Thursday, August 6, 2009

வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 2

ம‌ஹாத்ம‌ன் வ‌ல்லின‌த்துட‌ன் இணைந்த‌து பெரும் ப‌ல‌ம்.இல‌க்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரிட‌ம் 'வ‌ல்லின‌ம்' உருவாகும் முன்ன‌ரே தொலைபேசியில் அழைத்து 100 ரிங்கிட்டுக‌ள் வாங்க‌த் தொட‌ங்கியிருந்தேன். என் ப‌ட்டிய‌லில் 15 பேர் இருந்த‌ன‌ர். பிந்தைய‌ நாட்க‌ளில் ப‌ல‌ர் இணைந்து கொண்ட‌ன‌ர். தொலைபேசியில் அழைத்து 'நூறு ரிங்கிட் வேண்டும்' என‌க் கேட்ப‌து ப‌ல‌ ச‌மைய‌ங்க‌ளில் அவ‌மான‌மாக‌ இருக்கும். ப‌ண‌ம் த‌ருப‌வ‌ரிட‌ம் வெளிப‌டும் சிறிய‌ முண‌க‌ல்கூட‌ தொட‌ர்ந்து யாரையும் அழைக்க‌ விட‌ முடியாத‌ப‌டிக்கு ம‌ன‌தை இறுக்க‌மாக்கிவிடும். இதை த‌விர்க்க‌ குறுந்த‌க‌வ‌ல் மூல‌ம் ப‌ண‌ம் கேட்க‌த் தொட‌ங்கினேன். அதையும் சில‌ர் கிண்ட‌லாக‌ 'உங்க‌ தொல்லை தாங்க‌ முடிய‌ல‌'எனும் போது இர‌வுக‌ள் தோறும் ம‌னம் விழித்தே கிட‌க்கும். இது போன்ற‌ த‌ருண‌ம் எல்லாம் என‌க்கு ஆறுதலாக‌ இருந்த‌ ஒரே ந‌ப‌ர் டாக்ட‌ர் ச‌ண்முக‌சிவா.


'நீ ப‌ண‌த்தை வாங்கி உன் பாக்கெட்டுல‌ போட்டுக்க‌ல‌. ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்துக்குன்னு த‌னி அடையாள‌ம் வேணுமுன்னு ந‌ம்ப‌ எல்லோரு ஆசை ப‌டுறோம். அதுக்கான‌ ஒவ்வொருவ‌ரின் ப‌ங்க‌ளிப்பு இது. இதில் கூச்ச‌ப்ப‌ட‌ ஒன்றும் இல்லை. ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் வ‌ளர‌ணுமுன்னு பேசிட்டு உங்கிட்ட‌ ப‌ண‌ம் த‌ராத‌வ‌ங்க‌தான் வெட்க‌ப்ப‌ட‌ணும்'. ச‌ண்முக‌ சிவாவின் வார்த்தைக‌ள் என்னை தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்க‌ உத‌விய‌து. சீ.முத்துசாமி, கோ.முனியான்டி, கோ.புண்ணிய‌வான், சை.பீர்முக‌ம்ம‌து முத‌லான‌ மூத்த‌ப் ப‌டைப்பாளிக‌ள் முத‌ல் தேவ‌ராஜ‌ன், ப‌ச்சைபால‌ன், ம‌ணிஜெக‌தீச‌ன், அருண், யுவ‌ராஜ‌ன், ம‌ணிமொழி, ராஜேஸ்வ‌ரி வ‌ரை ப‌ல‌ரின் ஆத‌ர‌வில் வ‌ல்லின‌ம் விரைவாக‌ வ‌ள‌ர்ந்த‌து. (சில‌ர் பெய‌ர் விடுப‌ட்டிருக்க‌லாம். வெவ்வேறு கால‌க‌ட்ட‌த்தில் வெவ்வேறு ந‌ப‌ர்க‌ள் இந்த‌க் குழுவில் இணைந்துள்ள‌ன‌ர்.)

எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தை விம‌ர்சித்த‌த‌ற்காக‌ பினாங்கு மாநில‌ ஜ‌ன‌ர‌ஞ்சக‌ எழுத்தாள‌ர் 'உங்க‌ கூட்ட‌மே ஒரு மாதியான‌தா இருக்கு... அதில் நான் இருக்க‌ விரும்ப‌ல‌' என‌ விள‌கிக்கொண்டார் .எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்துக்கு 10000 ரிங்கிட் கொடுத்த‌ ம‌ற்றுமொரு செர்டாங் எழுத்தார்வ‌ள‌ர் வ‌ல்லின‌த்திற்கு நூறு ரிங்கிட் கொடுப்ப‌த‌ற்கு 'சின்ன‌ ஓட்டைதான் க‌ப்ப‌ல‌ க‌விழ்க்கும்'என‌ விள‌கினார். எல்லாவ‌ற்றையும் தாண்டி ஒரு ச‌ங்க‌த்தின் த‌லைவ‌ர் 'வ‌ல்லின‌த்தை' தானே ந‌ட‌த்துவ‌தாக‌வும் என‌க்கு 1000 ரிங்கிட் ச‌ம்ப‌ள‌ம் கொடுத்துவிடுவ‌தாக‌வும் கூறி முக‌ப்பு அட்டையின் ஓர‌த்தில் ச‌ங்க‌த்தின் சின்ன‌ம் இருந்தால் போதுமான‌து என‌ விலை பேசினார். ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் வ‌ள‌ர‌ வேண்டும் என‌ மேடையில் முழ‌க்க‌மிட்ட‌ ப‌ல‌ர் நேரில் என்னைக் க‌ண்ட‌வுட‌ன் ஓட‌த்தொட‌ங்கின‌ர்.ப‌ல‌ர் தொலைபேசியை எடுக்க‌ ம‌றுத்த‌ன‌ர். சில‌ர் புத்த‌க‌த்தைப் பெற்றுக்கொண்டு ப‌ண‌ம் போட்டுவிட்ட‌தாக‌ பொய்யும் கூறின‌ர். ப‌டைப்புக‌ள் கேட்டும் ப‌ண‌ம் கேட்டும் ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ளை துர‌த்திய‌ தின‌ங்க‌ளில் என் எழுத்துக்கான‌ நிமிட‌ங்க‌ள் குறைந்துகொண்டே வ‌ந்த‌து.ப‌டைப்பிற்கான‌ ம‌ன‌தை நான் இழ‌ந்து கொண்டிருப்ப‌தை அறிந்தே அனும‌தித்தேன்.



அப்போதைய‌ கெடா மாநில‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ராக‌ இருந்த‌ சீ.முத்துசாமி, முத‌ல் வ‌ல்லின‌ம் இத‌ழை கெடா மாநில‌த்தில் வெளியீடு செய்து கொடுத்து உத‌வினார். எழுத்தாள‌ர் கோ.முனியாண்டி சித்திய‌வான் ந‌க‌ரில் க‌ல‌ந்துரையாட‌ல் ந‌ட‌த்தினார். இவ‌ர்க‌ள் இருவ‌ரிட‌மும் நான் க‌ண்ட‌ நேர்மையும் ஒரு ப‌டைப்பாளிக்கான‌ ச‌ம‌ர‌ச‌மின்மையும் வாழ்வு குறித்தான‌ ப‌ல்வேறு கேள்விக‌ளையும் அத‌ற்கான‌ அர்த்தம் பொதிந்த‌ ப‌தில்க‌ளையும் என‌க்குக் கொடுத்து கொண்டிருந்த‌து. எழுத்து ம‌ற்றும் வாழ்வுக்குண்டான‌ நுண்ணிய‌ முடிச்சு சில‌ எழுத்தாள‌ர்க‌ளின் மூல‌ம் க‌ண்ட‌டைய‌ முடிகிற‌து.அதை ப‌ண‌ம் கிடைத்தால் 'ச‌ண்டைகோழிக்கு' ச‌ப்புக்கொட்டிகொண்டு வ‌ச‌ன‌ம் எழுதும் எந்த‌ த‌மிழ‌க‌ எழுத்தாள‌னும் என‌க்குக் காட்ட‌வில்லை. எந்த‌ ச‌க்திக்கு முன்னும் கூன் விழாம‌ல் நின்ற‌ சீ.முத்துசாமி கோ.முனியாண்டியின், ஆளுமைக‌ள் வ‌ல்லின‌ம் த‌ன‌க்கான‌ பாதையில் செல்லும் வ‌ல்ல‌மையைக் கொடுத்த‌து.

ம‌ற்றுமொரு முக்கிய‌மான‌ ஆளுமை ச‌ண்முக‌சிவா. ந‌டுகாட்டில் அம‌ர்ந்துகொண்டு நான் ம‌துவைத் தொடுவ‌தில்லை என்ப‌வ‌னைவிட‌ பாரில் அம‌ர்ந்துகொண்டு தெளிந்த‌ அறிவுட‌ன் இருப்ப‌வ‌ன் என‌க்கு ஆச்ச‌ரிய‌த்தைக் கொடுப்பான். ச‌ண்முக‌சிவா இருக்கும் இட‌ம் மிக‌ முக்கிய‌மான‌து. அவ‌ரின் குர‌லுக்கு ப‌ல‌ இட‌ங்க‌ளில் ம‌திப்புண்டு. அவ‌ரைத் தேடி வ‌ந்த‌ விருதுக‌ளையும் அவ‌ற்றை அவ‌ர் நிராக‌ரித்த‌ வித‌த்தையும் நான் ந‌ன்கு அறிவேன். த‌ன‌க்கிருக்கும் தொட‌ர்புக‌ளை த‌ன‌து சுய‌ ந‌ல‌த்திற்காக‌வும் இதுவ‌ரை ப‌ய‌ன்ப‌டுத்திய‌தில்லை என்ப‌தையும் என்னால் உறுதியாக‌க் கூற‌ முடியும். ம‌ருத்துவ‌ம் த‌விர்த்து அவ‌ரை நாடிப்போப‌வ‌ர்க‌ள் கொண்டிருக்கும் கார‌ண‌ங்க‌ள் அதிர்ச்சியைக் கொடுக்கும். வேலை வேண்டும் என்ப‌து முத‌ல் விமான‌ம் ஏற‌ டிக்கெட் வேண்டும் என்ப‌து வ‌ரை அந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டிருக்கும். அவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ஏதோ ஒரு வ‌கையில் டாக்ட‌ர் ச‌ண்முக‌ சிவாவினால் உத‌வி கிட்டிய‌தை அருகில் இருந்து பார்த்த‌வ‌ன் நான். ச‌ண்முக‌ சிவா அடிக்க‌டி சொல்வார் ,'ப‌ல‌ரோடு நான் முர‌ண் ப‌டுகிறேன். ஆனால் இவ‌ர்க‌ளுக்கு உத‌வ‌ இந்த‌ முர‌ண்ப‌டுப‌வ‌ர்க‌ள் தேவைப்ப‌டுகிறார்க‌ள். இது ச‌ம‌ர‌ச‌ம் இல்லை. ஒருவ‌ன் ப‌ண‌த்தை ப‌துக்கிவைத்துள்ளான். ம‌ற்ற‌வ‌னிட‌ம் தேவை இருக்கிற‌து. நான் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் இணைத்து வைக்கிறேன்.'


நான் ச‌ண்முக‌சிவாவிட‌ம் க‌ற்றுக்கொண்ட‌து நிரைய‌. ஆயினும் அவ‌ர் இல‌க்கிய‌ம் சார்ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்கள் வெளிப்ப‌டையாக‌ இல்லை என்ப‌திலிருந்து விரிகிற‌து அவ‌ர் மீதான‌ என் விம‌ர்ச‌ன‌ம். என‌க்கு ம‌ட்டுமே தெரிந்த‌ ச‌ண்முக‌சிவா விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌த் தொட‌ங்கினால் ப‌ல‌ர் த‌ற்கொலை செய்து கொள்ள‌க் கூடும். அவ‌ரை ந‌ண்ப‌ராக‌ நினைப்ப‌வ‌ர்க‌ளும்...


இன்னும் கொஞ்ச‌ம் எழுத‌ வேண்டியிருக்கு...

No comments:

Post a Comment