Sunday, August 9, 2009

வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 4

ஏதோ ஒரு ச‌க்தியின் முன் ம‌ண்டியிட‌ ம‌னித‌ன் த‌யாராக‌ இருக்கிறான். ம‌த‌த்தின் முன், ம‌த‌ம் முன்னிருத்தும் க‌ட‌வுளின் முன், சாதியின் முன், ப‌த‌வியின் முன் , ப‌ண‌த்தின் முன் , புக‌ழின் முன், சமூக‌ ம‌திப்பின் முன் என‌ அத‌ன் வ‌ளைய‌ங்க‌ள் விரிகின்ற‌ன‌. இவை க‌ண்ணுக்குத் தெரியாம‌ல் வெவ்வேறு அள‌வுக‌ளில் ச‌தா ம‌னித‌னின் பாத‌ங்க‌ளைத் தேடி அழைகின்ற‌ன‌. ஆச்ச‌ரிய‌மாய் நாம் ஏதோ ஒரு வ‌ளைய‌த்தில் கால்க‌ளை வைத்திருப்ப‌து கால‌ம் க‌ட‌ந்துதான் புரிகிற‌து.

க‌ட‌வுளை ந‌ம்புவ‌தும் நான்கு இல‌க்க‌ ந‌ம்ப‌ரை ந‌ம்புவ‌தும் என்ன‌ள‌வில் ஒன்றுதான். இர‌ண்டையும் ந‌ம்புவ‌து 'க‌ஷ்ட‌த்துக்கு உத‌வும்' என்ற‌ அடிப்ப‌டை சித்தாந்த‌த்தில்தான். அந்த‌ ந‌ம்பிக்கைகாக‌க் கால‌ம் முழுவ‌தும் 'விர‌ய‌ம்' செய்ய‌ த‌யாராக‌ இருக்கிறோம். சாதி அடையாள‌த்தை விட‌ முடியாததும் சிக‌ரெட், ம‌துவை விட‌ முடியாத‌தும் அடிப்ப‌டையில் பேத‌ங்க‌ள் இல்லாத‌தாக‌வே என‌க்குப் ப‌டுகிற‌து. இர‌ண்டும் இறுதியில் கொடுப்ப‌து ப‌ல்வேறு நியாய‌ங்க‌ள் சொல்லும் அர்த்த‌ங்க‌ள் அற்ற‌ போதையைத்தான். இதில் ச‌ரி த‌வ‌றுக‌ள் இல்லை. ஆனால் அனைத்தும் வ‌ளைய‌ங்க‌ள். வெளியிலிருந்தும் ந‌ம‌க்குள்ளிருந்தும் வீச‌ப்ப‌டும் வ‌ளைய‌ங்க‌ள்.

என் கால்க‌ளைச் சுற்றிலும் நிறைய‌ வ‌ளைய‌ங்க‌ள் இருந்த‌ன‌. க‌ட‌வுள் வ‌ளைய‌ம், புக‌ழ் வ‌ளைய‌ம், பெண்க‌ள் வ‌ளைய‌ம் என வ‌ளைய‌ங்க‌ள் ப‌ல‌ என் கால்க‌ளை இறுக்கிக் கிட‌ந்த‌ கால‌ங்க‌ள் உண்டு. ஒன்றை எடுத்து வீசினால் ம‌ற்ற‌தில் கால்க‌ள் இருக்கும். கால்க‌ளை வ‌ளைய‌ங்க‌ளிலிருந்து மீட்க‌ முடியாத‌து சோர்வினைக் கொடுக்கும். எல்லா வ‌ளைய‌ங்க‌ளும் ஏதோ ஒரு வ‌கையில் ஒன்றோடொன்று தொட‌ர்பு வைத்திருப்ப‌து ஆச்ச‌ரிய‌த்தைக்கொடுக்கும். வ‌ளைய‌ங்க‌ளை விடுவிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் அவை வ‌ளைய‌ங்க‌ள் என‌ அறிந்து கொள்ளாத‌வ‌ரை. வ‌ளைய‌ங்க‌ளிலிருந்து விடுப‌துவ‌த‌ற்கான‌ பெரிய‌ கார‌ண‌ங்க‌ள் எப்போதும் இருந்த‌தில்லை. வ‌ளைய‌ங்க‌ளிலிருந்து கால்க‌ளை எடுக்கையில் கிடைக்கும் சுத‌ந்திர‌ம் ப‌டைப்புக்கான‌ ஜீவ‌ன். ஒரு க‌ட்ட‌த்தில் வ‌ல்லின‌மும் ஒரு வ‌ளைய‌மாக‌ உருமாறியிருப்ப‌தைக் க‌ண்டேன்.

வ‌ல்லின‌ம் அத‌ன் பொருளாதாரா தேவைக்குப் ப‌ல‌ரையும் ந‌ம்பியே உருவாக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அத‌ன் விரிவாக்க‌த்திற்கும் வ‌ள‌ர்ச்சிக்கும் ப‌ல‌ரின் உத‌வி அவ‌சிய‌மாக‌ இருந்த‌து. இத‌ற்காக‌ நான் முர‌ண்ப‌டும் ப‌ல‌ரிட‌மும் ச‌ம‌ர‌ச‌ம் செய்துகொண்டு கை குலுக்குவ‌து ம‌ன‌ உளைச்ச‌லைக் கொடுத்த‌து. ஒரு ப‌டைப்பாளன் இய‌க்க‌வாதியாக‌ மாறும்போது இயல்பாக‌வே சில‌ உப‌ரிக‌ள் அவ‌னைத் தொற்றிக்கொள்கின்ற‌ன‌. எழுத்தாள‌னாக‌ இருக்கையில் உள்ள‌ சுய‌ம் மெல்ல‌க் கெடுவ‌தாக‌ உண‌ர்ந்தேன். எழுதுவதை ம‌ட்டும் ப‌ணியாக‌க் கொண்டிருந்தால் இத்த‌கைய‌ கைகுலுக்க‌ளுக்கு அவ‌சிய‌ம் இருக்காது என‌த் தோன்றிய‌து. த‌னிமை ஏற்ப‌டுத்தும் சுத‌ந்திர‌மும் எதிர்ப்புண‌ர்வும் இன்னும் வீரிய‌ம் மிக்க‌வை.வ‌ல்லின‌த்தை முழுமையாக‌ நிறுத்திவிட்டு வாசிப்பிலும் எழுத்திலும் இன்னும் தீவிர‌ம் கொள்ள‌வேண்டும் என‌ முடிவெடித்திருந்த‌ போது அந்த‌ எண்ண‌த்தை த‌க‌ர்க்கும் ப‌டி இருந்த‌து இள‌ங்கோனுட‌னான‌ ச‌ந்திப்பு.

ஓர் எழுத்தாள‌ராக‌, மேடை நாட‌க‌ இய‌க்குனராக‌, தீவிர‌ விம‌ர்ச‌க‌ராக‌ பெரும் ஆளுமையுட‌னும் தெளிந்த‌ அறிவுட‌னும் இள‌ங்கோவ‌ன் எங்க‌ள் முன் வீற்றிருந்தார்.ச‌ம‌ர‌ச‌ம் செய்துகொள்ளாம‌ல் கால‌ம் முழுதும் அவ‌ர் கொண்டிருக்கும் எதிர்ப்புண‌ர்வு ஒரு பெரும் தீயாய் அவ‌ர் சொற்க‌ளில் தெரித்து வெளிப‌ட்ட‌ப‌டி இருந்த‌து. ஒரு எழுத்தாள‌னுக்கு இருக்க‌ வேண்டிய‌ ஆளுமை அவ‌ரிட‌ம் நிரைந்திருந்த‌து. இள‌ங்கோவ‌ன் எந்த‌ இய‌க்க‌த்துக்காக‌வும் த‌ன்னை ச‌ம‌ர‌ச‌ம் செய்துக்கொள்ளாத‌வாராக‌ இருந்தார். அவ‌ரே ஓர் இய‌க்க‌மாக‌வும் தெரிந்தார். ந‌ள்ளிர‌வைத்தாண்டியும் எங்க‌ளுட‌ன் பேசிக்கொண்டே இருந்தார். அர‌சிய‌ல், ச‌மூக‌ம், இல‌க்கிய‌ம், என‌ அவ‌ர் பேச்சு ப‌ல‌ த‌ள‌ங்க‌ளில் விரிந்தாலும் இறுதியில் அது எழுத்தாள‌னுக்கு இருக்க‌ வேண்டிய‌ நேர்மையில் வ‌ந்து அட‌ங்கிய‌து.


அடுத்த‌ ச‌ந்திப்பு வ‌ழ‌க்க‌றிஞர் ப‌சுப‌தியுட‌னான‌து. இந்த‌ச் ச‌ந்திப்பில் யுவ‌ராஜ‌ன் ம‌ற்றும் தோழி உட‌ன் இருந்த‌ன‌ர். ஆர‌ம்ப‌த்திலிருந்தே ப‌சுப‌தி வ‌ல்லின‌ம் இத‌ழுக்கு நிரைய உத‌வியுள்ளார். அவ‌ருக்கு வ‌ல்லின‌த்தின் மீது மிகுந்த‌ ந‌ம்பிக்கையும் இருந்த‌து.அன்றைய‌ உரையாட‌லில் நாங்க‌ள் வ‌ல்லின‌ம் குறித்து பேச‌வில்லை. ஆனால் ப‌சுப‌தி உருவாக்கியுள்ள‌ த‌னி சாம்பிராஜிய‌ம் என‌க்கு ஆச்ச‌ரிய‌த்தைக் கொடுத்துக்கொண்டிருந்த‌து. த‌மிழ்ச் ச‌மூக‌த்தின் முன்னேற்ற‌த்தை நோக்கியே அவ‌ர‌து ஒவ்வொரு சிந்த‌னையும் இருப்ப‌தும் அத‌ற்கான‌ எல்லா ச‌க்திக‌ளையும் அவ‌ர் பெற்றிருப்ப‌தும் நிரைவாக‌ இருந்தது. அவ‌ரைச் சுற்றியுள்ள‌ ம‌னித‌ர்க‌ளும் எந்த‌ அர‌சிய‌ல் ச‌க‌திக‌ளுட‌னும் கைகுலுக்காத‌வ‌ர்க‌ள். க‌ல்விமான்க‌ள். த‌மிழ் ஆர்வ‌ள‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.

ச‌மூக‌த்தின் ந‌ன்மைகாக‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுட‌ன் கைகுலுக்கிக்கொண்டேன் என‌க் கூறிக்கொள்ளும் கூட்ட‌த்திற்கு ம‌த்தியில் த‌ங்க‌ள் த‌னிப்பாதையில் எவ்வித‌ ச‌ம‌ர‌ச‌மும் இன்றி பெரும் இய‌க்கமாக ப‌ய‌ணிக்கும் இவ‌ர்க‌ள் வ‌ல்லின‌த்தின் அடுத்த‌ ப‌ரிமாண‌த்தை நான் க‌ண்ட‌டைய‌ உத‌வினார்க‌ள்.

பெரிய‌ ப‌ண‌ச்செல‌வின்றி யாரையும் ந‌ம்பாம‌ல் எவ‌ற்றோடும் ச‌ம‌ர‌ச‌ம் செய்துகொள்ளாம‌ல் எழுத்தையும் சிந்த‌னையையும் சுத‌ந்திர‌மாக‌ச் செய‌ல்ப‌ட‌வைக்க‌ த‌குந்த‌ ச‌க்திமிக்க‌ ஊட‌க‌ம் இணைய‌ம் என‌ முடிவெடுத்தேன். உத‌வ‌ சிவாபெரிய‌ண்ண‌ன் த‌யாராக‌ இருந்தார். எப்போதுமே ப‌டைப்புக்காக‌ என்னைக் கெஞ்ச‌ வைக்கும் யுவ‌ராஜ‌ன் ஆச்ச‌ரிய‌மாய் இர‌ண்டு க‌ட்டுரைக‌ள் கொடுத்துள்ளார். சிவ‌ம் தொட‌ர்ந்து உட‌ன் வ‌ருவேன் என்றார். ம‌ஹாத்ம‌ன் பிழைத்திருத்த‌ம் பார்க்கும் ப‌ணியில் தீவிர‌மாக இற‌ங்கியிருக்கிறார். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, டாக்ட‌ர்.ச‌ண்முக‌சிவா என‌ மூத்த‌ இல‌க்கிய‌வாதிக‌ள் ப‌ல‌ரும் வ‌ல்லின‌ம் இணைய‌ இத‌ழுக்காக‌க் ஆர்வ‌த்துட‌ன் காத்திருக்கின்ற‌ன‌ர்.
வ‌ல்லின‌ம் எதை கொடுத்த‌தோ இல்லையோ ஆன்மாவுக்கு நெருக்க‌மான‌ சில‌ ந‌ட்பைக் கொடுத்திருக்கிற‌து. ந‌ல்ல‌ ப‌டைப்பாளிக‌ளைக் கொடுத்திருப்ப‌து போல‌வே...

29.08.09 வ‌ல்லின‌ம் மாத‌ இத‌ழாக‌ இணைய‌த்தில் ம‌ல‌ரும். அத‌ற்கே உரிய‌ காத்திர‌த்தோடும் சில ஆயுத‌ங்க‌ளோடும்.

No comments:

Post a Comment