள்ள‌ இர‌ண்டு ப‌குதிக‌ளையும் அவ‌ற்றைத் தீண்ட‌ வேண்டிய‌ முத்திரைக‌ளையும் அப்போது சில‌ம்ப‌ ஆசிரிய‌ர் உத‌வியால் ஓர‌ள‌வு அறிந்து வைத்திருந்தேன். இள‌ஞ்செல்வ‌ன் சொன்ன‌ப் ப‌ட்டிய‌லில் யாராவ‌து ஒருவ‌ரின் மேல் அவ‌ற்றைப் பிர‌யோகித்துப் பார்க்கும் ஆர்வ‌ம் அப்போது ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌ல் தோன்றிய‌து.


- தொட‌ரும்

Thursday, July 16, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...10

சட்டென தோன்றும் எல்லா ஆர்வமும் எப்போது வேண்டுமானாலும் என்னைவிட்டு நீங்கிவிடும் அபாயம் இன்றளவும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நான் திட்டமிட்டு ஆர்வமாகச் சந்திக்கச் செல்லும் நண்பர்கள், அவர்கள் வீட்டை அடையும் தருணத்தில் அலுப்புக்குறியவர்களாக மாறிவிடுகின்றனர். ஆர்வமாக வாங்கும் புத்தகங்கள் பல மாதங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. விரும்பிய நண்பர்கள் தொலைபேசி எண்களை எடுப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறேன். இளஞ்செல்வன் என்னுள் தோன்றிய தருணத்திலேயே அழியவும் தொடங்கினார். அவர் கண்களில் என் கவிதைகள் தட்டுப்படாதது வருத்தமாக இருந்தது.மீண்டும் அவரைச் சந்திக்கும் எண்ண‌ம் இல்லை.என‌க்கு இந்த‌க் க‌தை, க‌விதையெல்லாம் தோதுப‌டாது என‌ முடிவெடுத்துக் கொண்டேன்.


க‌விதையையெல்லாம் மூட்டை க‌ட்டிவைத்து விட்டு, இர‌ண்டு வார‌ங்க‌ள் ச‌ர‌வ‌ண‌னோடு சுற்றி அழைந்தேன். 'பாடாங் கோத்தா'வில் மோட்டார் ப‌ந்தைய‌த்தில் ஈடுப‌டுவ‌து ம‌ன‌திற்கு தெம்பை அளித்த‌து. அடுத்த‌வ‌ரின் க‌வ‌ன‌ம் ந‌ம் மீது ப‌ட‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் சில‌ருக்கு வெற்றியையும் சில‌ருக்கு இழ‌ப்புக‌ளையும் த‌ருகிற‌து. அந்த‌ எண்ண‌மே என்னை அலைக்க‌ழிக்க‌ வைத்த‌து. முடி ஸ்டைலை அடிக்க‌டி மாற்றுவ‌து,கைக‌ளை விட்டு சைக்கிள் ஓட்டுவ‌து,புது பேட்ட‌னில் கால்ச‌ட்டை தைப்ப‌து என‌த் தொட‌ங்கி மோட்டார் ப‌ந்தைய‌ம் விடுவ‌தில் வ‌ந்து நின்ற‌து.


சர‌வ‌ணனிட‌ம் அப்போது மோட்டார் இருந்த‌து. ப‌ந்தைய‌ம் விடும் அள‌வுக்கு அத‌ன் த‌ர‌ம் இல்லை.' பாடாங் கோத்தாவில்' வேறு ந‌ண்ப‌ர்க‌ள் மோட்டாருட‌ன் இருப்பார்க‌ள். ப‌ல‌ நூறு ரிங்கிட் செல‌வில் அவ‌ர்க‌ள் மோட்டார், ப‌ந்த‌ய‌த்திற்கென‌ த‌யார் செய்ய‌ப்ப‌ட்டிருக்கும். கேட்டுப் பெற்றுக்கொள்ள‌லாம். பாயா பெசார் ப‌குதியில் உள்ள‌வ‌ர்க‌ள். ஒருவ‌ருட‌ம் வெல்ல‌ஸிலி மாரிய‌ம்ம‌ன் கோயில் திருவிழாவுக்கு வ‌ந்து இர‌வோடு இர‌வாக‌ வெட்டுப்ப‌ட்டு உயிர் இழ‌க்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ளை ச‌ர‌வ‌ண‌ன் காப்பாற்றியிருந்தான்.அவ‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ஆர‌ம்ப‌த்தில் ந‌ன்றி இருந்து பின் ந‌ட்பாக‌ மாறியிருந்த‌து.



பாடாங் கோத்தா ப‌ட்ட‌ர்வோர்த்தில் உள்ள‌ ப‌குதி. ந‌ன்கு அக‌ல‌மான‌ சாலை. இர‌வில் அத‌ன் போக்குவ‌ர‌த்து குறைந்திருந்த‌தால் மோட்டார் ப‌ந்தைய‌ம் விடும் இட‌மாக‌ கால‌ப்போக்கில் மாறிருந்தது. அதை சில‌ர் ச‌ட்ட‌விரோத‌ மோட்டார் ப‌ந்தைய‌ம் என்ற‌ன‌ர். ச‌ட்ட‌ம் ப‌ற்றியெல்லாம் அப்போது எங்க‌ளுக்கு அவ்வ‌ள‌வாக‌த் தெரியாத‌தால் அது ப‌ற்றியெல்லாம் க‌வ‌லை ப‌ட‌வில்லை. மேலும் ஏதாவ‌து ஒன்றை மீறுவ‌தை ம‌ட்டுமே அப்போதைய‌ வாழ்வின் முக்கிய‌மான‌ க‌டைமையாக‌ச் செய்து வ‌ந்தோம். இப்போதும்.


என‌க்கு ஒரு ப‌ந்தைய‌ம் தேவைப்ப‌ட்ட‌து. ப‌ந்த‌ய‌த்தின் மூல‌ம் ம‌ன‌ம் அட‌ங்கிய‌து. ப‌ந்தைய‌த்தின் மூல‌ம் ஆண‌வ‌த்துக்கு ஆகார‌ம் கிடைத்த‌து. ம‌ன‌துட‌ன் போட்டியிட‌ முடிந்த‌து. எழுத்தை ...க‌விதையைச் சோம்பேரிக‌ளுக்கான‌ சாத‌ன‌மாக‌ ந‌கைக்க‌ முடிந்த‌து. க‌விதை எழுதுகையில் வ‌ன்முறை இல்லை. இட‌ரினால் உயிர் இழ‌ப்போம் என்ற‌ அபாய‌ம் இல்லை. இர‌த்த‌ம் இல்லை. எதிரி இல்லை.


பாடாங் கோத்தாவிலிருந்து ப‌க்க‌ம்தான் 'ப‌ந்தாய் பெர்ஸே'. திருந‌ங்கைக‌ளின் சாம்ராஜிய‌ம் நிர‌ம்பிய‌ இட‌ம். ப‌ந்தைய‌த்தில் தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும் (பெரும்பாலும் தோல்விதான்) இறுதியில் அங்குதான் த‌ஞ்ச‌ம் அடைவோம். அங்கு ச‌ர‌வண‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் உண்டு. அவ‌னுக்காக‌ அவ‌ர்க‌ள் செல‌வு செய்ய‌ த‌யாராக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளோடு பேசிக்கொண்டிருக்கும் க‌ண‌ங்க‌ள் இன்ப‌மான‌து. சீண்ட‌ல்க‌ளிக‌ளிலும் கிண்ட‌ல்க‌ளிலும் நேர‌ம் போவ‌து தெரியாது. அவ‌ர்க‌ள் காட்டும் பொய்யான‌ கோப‌மும் காம‌மும் சோக‌மும் இர‌சிக்கும்ப‌டியாக‌ இருந்த‌ன‌. ச‌ர‌வ‌ண‌ன் அவ‌ர்க‌ளிட‌ம் ப‌கிர‌ங்க‌மாக‌வே 'ஓவ‌ரா ந‌டிக்காதிங்க‌டி'என்பான். ஆப‌த்து இல்லாவிட்டால் பொய்கூட‌ சுவார‌சிய‌மிக்க‌தாக‌வே என‌க்குப் ப‌டும்.

நாட்க‌ளை க‌ண‌க்கில் எடுக்காம‌லேயே எந்த‌வித‌ ஆர்வ‌மும் செலுத்தாம‌லேயே ச‌ரியாக‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் இள‌ஞ்செல்வ‌னின் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.மீண்டும் ஒருமுறை போய் பார்த்தால் என்ன‌ என்று தோன்றிய‌து.


- தொட‌ரும்

Wednesday, July 15, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...9

என் உயிர் எழுத்து...



இர‌ண்டு மாத‌ங்க‌ளில் 5 க‌விதைக‌ள் 'ம‌க்க‌ள் ஓசை' நாளித‌ழில் பிர‌சுர‌ம் ஆகியிருந்த‌து.ஓர‌ள‌வு ந‌ண்ப‌ர்க‌ள் ம‌த்தியில் நானும் என்னால் ம‌க்க‌ள் ஓசை ப‌த்திரிகையும் பிர‌ப‌ல‌ம் ஆன‌து. த‌மிழ் ப‌டிக்க‌த் தெரிந்த‌ அனைவ‌ரும் 'ம‌க்க‌ள் ஓசை' ப‌டிப்பார்க‌ள் என‌ முத‌லில் த‌வ‌றாக‌ ந‌ம்பியிருந்தேன்.லுனாஸ் ட‌வுனில் அப்போது ஒரே ஒரு ஒட்டுக்க‌டையில் த‌மிழ்ப் ப‌த்திரிகைக‌ள் விற்றுக்கொண்டிருந்தார்க‌ள்.அங்கு மொத்த‌மே வ‌ருவ‌து 5 'ம‌க்க‌ள் ஓசைக‌ள்'தான்.ஒன்றை நான் வாங்கிவிடுவேன்.மீத‌ம் உள்ள‌ நான்கை வாங்குக் அதிஷ்ட‌சாளிக‌ளை தேடியும் கிடைக்க‌வில்லை.


என் க‌வித‌யைப் ப‌ற்றி பேசுவ‌த‌ற்கோ அத‌ன் 'உன்ன‌த‌ங்க‌ளை' என்னிட‌ம் கேட்டு அறிந்து கொள்ள‌வோ ந‌ண்ப‌ர்க‌ள் எவ‌ரும் இல்லை.அப்போதுதான் எழுத்தாள‌ர் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் நான் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌‌ 'வெல்ல‌ஸிலி த‌மிழ்ப்ப‌ள்ளிக்குத்' த‌லைமை ஆசிரிய‌ராக‌ வ‌ந்துள்ளார் என‌ கேள்விப்ப‌ட்டேன்.இள‌ஞ்செல்வ‌ன் எழுத்தாள‌ர் என்ப‌தோ அவ‌ர் என்ன‌ எழுதியுள்ளார் என்ப‌து ப‌ற்றியோ அப்போது ஒன்றுமே என‌க்குத்தெரியாது. அவ‌ர் நிச்ச‌ய‌ம் 'ம‌க்க‌ள் ஓசை'வாங்கியிருப்பார் என‌ ம‌ட்டும் ந‌ம்பினேன்.அதிலும் 'ம‌.ந‌வீன்,லூனாஸ்' என‌ பிர‌சுர‌மாகியிருக்கும் என‌து க‌விதைக‌ளைப் ப‌டித்து 'யார் அந்த‌ நவீன் அதுவும் இந்த‌ ஊரில்...' என‌த் தேட‌த் தொட‌ங்கியிருக்க‌வும் கூடும் என‌ ஆழ் ம‌ன‌ம் அழுத்த‌மாக‌ ந‌ம்பிய‌து.அவ‌ரைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ர் துளிர்விட‌ தொட‌ங்கிய‌ போது ஒரு நாள் சைக்கிளை எடுத்துக்கொண்டு புற‌‌ப்ப‌ட்டேன்.



வெல்ல‌ஸ்லி த‌மிழ்ப்ப‌ள்ளிக்கும் எங்க‌ள் வீட்டுக்குமான‌ இடைவெளி ஐநூறு மீட்ட‌ர்தான். அது ஒரு சாயுங்கால‌ வேளை.ப‌ள்ளியில் திரு.ராமு மாணிக்க‌ம் (எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் இய‌ற்பெய‌ர்)த‌னியே அம‌ர்ந்து கோப்புக‌ளைச் ச‌ரி பார்த்துக்கொண்டிருந்தார்.யார் அனும‌தியும் இல்லாம‌ல் அலுவ‌ல‌க‌த்தைக் க‌ட‌ந்து அவ‌ர் அறைக்க‌த‌வைத் த‌ட்டினேன்.ஏறிட்டு கேள்விக்குறியோடு பார்த்தார்.என்னை ஓர் எழுத்தாள‌னாக‌ அறிமுக‌ம் செய்து கொண்ட‌போது கேள்விகுறிக‌ள் உட‌னே விள‌கி ஆச்ச‌ரிய‌க்குறி தொற்றிக்கொண்ட‌ன‌.அத‌ற்கு மேல் ஒன்றும் பேசாம‌ல் என் க‌விதைக‌ளைக் காட்டினேன்.


ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் க‌விதைக‌ளைப் புர‌ட்டினார்.என்னை ந‌ம்பிக்கையோடு ஏறிட்ட‌வ‌ர் 'என் ம‌க‌ளுக்குத் திரும‌ண‌ ஏற்பாடுக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌...ரொம்ப‌ பிஸியா இருக்கேன்...நீங்க‌ இர‌ண்டு வார‌ம் க‌ழிச்சி வ‌ந்து பாருங்க‌...ம‌ற‌ந்துடாதிங்க‌...என்னை உங்க‌ள் க‌விதைக‌ள் க‌வ‌ராட்டினா வ‌ர‌ வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்...உங்க‌ளால் க‌விதை எழுத‌ முடியும்...க‌ண்டிப்பா வ‌ர‌ணும்.'என் க‌விதைக‌ள் இள‌ஞ்செல்வ‌ன் கையில் இருந்த‌ன‌.'க‌விதைக‌ள் ப‌த்திர‌ம் சார்'என்றேன்.அன்போடு சிரித்தார்.த‌ட்டிக்கொடுத்தார்.


'உங்க‌ளால் க‌விதை எழுத‌ முடியும்' என‌ அவ‌ர் சொன்ன‌து ஆண‌வ‌த்திற்கு உறுத்த‌லாக‌ இருந்த‌து.அதிலும் அவ‌ர் என் க‌விதைக‌ளைப் ப‌டித்த‌தில்லை என்ப‌து மேலும் அதிர்ச்சியையும் ஏமாற்ற‌த்தையும் கொடுத்த‌து. நான் அவ‌ரிட‌ம் க‌விதை க‌ற்க‌ போக‌வில்லை.நான் எதிர்ப்பார்த்த‌து அங்கீகார‌ம்.'ரொம்ப‌ ந‌ல்லா இருக்கே உன் க‌விதை'என்ற‌ சில‌ சொற்க‌ள்.அவ‌ர் யார் என‌க்கு க‌விதை இனிதான் வ‌ரும் என்று சொல்ல‌ ...வெறுப்பாக‌ இருந்தது.வீட்டிற்குச் சென்ற‌தும் குவிந்து கிட‌ந்த‌ ந‌ய‌ன‌ம்,வான‌ம்பாடி,ம‌க்க‌ள் ஓசை, ஞாயிறு இத‌ழ்க‌ள் என‌ ஒன்றுவிடாம‌ல் புர‌ட்டினேன்.ஒன்றிலும் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் என்ற‌ பெய‌ர் கொண்ட‌ ப‌டைப்புக‌ள் ஒன்று கூட‌ இட‌ம்பெற‌வில்லை.த‌ர‌ம் இல்லாத‌தால் அவ‌ர் ப‌டைப்புக‌ள் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்டிருக்க‌க் கூடும் என‌த் தோன்றிய‌து.ம‌ன‌ பார‌ம் கொஞ்ச‌ம் குறைந்து நிம்ம‌தியாக‌ இருந்த‌து.'நிச்ச‌ய‌ம் ந‌ம்மைவிட‌ இள‌ஞ்செல்வ‌ன் பெரிய‌ எழுத்தாள‌ர் இல்லை' என‌ முடிவெடுத்துக்கொண்டேன்.


- தொட‌ரும்

Tuesday, July 14, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...8


க‌விதைக‌ளுட‌னே வாழ்ந்த‌ கால‌ம் அது.க‌ண்ணில் அக‌ப்ப‌டும் அனைத்தையும் க‌விதையாக்கிவிட‌ ம‌ன‌ம் துடித்த‌து.முத‌லில் என்னை அந்நிய‌னாக‌ப் பார்த்த‌ ச‌ர‌வ‌ண‌ன் பின்ன‌ர் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஏற்றுக்கொண்டான். நாங்க‌ள் இருவ‌ருமாக‌ச் சேர்ந்து மொழி ஆராய்ச்சியில் இற‌ங்கினோம்.அதுவ‌ரை பிர‌யோக‌த்தில் இருந்த‌ அத்த‌னைக் கெட்ட‌ வார்த்தைக‌ளும் எங்க‌ளுக்கு அப‌த்த‌மாக‌ப் ப‌ட்ட‌து. அத்த‌னையும் வெறும் உட‌ல் உறுப்பின் பெய‌ர்க‌ள் அல்ல‌து பிற‌ப்பு குறித்தான‌ எள்ள‌ல்க‌ள்.கொஞ்ச‌ம் அதிக‌ம் போனால் ந‌ம‌க்கு நெருங்கிய‌ உற‌வின் உட‌ல் உறுப்புக‌ள்.மொத்த‌மே இவ்வ‌ள‌வுதான் கெட்ட‌வார்த்தை. இவ‌ற்றிற்கு கெட்ட‌வார்த்தை என‌ப் பெய‌ர் வைத்த‌தே த‌வ‌று என‌ப் ப‌ட்ட‌து. த‌மிழில்தான் இந்த‌ க‌தி என்றால் சீன‌,ம‌லாய் மொழியிலும் இதே நிலைதான். கெட்ட‌ வார்த‌தைக‌ள் என்ப‌தே ந‌ம்மை ஏமாற்றும் க‌ற்ப‌னை என‌ புரிந்து போன‌து. என‌வே நாங்க‌ளே எங்க‌ளுக்கான‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை உருவாக்குவ‌து என‌ முடிவெடுத்தோம்.


இந்த‌ விஷ‌ய‌த்தில் ச‌ர‌வ‌ண‌னுக்கு நான் தான் குரு. அத‌ற்கு முன்பு கெட்ட‌வார்த்தைக‌ளாக‌ அங்கீகார‌ம் பெற்றிருந்த‌ சில‌ சொற்க‌ளைச் சேர்த்தோம்.அவ‌ற்றோடு இய‌ல்பான‌ இன்னும் பிற‌ சொற்க‌ளை புகுத்தி மூன்று நான்கு சொற்றொட‌ரில் ஒரு சில‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை உருவாக்கினோம்.அவை ஒரு காட்சியைக் கொடுத்தன‌. ஒரு க‌விதை போல‌ எதிர்பாராத‌ அதிர்ச்சியைக் கொடுத்த‌ன‌. உருப்புக‌ளின் செய‌ல்பாடுக‌ளில் முர‌ண்க‌ளை புகுத்திப் பார்ப்ப‌து எங்களின் கெட்ட‌ வார்த்தைத் த‌த்துவ‌ங்க‌ளில் முத‌ன்மையான‌து.எந்த‌க் கார‌ண‌த்தைக் கொண்டும் நாங்க‌ள் த‌யாரித்த‌ கெட்ட‌வார்த்தைக‌ளில் யாதொரு உற‌வையும் குறிப்பிடாம‌ல் பார்த்துக்கொண்டோம்.த‌வ‌று செய்த‌வ‌னைத் திட்டும் போது அது அவ‌ர்க‌ள் சார்ந்த‌ யாரையும் குறிப்பிட‌க்கூடாது என்ப‌து ச‌ர‌வ‌ண‌னின் கோட்பாடு.உல‌க‌ம் போற்ற‌ப்போகும் புதிய‌ இல‌க்கிய‌ வ‌டிவை உருவாக்கும் தீவிர‌த்தில்தான் நானும் ச‌ர‌வ‌ண‌னும் செய‌ல்ப‌ட்டோம்.


நாங்க‌ள் உருவாங்கிய‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை ம‌ன‌ன‌ம் செய்து கொண்டோம்.த‌வ‌றுதலாக‌ உச்ச‌ரித்தால் அத‌ன் காத்திர‌ம் குறைந்து போக‌லாம். ந‌ண்ப‌ர்க‌ளிடையே பேசும்போது சாத‌ர‌ண‌மாக‌வே கொச்சையில் திட்டிக்கொள்ளும் வ‌ழ‌க்க‌ம் அப்போது இருந்த‌து. எங்க‌ள் கெட்ட‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்தும் ச‌ரியான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்திற்குக் காத்திருந்தோம்.ப‌டியாத‌ சுருட்டை முடி கொண்ட‌வ‌னான‌தால் ச‌ர‌வ‌ண‌னை நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் 'ஒட்ட‌டை' என்றே அழைப்ப‌ர்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அழைக்க‌த் துணிவில்லை.அன்று பேச்சினூடே ஒருவ‌ன் இய‌ல்பாக‌ ச‌ர‌வ‌ண‌னை 'ஒட்ட‌டை' என‌ அழைக்க‌த் தொட‌ங்கினான். கிடைத்த‌து ச‌ந்த‌ர்ப்ப‌ம்...சேமித்து வைத்திருந்த‌ அத்த‌னையையும் அவ‌ன் ஒருவ‌னுக்கே செல‌வ‌ழித்தோம்.

ப‌லியான‌வ‌ன் விழி பிதுங்கி நின்றான். எங்க‌ள் கெட்ட‌ வார்த்தைக்கு நிக‌ராக‌ அவ‌னிட‌ம் ஒரு சொல் கூட‌ அக‌ப்ப‌ட‌வில்லை.அவ‌னுக்கு எங்க‌ள் கெட்ட‌ வார்த்தையைப் புரிந்து கொள்ள‌வே நிரைய‌ அவ‌காச‌ம் தேவைப்ப‌ட்ட‌து. எங்க‌ள் சொற்க‌ளின் வ‌ன்மையை க‌ற்ப‌னை செய்த‌வ‌ன் க‌ண்க‌ல‌ங்க‌த் தொட‌ங்கினான்.


வெற்றி...வெற்றி...எங்க‌ள் முத‌ல் முய‌ற்சி வெற்றிய‌டைந்த‌து.ச‌ர‌வ‌ண‌ன் முத‌ன்முத‌லாக‌ என்னைக் க‌விஞ‌னாக‌ ஏற்றுக்கொண்டான்.அவ‌ன் க‌ணிப்பில் க‌விஞ‌னுக்கான‌ த‌குதி கெட்ட‌ வார்த்தையில் இருந்திருக்கிற‌து.

- தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி‍...7

என்ன‌தான் ஹீரோ ஹிச‌மெல்லாம் செய்தாலும் ப‌ள்ளியைப் பொருத்த‌வ‌ரை ப‌ந்து விளையாடுப‌வ‌ர்க‌ள்தான் உண்மையான‌ க‌தாநாய‌க‌ர்க‌ள். ப‌ந்து விளையாடுப‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ள‌வு தோழிக‌ள் இருந்த‌ன‌ர். என‌க்கு ப‌ந்தை பார்த்தாலே அல‌ர்ஜி.இன்றுவ‌ரை எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ஒரு ப‌ந்துகூட‌ நான் உதைத்துப் ப‌ற‌ந்த‌தே இல்லை.காற்ப‌ந்து விளையாட்டு என் வாழ்வில் விளையாடிய‌ விளையாட்டுக‌ளை ம‌ட்டும் ஒரு த‌னி நாவ‌லாக‌ எழுத‌லாம்.ச‌ர‌வ‌ண‌ன் என்னைப்போல் இல்லை.ஆனாலும் என‌க்காக‌ அவ‌னும் விளையாட‌ப்போவ‌தை த‌விர்த்தே வ‌ந்தான். எங்க‌ள் இருவ‌ருக்கும் பூப்ப‌ந்து ந‌ன்றாக‌ வ‌ச‌ப்ப‌ட்ட‌து.பின்னாலில் அது பெண்க‌ளுக்கான‌ விளையாட்டு என‌ நாங்க‌ளே முடிவெடுத்து குறைத்துக்கொண்டோம்.பெண்க‌ளைக் க‌வ‌ர்வ‌தில் ச‌ர‌வ‌ண‌னுக்குப் பிர‌ச்ச‌னை இல்லை.அவ‌ன் அழ‌க‌ன்.எளிய‌ உடையில் கூட‌ க‌வ‌ரும் ப‌டி தெரிவான்.ஆனால் நான்...


க‌ருத்த‌ உருவ‌ம்; பேசினால் நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்கும்; மெலிந்து கிட‌ப்பேன்.எந்த‌ பெண் பிள்ளைக‌ளும் நிச்ச‌ய‌ம் என்னை ஏறெடுத்தும் பார்க்க‌மாட்டார்க‌ள்.ஏதாவ‌து செய்தேயாக‌ வேண்டும்.இருக்க‌வே இருக்கிற‌து,என‌க்குத் தெரிந்த‌ கொஞ்ச‌ம் த‌மிழும்...க‌விதையும்.க‌விதை எழுத‌ இட‌ம் வேண்டுமே.ஏதோ ஒரு த‌மிழ்ப் ப‌ட‌த்தில் நிழ‌ல்க‌ள் ர‌வி ந‌தியோர‌ம் அம‌ர்ந்து வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு க‌விதை எழுதுவார்.பின்ன‌ர் த‌ன் க‌ர‌ க‌ர‌த்த‌க் குர‌லில் வாசிப்பார்.ஒரு ப‌ழைய‌ வெள்ளை ஜிப்பா இருந்த‌து...ந‌திக்கு நாயாய் பேயாய் அலைந்து இறுதியில் 'தாமான் கீஜாங்'கில் இருந்த‌ புத்த‌ர் கோயிலைக் க‌ண்டுபிடித்தேன்.அந்த‌க் கோயில் ந‌தியோர‌ம் அமைந்திருந்த‌து.இன்னும் சொல்வ‌தானால் ஒரு ந‌தி வ‌லைவின் இட‌வெளியில் இருந்தது.கோயிலை சுற்றிலும் ஆல‌ ம‌ர‌ம் விழுதுக‌ள் விட்டிருந்த‌து.பிற‌ந்த‌து முத‌ல் க‌விதை...

0 காத‌ல் தோல்வி
ஆல‌ம‌ர‌ம்
தாடி வ‌ள‌ர்க்கிற‌து.


அன்றைக்கு ம‌ட்டும் ஆயிர‌ம் முறையாவ‌து அந்த‌க் க‌விதையை வாசித்துப் பார்த்திருப்பேன்.நான் எழுதிய‌ க‌விதையே வெவ்வேறு அர்த்த‌ங்க‌ளை என‌க்குத் த‌ர‌த் தொட‌ங்கிய‌து.யாரிட‌மாவ‌து வாசித்துக் காட்ட‌ வேண்டும்.ச‌ர‌வ‌ண‌னிட‌ம் சொன்னால் ந‌கைப்பான்.ப‌த்திரிகைக்கு அனுப்புவ‌து என‌ முடிவு செய்தேன்.இந்த‌ ஒரு க‌விதையை போட‌மாட்டார்க‌ள்.மூளையை க‌ச‌க்கிப் பிழிந்து மேலும் நான்கு க‌விதைக‌ள் எழுதினேன்.

0 பிண‌ங்க‌ள்
புத‌க்க‌ப்ப‌டுகின்ற‌ன‌
அசைவ‌ன் வ‌யிற்றில்...

0 க‌ர‌ண்ட் த‌டையில் க‌வ‌லை
க‌ண்ணீர் வ‌டிக்கிற‌து
மெழுகுவ‌ர்த்தி...


இப்ப‌டி ஒரு க‌விதை பிர‌சுர‌மாக‌ மேலும் நான்கு க‌விதைக‌ளைச் சேர்த்து எழுதி, உட‌ன் க‌விதையைவிட‌ நீள‌மாக‌ அறிமுக‌க் க‌டித‌மெல்லாம் எழுதி ம‌க்க‌ள் ஓசை ப‌த்திரிகைக்கு (அப்போது அக்கினியால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ வார‌ப்ப‌த்திரிகை.ஒவ்வொரு வார‌மும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் 15 முத‌ல் 20 க‌விதைக‌ளாவ‌து பிர‌சுரித்தார்க‌ள்.)அனுப்பி வைத்தேன்.அனுப்பிய‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் க‌விதை எந்த‌ மாற்ற‌மும் இல்லாம‌ல் பிர‌சுர‌மான‌து.ஒரு சுப‌யோக‌ சுப‌தின‌த்தில் நான் க‌விஞ‌னாகி விட்டிருந்தேன்...


- தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...6


இன்று நினைக்கும் போது எதுவும் நியாம‌ம் இல்லாத‌து போல‌ தோற்ற‌ம் அளிக்கிற‌து. ஆனால் பெரும் பான்மை ம‌க்க‌ளால் தொட‌ர்ந்து அடிமை ப‌ட்டு கிட‌க்கும் நாங்க‌ள் எங்க‌ளுக்கான‌ சுத‌ந்திர‌த்தை அகிம்சை வ‌ழி தேடி பெரும் அவ‌காச‌மும் வாய்ப்பும் அப்போது குறைவு என்ப‌து ம‌ட்டுமே உண்மை.சாதியின் பெய‌ரால், இன‌த்தின் பெய‌ரால், ம‌த‌த்தின் பெய‌ரால் ஒவ்வொரு நாளும் கீழாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌டும் எம் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு இன்றுவ‌ரை இடைநிலைப்ப‌ள்ளிக‌ளில் எந்த ‌வ‌கையான‌ பாதுகாப்பு வேலிக‌ளும் இல்லை என்ப‌தே நித‌ர்ச‌ன‌ம்.இன்றைய‌ இய‌ந்திர‌ வாழ்வில் 'அடுத்த‌வ‌னுக்கு என்ன‌ ந‌ட‌ந்தால் என்ன‌?' என‌ வீட்டைப்பூட்டிக்கொண்டு தொலைக்காட்சியில் ம‌ட்டுமே உல‌கைப் பார்க்கும் ஒரு ச‌மூக‌ம் இடைநிலை ப‌ள்ளிமுத‌ல் ப‌ல்கலைக்க‌ழ‌க‌ம் வ‌ரை இருக்க‌வே செய்கிற‌து.அவ‌ர்க‌ளால் அர‌சாங்க‌த்திற்கு உய‌ர்த‌ர‌ கூலிக‌ளாக‌ இருக்க‌ ம‌ட்டுமே முடியும்.அப்படி இருந்துவிட்டுப்போனாலும் பாத‌க‌மில்லை.ஆனால் இந்த‌க் கூட்ட‌ம்தான் புல்லுறுவிகளாக‌வும் எட்ட‌ப்ப‌ர்க‌ளாக‌வும் மாற‌வும் செய்கிற‌து.வேறு வ‌ழியே இல்லை 'க‌ளை' பிடுங்க‌த்தான் வேண்டியுள்ள‌து.


அதிகார‌த்தை எதிர்ப்ப‌து எழுத்தாள‌னின் முத‌ல் ப‌ணி என‌ இன்று ஒவ்வொரு திருப்ப‌த்திலும் நினைத்துக்கொள்கிறேன்.அத‌ற்கான‌ வேரை இடைநிலைப்ப‌ள்ளியில் என‌க்கு ஆழ‌ ஊன்றிய‌வ‌ன் ச‌ர‌வ‌ண‌ன்.அதிகார‌த்தை நோக்கி உண்மையின் குர‌லை அத‌ற்கு ம‌றுவ‌ருட‌மும் நாங்க‌ள் இன்னும் ஆழ‌மாக‌க் கொடுத்தோம். எங்க‌ளின்................இடைநிலைப்ப‌ள்ளியில் இன்றும் அது நினைவில் கொள்ள‌ப்ப‌டுகிற‌து.ஒவ்வொரு ஆண்டும் ந‌ன்னெறி க‌ழ‌க‌த்தால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌டும் ஒரு கூட்ட‌த்தில் எங்க‌ள் ப‌ட‌மே ஒளிவ‌ட்டில் ஏற்ற‌ப்ப‌டுகிற‌து.அதை நானும் இதுவ‌ரைப் பார்த்ததில்லை.கைக‌ளை ஓங்கி கூட்ட‌மாக‌ கோஷ‌ம் போட்டு, வ‌குப்ப‌றைக்குள் நுழையாம‌ல் ம‌ரிய‌ல் செய்த‌ எங்க‌ளை பார்த்த‌ இளைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இப்ப‌டி கூறின‌ர்"அண்ணா ஒரு வேளை உங்க‌ள புடிச்சி உள்ளுக்கு வ‌ச்சிருந்தாங்க‌ண்ணா?"


இது போன்ற‌ கேள்விக‌ள் எழாத‌ வ‌ய‌து அது.சாலையில் அதிக‌ ப‌ட்ச‌ம் வேக‌மாய் மோட்டார் ஓட்டுவ‌து ப‌ற்றியும் மோட்டார் ப‌ந்தைய‌ம் இடுவ‌து ப‌ற்றியும் ஆயுத‌ங்க‌ளை எதிர்கொண்டு ஓடுவ‌து ப‌ற்றியும் கேள்வியே இல்லாத‌ வ‌ய‌து.நிமிட‌த்திற்கு நிமிட‌ம் வாழ்ந்த‌ வ‌ய‌து.வேற்று இன‌த்தானோடு சண்டையிட்ட‌ ஒரு ச‌க‌ ந‌ண்ப‌னை ம‌ட்டும் எந்த‌ முன் எச்ச‌ரிக்கையும் இல்லாம‌ல் நிர்வாக‌ம் ப‌ள்ளியைவிட்டு நீக்கினால் வ‌ன்முறையில் ஈடுப‌டுவ‌து த‌விர‌ வேறென்ன‌ செய்ய‌ முடியும்.அதிக‌ ப‌ட்ச‌ம் வ‌குப்ப‌றை க‌ண்ணாடிக‌ளும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் 'ம‌ஞ்ச‌ள்' முக‌ங்க‌ளும் உடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.மூன்றாவ‌து நாளில் ந‌ண்ப‌ன் ப‌ள்ளியில் இருந்தான்.



சில‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு பொறுமை தோதுப‌டாது என‌ அப்போதே பிடிப‌ட்ட‌து. எங்க‌ள் குழு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ பிள‌வு ப‌ட்டுக்கொண்டிருந்த‌து. மூன்றாம் ப‌டிவ‌த்திற்குப்பின் சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் வேறு ப‌ள்ளிக‌ளுக்கு மாறின‌ர்.சில‌ர் ப‌ள்ளியை விட்டு நின்ற‌ன‌ர்.சில‌ர் போலி டெக்நிக் ப‌டிக்க‌ச்சென்ற‌ன‌ர்.கூட்ட‌ம் குறைந்த‌து.ஆனாலும் ப‌ழைய‌ ப‌ய‌ம் அனைவ‌ருக்கும் இருக்க‌வே செய்த‌து.நான்காம் ப‌டிவ‌த்தை ஹ‌னிமூன் வ‌ருட‌ம் என்றார்க‌ள் ஆசிரிய‌ர்க‌ள். ப‌ரீட்சைக‌ள் குறைவு.அடுத்த‌ வ‌ருட‌ம்தான் எஸ்.பி.எம்.க‌ல்வியில் மிக‌வும் பின் த‌ங்கி இருந்தேன்.என்னைவிட‌ ச‌ர‌வ‌ண‌ன் மோச‌ம்.


என‌க்கு இள‌ஞ்செல்வ‌ன் ஞாப‌க‌ம் அடிக்க‌டி வ‌ர‌த்தொட‌ங்கிய‌ கால‌ம் அது...



- தொட‌ரும்.

Sunday, July 12, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி‍‍‍...5


எங்க‌ள் ஊர் போலிசுக்குப் பொதுவாக‌வே நாங்க‌ள் ப‌ய‌ப்ப‌டுவ‌தில்லை. ச‌ர‌வ‌ண‌னின் அப்பா முன்னால் அர‌சாங்க‌ ஊழிய‌ரான‌தினாலும் காவ‌ல்துரையில் உய‌ர்ம‌ட்ட‌ அதிகாரிக‌ள் வ‌ரை அவ‌ருக்கு ந‌ண்ப‌ர்க‌ள் என்ப‌தாலும் அன்று சில‌ எச்ச‌ரிக்கைக‌ளோடு விடுவிக்க‌ப்ப‌ட்டோம். அதுவ‌ரை கைக‌ள் இர‌ண்டையும் பின்புற‌மாக‌க் க‌ட்டி வெற்றுட‌ம்பில் வெயிலில் ம‌ண்டியிட்டு நிற்ப‌தை ப‌ள்ளியே வேடிக்கைப் பார்த்த‌து. ச‌ர‌வ‌ண‌ன் கூறினான் 'இதுதான்டா ச‌ம‌ய‌ம் உட‌ம்ப‌ ந‌ல்லா முறுக்கிக் காட்டு...ச‌ர‌க்குங்க‌ பாக்குதுல்ல‌...'.

ச‌ர‌வ‌ண‌னுக்குக் சுருட்டை முடி. எப்ப‌டி சீவினாலும் பெரிதாக‌ ஒன்றும் மாற்ற‌ம் காணாது. என‌க்குதான் ப‌ர‌ட்டை. முன்புர‌ முடிக‌ள் முக‌த்தை முழுதுமாக‌ ம‌றைக்கும் ப‌டியான‌ நீள‌ம். அனைவ‌ரையும் வ‌குப்புக்குள் அனுப்பும் போது என்னையும் ச‌ர‌வ‌ண‌னையும் ம‌ட்டும் க‌ட்டொழுங்கு ஆசிரிய‌ர் உள்ளே அழைத்தார். முன்புற‌ம் நீண்டிருந்த‌ முடியைக் க‌ற்றையாக‌ப் பிடித்தார்.என்னிலிருந்து பிரித்துக் குப்பையில் வீசினார். ச‌ர‌வ‌ண‌னுக்கு ஒரு அரை விழுந்த‌து. இத‌ற்கு மூல‌க்கார‌ண‌ம் நாங்க‌ள்தான் என‌ ஏதோ ஒரு ந‌ரி காட்டிக்கொடுத்திருக்கிற‌து.

காட்டிக்கொடுப்ப‌து போட்டுக்கொடுப்ப‌து ஈன‌ப்பிர‌விக‌ளின் செய‌ல் என‌ சர‌வ‌ண‌ன் க‌ர்ஜித்தான். எங்க‌ள் ம‌த்தியில் ஒரு க‌ருப்பு ஆடு இருப்ப‌தை அறிந்து கொண்டோம். அடிப்ப‌ட்ட‌ வேற்று இன‌த்து மாண‌வ‌ர்க‌ளுக்கு எப்போதும் ஒரு ப‌ழ‌க்க‌ம் உண்டு. அவ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் ச‌ரண‌டைய‌ மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குப் பிடித்த‌தெல்லாம் அடிக்கு அடிதான். போலிஸில் கூட‌ அவ‌ர்க‌ள் வாய் திற‌க்க‌வில்லை. என்னிட‌ம் குத்துப்ப‌ட்டு முக‌ம் வீங்கிய‌வ‌ன் ம‌ட்டும் அவ்வ‌ப்போது முறைத்த‌ப‌டி இருந்தான். அத‌ற்கு அர்த்த‌ம் என் முக‌த்தையும் அது போல் வீங்க‌வைப்ப‌துதான். அவ‌ன் அடித்தால் என் முக‌ம் வீங்காது. முக‌மே இல்லாம‌ல் போகும் அபாய‌ம் ம‌ட்டும் உண்டு என்ப‌தால் அவ‌னை நேர்க்கொண்டு பார்க்காம‌ல் இருந்தேன். இங்குக் காட்டிக்கொடுத்த‌து ஒரு த‌மிழ‌ன்.

நானும் ச‌ர‌வ‌ண‌னும் த‌னியாக‌ அம‌ர்ந்து ச‌ந்தேக‌த்திற்குறிய‌ ந‌ப‌ர்க‌ளை ஒரு ப‌ட்டிய‌ல் போட்டோம். 'உன்னை அவ‌ன் என்னா சொன்னான் தெரியுமா...','அன்னிக்கு அவ‌ன் உம்மேல‌ உள்ள‌ க‌டுப்ப‌ எப்ப‌டி காட்டுனான் தெரியுமா?' என‌ அடிக்க‌டி சொற்க‌ளைப் பிர‌யோகிக்கும் சில‌ குத‌ப்பிற‌ப்புக‌ளில் மூன்று பேரைக் க‌ண்ட‌டைந்தோம். இர‌ண்டே நாள் குற்றவாளி பிடிப்ப‌ட்டான். விசார‌ணைத் தொட‌ங்கிய‌து. ச‌ர‌வ‌ண‌ன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதைக்கு என‌க்குத்தெரிந்த‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ த‌மிழை வைத்துக்கொண்டு "போன‌து எம் ம‌யிரு இல்ல‌டா...உயிரு"என‌ வ‌ச‌ன‌மெல்லாம் பேசினேன்.


இம்முறை ச‌ர‌வ‌ண‌ன் முத‌ல் அடியில் ஆர‌ம்பித்தான். நான் தொட‌ர்ந்தேன். தோட்ட‌த்துக்கும் செம்மண்சாலைக்கும் இடையில் பொருத்த‌ப்ப‌ட்டிருக்கும் ர‌ம்ப‌ம் போன்ற‌ இரும்பு பால‌த்தில் அவ‌ன் த‌லையை வைத்து இழுத்தோம். அவ‌ன் த‌லை முடி பிய்த்துக்கொண்டு வ‌ந்த‌து. ச‌ர‌வ‌ண‌ன் கூறினான்...'ம‌யிருக்கு ம‌யிருடா'


- தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...4


ஜிம் செட் ஒன்றை அப்பா வாங்கி வீட்டில் போட்ட‌தோடு ந‌ண்ப‌ர்க‌ள் குழு வீட்டிற்கு அடிக்க‌டி வ‌ர‌த்தொட‌ங்கிய‌து.உட‌ற்க‌ட்டின்மீது அதிக‌ம் ஆர்வ‌ம் கொண்டிருந்த‌ கால‌ம் அது.ப‌ள்ளிவிட்டு வ‌ந்த‌வுட‌ன் நானும் ச‌ர‌வ‌ண‌னும் உட‌ற்ப‌யிற்சி செய்ய‌த் தொட‌ங்கிவிவோம்.உட‌ற்ப‌யிற்சி செய்வ‌தில் ச‌ர‌வ‌ண‌ன் அதிக‌ம் ஈடுபாடு காட்டுவான்.அத‌ற்கு மேல் முடியாது என‌ ப‌லுவை நான் இற‌க்கும் போது அவ‌ன் அப்போதுதான் தொட‌ங்கிய‌து போல‌ வேக‌மாக‌ முடுக்குவான்.ச‌ர‌வ‌ண‌னுக்குத் த‌ன் கால்க‌ள் குறித்து தாழ்வு ம‌ன‌ப்பான்மை இருந்த‌து.உட‌லுக்கு ஏற்றார்போல் இல்லாம‌ல்,மெலிந்த‌ கால்க‌ள் அவ‌னுக்கு.எப்ப‌டியும் அவ‌ற்றை ப‌ருக்க‌ச்செய்ய‌ வேண்டுமென்ப‌தில் தீவிர‌மாக‌ இருந்தான்.அத‌ற்காக‌ எவ்வ‌ள‌வு மென‌க்கெட‌வும் த‌யாராக‌ இருந்தான்.சீன‌ர்க‌ளின் கால்க‌ள் பெருத்து இருக்க‌ ப‌ன்றி இறைச்சிதான் கார‌ண‌மென‌ ப‌ன்றி இறைச்சியை த‌ன‌துண‌வில் அதிக‌ம் சேர்த்துக்கொள்வான்.


எங்க‌ள் உட‌லில் ஓர‌ள‌வில் மாற்ற‌ம் ஏற்ப‌ட்ட‌தும் அள‌வில்லா ஆன‌ந்த‌ அடைந்தோம்.கைக‌ள் ந‌ன்கு முறுக்கேறி இருந்த‌ன‌.எந்த‌ நேர‌மும் மொட்டைக்கைச் ச‌ட்டையுட‌ன் லுனாஸை உலா வ‌ர‌த்தொட‌ங்கினோம்.ப‌ள்ளியிலும் ச‌ட்டையை ம‌டித்துவிட்டுக்கொண்டோம்.மூச்சை இழுத்து த‌ம்பிடித்து நெஞ்சை தூக்கி ந‌ட‌ப்ப‌து ஒரு க‌தாநாய‌க‌னுக்குரிய‌ க‌வ‌ன‌த்தை எங்க‌ள் மீது ப‌ட‌ வைக்கும் என‌ அழுத்த‌மாக‌ ந‌ம்பிய‌ கால‌ங்க‌ள் அவை.சில‌ கால‌ங்க‌ளில் ப‌யிற்சியின் பிர‌திப‌ளிப்பு உட‌லில் ந‌ன்கு புல‌ப்ப‌ட‌த்தொட‌ங்கிய‌து.

மூன்றாம் ப‌டிவ‌ ப‌ள்ளி விடுமுறை தொட‌ங்கும் முன்பாக‌ ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌ம்...(அதை க‌ல‌வ‌ர‌ம் என்றுதான் சொல்ல‌வேண்டும்).......... இடைநிலைப்ப‌ள்ளியில் இன்றும் நினைவு கூர்வ‌ர்.தொட‌ர்ந்து 1 வார‌ம் ஆயுத‌ங்க‌ளோடு திரிந்த‌ கால‌ங்க‌ள் அவை.இ.எக்ஸ்.பைப் மோட்டாரின் கிய‌ர் ச‌ங்கிலியை ச‌ர‌வ‌ண‌ன் புதிய‌ ஆயுத‌மாக‌ எங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்திருந்தான். ந‌ல்ல‌ நீள‌ம்.மெலிதாக‌க் கைக்குப் பிடிக்க‌ வ‌ச‌தியாக‌ இருந்த‌து.ச‌ண்டைக்கான‌ திட்ட‌த்தையெல்லாம் நானும் ச‌ர‌வ‌ண‌னும்தான் வ‌குப்போம்.அத‌ன்ப‌டி ச‌பைக்கூட‌லில் அந்த‌ச் ச‌ண்டையை அர‌ங்கேற்ற‌ வேண்டுமென‌ முடிவுசெய்திருந்தோம்.ச‌ர‌வ‌ண‌னுக்கு என‌து அடியில் ந‌ம்பிக்கை இருந்த‌து.3 வ‌ருட‌ங்க‌ள் சில‌ம்ப‌ம் ப‌ல‌கியிருந்த‌தில் எதிரியை ஒரே குத்தில் வீழ்த்தும் உக்தியை ஓர‌ள‌வு அறிவேன்.


ச‌பைக்கூட‌ல் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.க‌ட‌ந்த‌ வார‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையைப்ப‌ற்றி ஒழுங்கு ந‌ட‌வ‌டிக்கை ஆசிரிய‌ர் கோப‌மாக‌ப் பேசிக்கொண்டிருந்தார்.எல்லாவ‌ற்றுக்கும் கார‌ண‌ம் இந்திய‌ மாண‌வ‌ர்க‌ள் என்றார்.எட்டிப்பார்த்தால் தொலைவில் நான் குத்த‌ வேண்டிய‌வ‌ன் வாயில் எதையோ மென்ற‌ப‌டி நின்று கொண்டிருந்தான்.ச‌ர‌வ‌ண‌ன் காதில் கிசு கிசுத்தான்...'தோ பாருடா...எத‌ ப‌த்தியும் நினைக்காதே.த‌மிழ‌ன்னா கேவ‌ல‌மா?க‌றுப்பு தோலுன்னா எல‌க்கார‌மா?ஒரு குத்துதான்...ஒரே குத்துதான்.அதோட‌ அவ‌ன் எழுந்திருக்க‌க் கூடாது.கூட‌ இருக்கிற‌துல்லாம் எலிங்க‌.ப‌ய‌ந்து ஓடிடுங்க‌.போன‌வார‌ம் ஒன்டியா வீட்டுக்குப்போன‌ த‌‌ன‌பால‌ என்னா சொல்லி அடிச்சானுங்க‌...விட்டுடாத‌...'/


நான் ஒன்றும் பேசவில்லை.இது என‌க்குப் புதிதில்லை.அன்று நான் குத்த‌ வேண்டிய‌வ‌ன் என்னைவிட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு பெரிதாக‌ இருந்தான்.அந்த‌ வ‌ருட‌ம்தான் அவ‌னுக்குக் க‌டைசி வ‌ருட‌ம்.அவ‌ன் ப‌டிவ‌ம் ஐந்து.நான் மூன்று.அவ‌னை வீழ்த்த‌ வேண்டும்.அதுவும் ஒரே குத்தில்.


- தொட‌ரும்

Saturday, July 11, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...3


ப‌ய‌ண‌த்தின் சுக‌த்தை முத‌ன் முத‌லாக‌ ச‌ர‌வ‌ண‌ன் என‌க்கு போதித்தான்.எங்க‌ளுக்கு இல‌க்கு அவ‌சிய‌ம் இல்லாம‌ல் இருந்த‌து.ப‌ள்ளி நாட்க‌ளில் எங்க‌ளின் க‌ண்க‌ளின் ப‌ட்ட‌ எந்த‌க்காட்சியும் வெள்ளி,ச‌னி கிழ‌மைக‌ளில் ப‌ட‌க்கூடாது என்ப‌து ம‌ட்டுமே எங்க‌ளுக்குள் நாங்க‌ள் செய்துகொண்ட‌ ஒப்ப‌ந்த‌ம்.மோட்டாரில் ஏறி தூர‌ம் செல்ல‌ச் செல்ல‌ ஏற்ப‌டும் ப‌ர‌வ‌ச‌த்தை அனுப‌விக்கையில் நாங்க‌ள் பேசிக்கொண்ட‌து குறைவு.அப்போது எங்க‌ள் இருவ‌ரிட‌ம் இருக்கும் மொத்த‌த் தொகையே ப‌த்துவெள்ளியாக‌த்தான் இருக்கும்.மோட்டாருக்கு எண்ணை நிர‌ப்ப‌ 3 வெள்ளி.சாப்பிட‌ ஆளுக்கு 3 வெள்ளி.வீடு திரும்புகையில் ஆளுக்கு 1 வெள்ளி ஐஸ் க‌ச்சாங்.



பினாங்கு எங்க‌ள் ப‌ய‌ண‌ங்க‌ளில் முத‌ல் இல‌க்காக‌ இருக்கும்.லுனாஸிலிருந்து 20 நிமிட‌ங்க‌ள்.(ந‌ம‌து உயிரின்மீது ப‌ய‌ம் இல்லாம‌லும் அடுத்த‌வ‌ன் உயிரின் மீது இர‌க்க‌ம் இல்லாம‌லும் மோட்டார் ஓட்டினால்.)க‌ட‌லும் க‌ட‌ல் சார்ந்த‌ ப‌குதியும் ம‌ன‌துக்கு தெம்பைத்த‌ர‌க் கூடிய‌வை.ஒவ்வொரு நாளும் எங்கிருந்து எவ‌ன் வ‌ந்து அடிப்பான் என்ற‌ பாதுகாப்புக்குறிடத்தே சிந்தித்த‌ எங்க‌ளுக்கு திற‌ந்த‌ வெளி பெரும் ம‌ன‌ அமைதியைக் கொடுக்கும்.இப்போது நினைத்துப்பார்த்தாலும் அது போன்ற‌ த‌ருண‌மெல்லாம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் நெடிய‌ மௌன‌த்தை அனும‌தித்த‌ கார‌ண‌ம் புரிய‌வில்லை.அது கொஞ்ச‌ம் ஆழ்ந்து சுவாசிக்க‌த் தேவைப்ப‌ட்ட‌ மௌன‌மாக‌ உள்ள‌து.


அநேக‌மாக‌ எங்க‌ள் ப‌ய‌ண‌ங்க‌ளின் ப‌ட்டிய‌லில் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் ப‌குதி முக்கிய‌ இட‌ம் பிடித்துவிடும்.ப‌ட்ட‌வ‌ர்த்தில் அத‌ற்கென்று த‌னி இட‌ம் இருந்த‌து.முன்பு அங்கு 'ரூமா தாங்கா' என‌ எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.இப்போது கொஞ்ச‌ம் மாறி 'ஹாட்ட‌ல் தாய்' என்றும் 'ஹாட்ட‌ல் பாங்கோக்' என்றும் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கேள்விப்ப‌ட்டேன். அது போன்ற‌ இட‌ங்க‌ளில் நுழையும் போது நான் த‌லை க‌வ‌ச‌ம் போட்டுக்கொள்வேன்.ச‌ர‌வ‌ண‌ன் எதையும் அணியாம‌ல்தான் வ‌ருவான்.'உன்னை உன‌க்குத் தெரிஞ்ச‌ யாராவ‌து பாத்துட்டா'? என‌ ஒருத‌ர‌ம் அவ‌னைப் பார்த்துக் கேட்டேன்.'உன‌க்கு என்னாடா இங்க‌ வேல‌ன்னு நான் அவ‌னைப் பார்த்து கேப்பேன்'என்றான்.

கையில் 10 வெள்ளியை வைத்துக்கொண்டு பாலிய‌ல் தொழிலாளிக‌ளிட‌ம் விலை விசாரிப்போம். அவ‌ர்க‌ள் விலை அதிக‌ ப‌ட்ச‌ம் 50 ரிங்கிட்டைத் தாண்டிய‌தில்லை.விலை குறைப்பு ந‌ட‌க்கும்.அவ‌ர்க‌ள் 40 வெள்ளிக்கு இற‌ங்க‌ மாட்டார்க‌ள்.அந்த‌ ச‌ம்பாஷ‌னையின் நீள‌ம் எங்க‌ளுக்கு அதிக‌ம் தேவைப்ப‌ட்ட‌து.ச‌ர‌வண‌ன் மொழியில் சொல்வ‌தென்றால் 'உருவ‌த்தை ந‌ன்கு ம‌ன‌தில் ப‌திய‌ வைத்துக்கொண்டால் வீட்டிற்குச் சென்று இல‌வ‌ச‌மாக‌வே உற‌வு கொள்ள‌லாம்.'


சில‌ இட‌ங்க‌ளில் 'பாப்பா ஆயாம்'எங்க‌ளை நெருங்க‌ விடுவ‌திலை.ப‌ண‌ம் வைத்திருப்ப‌வ‌னின் வாடையை அவ‌ர்க‌ள் ந‌ன்கு அறிந்து வைத்திருந்த‌ன‌ர். ஏதாவ‌து ஒரு விடுதியில் ரிட்டைய‌ர் ஆகும் வ‌ய‌தில் இருக்கும் பாலிய‌ல் தொழிலாளியிட‌ம் அம‌ர்ந்து அதிக‌ நேர‌ம் பேசுவோம்.அவ‌ர் அளிக்க‌க்கூடிய‌ சேவை குறித்து விளாவாரியாக‌ விசாரிப்போம்.அவ‌ர் த‌ர‌க்கூடிய‌ விள‌க்க‌ம் அன்று நாங்க‌ள் பேசி ம‌கிழ‌ போதுமான‌தாக‌ இருக்கும்.


‍தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...2


ச‌ர‌வ‌ண‌ன் என்றொரு ந‌ண்ப‌ன்...


'நீங்க‌ எழுத்தாள‌ராக‌ யார் கார‌ண‌ம்?' ,'இள‌ஞ்செல்வ‌ன் உங்க‌ளை எழுத்தாள‌ராக்கினாரா?' ,'எப்ப‌டி நீங்க‌ எழுத‌ ஆர‌ம்பிச்சீங்க‌?' எல்லா எழுத்தாள‌ர்க‌ளைப்போல‌வே நானும் இந்த‌க் கேள்வியைப் ப‌ல‌ த‌ர‌ம் ச‌ந்தித்துள்ளேன். என‌க்கு எழுத்தை அறிமுக‌ம் செய்த‌து என‌வோ இள‌ஞ்செல்வ‌ன்தான். ஆயினும் எழுத்தாள‌னுக்கான‌ அடிப்ப‌டை ப‌ண்பைப் போதித்த‌வ‌ன் என் ந‌ண்ப‌ன் ச‌ர‌வ‌ண‌ன்.


ச‌ர‌வ‌ண‌ன் மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான‌ ந‌ண்ப‌ன். ஒரு கைக‌ல‌ப்பில்தான் அவ‌னை நானும் என்னை அவ‌னும் அடையாள‌ம் க‌ண்டுகொண்டோம். ர‌த்த‌ம் ஒழுக‌ ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ ம‌லாய்கார‌ மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் த‌னித்து நின்றுகொண்டிருந்தான். அவ‌னிட‌ம் ப‌ய‌ம் இல்லை. இர‌த்த‌த்தைத் துடைக்கும் க‌ண‌த்தில் த‌ன்னை யாரேனும் தாக்க‌க்கூடும் எனும் எச்ச‌ரிக்கை உண‌ர்வு ம‌ட்டும் இருந்த‌து. அவ‌ன் அதுவ‌ரை ந‌ம்பிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் தொலைவில் க‌ண்க‌ள் ம‌ட்டும் வெளித்தெரிய‌ நின்ற‌ன‌ர். முத‌ன்முதலாக‌ ஆயுத‌ம் எடுப்ப‌தின் ப‌த‌ற்ற‌த்தை உண‌ர்ந்தேன். இஷ்ட‌ப்ப‌டி வீச‌ அந்த‌க் க‌ட்டை அத்த‌னை தோதாக‌ இல்லை. ஆனால் அடுத்த‌வ‌னின் ப‌ய‌ம் ஒருவ‌கை த‌ன்ன‌ம்பிக்கையையும் திமிரையும் மூட்டிய‌து.


எல்லாம் முடிந்த‌பின் ச‌ர‌வ‌ண‌னிட‌ம் கேட்டேன்.
'ஏன் ச‌ண்டை?'.
'ப‌றைய‌ன்னு சொன்னான் அதான்...அத‌ சொல்ல‌ அவ‌ன் யாரு வ‌..........டி'
அந்த‌ நிமிட‌ம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் உயிர் தோழ‌ர்க‌ளாகிவிட்டோம். என்னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் அவ‌னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் கை குலுக்கிக்கொண்ட‌து. ஏற‌க்குறைய‌ 40 த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் வெறுப்புக‌ள் அற்று ஒன்றிணைய‌ நாங்க‌ள் இருவ‌ரும் கார‌ண‌மாக‌ இருந்த‌தை இப்போதும் கூறி பெருமை ப‌டுவ‌துண்டு. அத்த‌னை கால‌மும் வேற்று இன‌த்து மாண‌வ‌ர்க‌ளின் புத்த‌க‌ப்பை சும‌க்க‌வும் அவ‌ர்க‌ளின் விர‌த‌ கால‌ங்க‌ளில் திருட்டுத்த‌ன‌மாக‌ உண‌வு வாங்கித்த‌ர‌வும் அவ‌ர்க‌ள் வீட்டுப்பாட‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்கு உத‌வ‌வும் கேட்கும் நேர‌த்தில் ப‌ண‌ம் கொடுக்க‌வும் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌ட்ட த‌மிழ் மாண‌வ‌ர்க‌ளின் கைக‌ளுக்கு முத‌ன்முதலாக‌ ஆண்மை வ‌ந்திருந்த‌து.



ப‌ள்ளி முழுதும் இது ஆச்ச‌ரிய‌த்தைப் ப‌ர‌ப்பியிருந்த‌து. த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் ஒன்றிணைவ‌து அவ‌ர்க‌ள் க‌ன‌விலும் நினைக்காத‌ ஒன்று. அதிலும் மூன்றாம் ப‌டிவ‌த்தில் ப‌டிக்கும் முத‌ல் நிலை மாண‌வ‌னிலிருந்து க‌டை நிலை மாண‌வ‌ன் வ‌ரை ஒரே குழுவாகிக் கிட‌ந்ததும் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ ஐந்தாம் ப‌டிவ‌த்தில் ப‌யிலும் வேற்று இன‌ மாண‌வ‌ர்க‌ளை ஓட‌ ஓட‌ விர‌ட்டுவ‌தும் அவ‌ர்க‌ளுக்கு என்னையும் ச‌ர‌வ‌ண‌னையும் ந‌ன்கு அறிமுக‌ம் செய்திருந்த‌து.


ச‌ர‌வ‌ண‌ன் பெண்க‌ள் ம‌த்தியில் ஒரு க‌தாநாய‌க‌னாக‌வே வ‌ல‌ம் வ‌ந்தான். ச‌ண்டை வ‌ரும் கால‌ங்க‌ளில் முத‌ல் மாடியிலிருந்து அவ‌ன் கீழே குதித்து க‌ள‌த்தில் நிற்ப‌து அவ‌னைத் த‌னித்துக்காட்டிய‌து. அவ‌ன் ச‌ண்டையில் ஒரு நேர்மை இருந்த‌து. அவ‌னிட‌ம் வ‌ந்து முறையிடுப‌வ‌ர்க‌ளிட‌ம் நியாய‌ம் யார் ப‌க்க‌ம் என்ப‌தை ம‌ட்டுமே முத‌லில் பார்ப்பான். த‌மிழ‌ர்க‌ளை அவ‌ம‌திக்கும்ப‌டியான‌ சொற்க‌ள் இருந்தால் அன்று எங்க‌ளுக்குப் பாட‌ம் இல்லை என்று பொருள்.

- தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...1

'உன்னைப்ப‌ற்றி என‌க்குத்தெரியாதா?'என‌த் தொட‌ங்கும் மொட்டைக் க‌டித‌ங்க‌ளும் ஆபாச‌ப் பேச்சுக‌ளும் ஒவ்வொரு முறையும் என்னை வ‌ந்து அடைகையில் ஒருவித‌ ஆச்ச‌ரிய‌மும் கேள்வியுமே என்னை அலைக்க‌ழிக்கிற‌து. அதைவிட‌ ஆச்ச‌ரிய‌மாய் 'நீ அந்த‌ எழுத்தாள‌ன்கிட்ட‌ கெஞ்சினாயாமே' ... 'பிச்சை எடுத்தாயாமே' என‌ கூறும்போது ஆமோதிப்பத‌ற்கான‌ மௌன‌த்தைத் த‌விர‌ என்னிட‌ம் வேறு சொற்க‌ள் இல்லை. கூட‌வே ம‌ன‌ம் ,என‌து ப‌ள்ளி ப‌ருவ‌த்தை நோக்கி ந‌க‌ர்கிற‌து. அது ஏற்ப‌டுத்தும் ப‌ர‌வ‌ச‌மும் சுத‌ந்திர‌மும் ஓர் அழ‌கிய‌ க‌ற்ப‌னையாய் மீண்டும் மீண்டும் ம‌ண்ணில் ச‌ரிகையில், ஒரு க‌விதை இர‌க‌சிய‌மாய் பிற‌ந்து ம‌றுக‌ண‌மே அழிகிற‌து.


என்னைப் ப‌ற்றி ம‌றைப்ப‌த‌ற்கும் பாதுகாப்ப‌த‌ற்கும் எந்த‌ பிம்ப‌ங்க‌ளையும் நான் சேர்த்து வைக்காத‌ ஒரு கால‌க‌ட்ட‌த்தில் எதை அழிக்க‌ இத்த‌னை எரிச்ச‌ல்க‌ளும் வ‌சை மொழிக‌ளும் ஏன் என‌வும் தெரிய‌வில்லை. எழுத்தாள‌னின் முத‌ல் தோல்வியே அவ‌ன் ஏற்ப‌டுத்த‌ விரும்பும் பிம்ப‌த்திலும் ச‌முதாய‌ம் அவ‌னுக்கு ஏற்ப‌டுத்தி கொடுத்திருக்கும் பிம்ப‌த்தைக் காப்பாற்றுவ‌திலுமே தொட‌ங்குகிற‌து.
த‌ன்னைச்சுற்றி எழுப்ப‌ப்ப‌ட்டிருக்கும் பிம்ப‌த்தை உடைத்தெரிவ‌தில்தான் தொட‌ங்குகிற‌து எழுத்தாள‌னின் முத‌ல் வெற்றி. அது எல்லோராலும் இய‌ல்வ‌தில்லை. ச‌மூக‌ ம‌திப்பு த‌ரும் க‌வ‌ர்ச்சிக்கு அடிமையாவ‌து எல்லோரையும் போல‌ எழுத்தாள‌னுக்கும் இன்ப‌மான‌தாகிற‌து.

என‌து க‌விதைக‌ள் என்னைச்சுற்றி விழும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ளைக்க‌ முய‌லும் அர‌சிய‌ல் நிர‌ம்பிய‌துதான். அப்ப‌டி இருக்கையில் ஒரு ந‌ண்ப‌ரின் மின்ன‌ஞ்ச‌ல் இப்ப‌டி இருந்த‌து ,'உன்னைப்ப‌ற்றி ஒருநாள் இந்த‌ உல‌குக்குத் தெரிய‌வ‌ரும்.' (இது கோப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌து. இதையே கோப‌த்தின் உஷ்ண‌த்தைப் புகுத்தாம‌ல் வாசித்தால் பாராட்டுபோல‌ அமைந்துவிடும் என்ப‌து வேறுவிஷ‌ய‌ம்.) இந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் ஒருவ‌கை அச்ச‌த்தையும் ப‌த‌ற்ற‌த்தையும் ஏற்ப‌டுத்திய‌து. இந்த‌ உல‌குக்கு ஏதாவ‌து தெரிய‌கூடாது என‌ ப‌த்திர‌ப்ப‌டுத்தியிருக்கிறேனா என‌ ஒருத‌ர‌ம் சிந்தித்துப் பார்த்தேன். அந்த‌ச் சிந்த‌னையின் முறையில்லாத‌ பாய்ச்ச‌லின் கோர்வை இது.


இது வெறும் நினைத்துப்பார்த்த‌ல்தான். எந்த‌க்க‌ல‌ப்ப‌ட‌மும் இல்லாம‌ல் நினைத்துப்பார்த்த‌ல். எங்கிருந்து எழுத்தும் இல‌க்கிய‌மும் தொற்றிக்கொண்ட‌து என்ப‌தையும் மொழியை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் கூட்ட‌த்தில் உழ‌ன்று மீண்ட‌ க‌தையையும் இன்றைக்கு இல‌க்கிய‌ம் என‌ நாடிப்போவோரை இந்த‌க்கூட்ட‌ம் எப்ப‌டி வ‌ழி ம‌றிக்கிற‌து என்ப‌தையும் என் வாழ்வில் ச‌ந்தித்த‌ இல‌க்கிய‌வாதிக‌ள் ப‌ற்றியும் சொல்ல‌ முய‌ல்கிறேன். அவ்வ‌ள‌வுதான்.

ம‌.ந‌வீன்

Wednesday, July 1, 2009

உங்கள் கடிதம் கிடைத்தது

நேற்று நீங்கள்
எனக்கு எதிராக எழுதிய கடிதம்
சில எழுத்து பிழைகளோடு கிடைத்தது.

முதலில்
நீங்கள் அனுப்பிய முகவரி எண் தவறு...

இப்போது அந்த வீட்டில்
இருக்கும்
அழுக்கடைந்த கிழவியின்
நிகழப்போகும் மரணத்திற்கு
நீங்கள் காரணமாக இருப்பது
எவ்விதத்திலும் நியாமில்லை.

தன் மகனின்
கற்பனை முகத்தோடு
வாசிக்கத்தெரியாத அவளின் ஏக்கமும்
எனக்கான காத்திருப்பும்
உங்கள் கடிதத்தால் ஆபாசமாகியுள்ளது.

இரண்டாவது
உங்களின் பெயரை போட இயலாவிட்டாலும்
கிறுக்கலாக ஒரு
கையொப்பம் இட்டிருக்கலாம்.

வேறு வழியின்றி...
'பு'விலும்...'சு'விலும்...'ம'விலும்
தொடங்கும் பெயர்களை
உங்களுக்கு
வைக்கும் சிரமம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கையெழுத்து அழகாக இருந்தது
ஆயினும் ஒரு ஆலோசனை...

கொஞ்சம் மென்மையான
காகிதத்தில்
அடுத்த கடிதம் எழுதினால்
அழுத்தி துடைத்து எரிந்தப்பின்
குதம் எரிச்சலாவது
குறையும் வாய்ப்புண்டு

ம.நவீன்