Tuesday, August 4, 2009

வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை...


காலாண்டித‌ழாக‌ வெளிவ‌ந்த‌ வ‌ல்லின‌ம் இத‌ழ் இனி இணைய‌ ஏடாக‌ மாத‌ம் தோறும் வெளிவ‌ரும். http://vallinam.com.my/ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் புத்த‌க‌ வ‌டிவில் வ‌ருவ‌துதான் சிற‌ப்பு என்ற‌ன‌ர். உண்மைதான். காகித‌த்திற்குத் த‌னி ம‌திப்பு எப்போதும் உண்டு. வ‌ருட‌த்தில் இர‌ண்டு முறை தேர்ந்தெடுக்க‌ப்ப‌டும் ப‌டைப்புக‌ள் இத‌ழ் வ‌டிவில் கூடுத‌லான‌ த‌ர‌த்தோடு வெளிவ‌ரும். இந்த‌ வேளையில் வ‌ல்லின‌ம் உருவான‌ க‌தையைக் கொஞ்ச‌ம் நினைத்துப் பார்க்கிறேன். அவ்வ‌ள‌வே. 'திற‌ந்தே கிட‌க்கும் டைரி...' ( இதை யாராச்சும் ப‌டிக்கிறாங்க‌ளான்னு கூட‌த் தெரிய‌ல‌ )மிக‌விரைவில் புதிய‌ அக‌ப்ப‌க்க‌த்தில் தொட‌ரும். - ம‌.ந‌வீன்



த‌மிழ‌க‌த்தில் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் இல்ல‌த்தில் இருந்த‌ ஒரு ப‌க‌ல் வேளையில் 'காத‌ல் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌து' என்ற‌ குறுந்த‌க‌வ‌ல் ம‌ணிமொழியிட‌மிருந்து வ‌ந்த‌து.ம‌லேசியாவிலிருந்து புற‌ப்ப‌டும்போதே ஒரு வ‌ச‌திக்காக‌ மொட்டை அடித்திருந்த‌ ம‌ண்டையில் 'ந‌ங்' என யாரோ அடித்த‌து போல‌ இருந்தது.உட‌னே தொலைப்பேசியில் அழைத்த‌போது மௌன‌ங்க‌ளாலான‌ பெரும் இறுக்க‌த்தை, அழுகையை முடிந்துவிட்ட‌த‌ற்கான‌ அடையாள‌த்தோடு ம‌ணிமொழி வெளிப‌டுத்தினார். 'காத‌ல்' இத‌ழ் உருவான‌ கால‌ங்க‌ள் இன்ப‌மான‌வை. மாத‌த்தில் இரண்டு ச‌னிக்கிழ‌மைக‌ள் நான், ம‌ணிமொழி, யுவ‌ராஜ‌ன், ச‌ந்துரு, தோழி, பூங்குழ‌லி என‌ விடிய‌ விடிய‌ இத‌ழை உருவாக்கிய‌ க‌ண‌ங்க‌ள் இன்றும் நினைவில் உள்ள‌ன‌.இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு ஒரு த‌ர‌ம் க‌டையில் இற‌ங்கி தேநீர் ப‌ருகிவிட்டு காலை ஆறு ம‌ணிக்கு வீடு திரும்புவோம்.ப‌டைப்புக‌ளைச் சேக‌ரிப்ப‌து திருத்துவ‌து போன்ற‌ ப‌ணிக‌ளை நானும் ,அவ‌ற்றை டைப் செய்து திருத்த‌ம் பார்த்து வைப்ப‌தை ம‌ணிமொழியும் செய்ய‌ பொருளாதார‌ம் குறித்தான‌ எந்த‌க் க‌வ‌லையும் இல்லாம‌ல் 'காத‌ல்' இத‌ழ் ந‌க‌ர்ந்து கொண்டிருந்தது. ச‌ந்துருவின் ப‌ங்க‌ளிப்பு இதில் முழுமையான‌து. காத‌ல் இத‌ழுக்கு அவ‌ர் அமைத்துக்கொடுத்த‌ ப‌க்க‌ங்க‌ள் த‌னித்துவ‌மான‌வை.


ஏற்க‌ன‌வே 'ம‌ன்ன‌ன்'மாத‌ இத‌ழில் ப‌ணிபுரிந்த‌ அனுப‌வ‌ம் இருந்த‌தால் 'காத‌ல்' இத‌ழை பெரு.ஆ.த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ள் ந‌ம்பி என்னிட‌ம் ஒப்ப‌டைத்திருந்தார். ஏற‌க்குறைய‌ அவ‌ர‌து அறுப‌தாயிர‌ம் ரிங்கிட் ந‌ஷ்ட‌மான‌ப் பின்ன‌ர் 'காத‌ல்'இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌து. காத‌ல் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌போது ம‌னுஷ்ய‌ புத்திர‌ன்தான் என‌க்கு முத‌ல் ஆறுத‌ல். மீண்டும் இத‌ழைக் கொண்டுவ‌ர‌ தான் உத‌வுவ‌தாக‌க் கூறினார். நான் மீண்டும் மீண்டும் அவ‌ரிட‌ம் ஒரே கேள்விய‌க் கேட்டுக்கொண்டிருந்தேன். "எப்ப‌டி சார் புத்த‌க‌த்தைக் கொண்டு வ‌ரர‌து."


ம‌னுஷ்ய‌ புத்திர‌னின் 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' க‌விதை புத்த‌க‌த்தை வெளியீடு செய்துவைக்கும் போது 'காத‌ல் இத‌ழ் ஆசிரிய‌ர் ந‌வீன்' என‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌தும் 'திக்' என்ற‌து.நின்று போன‌ இத‌ழுக்கு இன்ன‌மும் ஆசிரிய‌ராக‌ இருப்ப‌து கூச்ச‌த்தைக்கொடுத்த‌து. அங்கு வ‌ந்திருந்த‌ எழுத்தாள‌ர்க‌ள் பிர‌ம்ம‌ராஜ‌ன், சுகுமார‌ன், வ‌ண்ண‌நில‌வ‌ன், இந்திர‌ன், போன்றோரிட‌ம் 'காத‌ல்' இத‌ழ் குறித்து ப‌கிர்ந்து கொண்ட‌போதும் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌த்தை ம‌றைத்தே வைத்தேன். மீண்டும் இத‌ழைக் கொண்டுவ‌ர‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் ம‌ட்டும் தீவிர‌மாக‌ இருந்த‌து.


ஓர் இர‌வு நானும் சிவ‌மும் இணைந்து சிற்றித‌ழ் வெளியிடுவ‌தென‌ முடிவெடுத்தோம். சிவ‌ம் என்னுட‌ன் இருப்ப‌து ம‌ன‌துக்குப் பெரும் ஆறுத‌ல். இப்போது கூட‌ ம‌ன‌ம் சோர்வ‌டையும் போதெல்லாம் சிவ‌த்தை அழைத்து பேசுவ‌துண்டு.ம‌ஹாத்ம‌னும் ப‌க்க‌ப‌ல‌மாக‌ இருந்தார். இத‌ழ் பெய‌ர் முடிவாக‌வில்லை. எப்போதும் போல‌ சிவ‌மும் ம‌ஹாத்ம‌னும் 'நீங்க‌ளே சொல்லுங்க‌' என்ற‌ன‌ர். உற‌ங்கி விழித்த‌ ஒரு காலையில் 'வ‌ல்லின‌ம்' என்று தோன்றிய‌து.இருவ‌ரிட‌மும் சொன்னேன். ஏற்றுக்கொண்ட‌ன‌ர். ல‌தாவிட‌ம் கூறினேன். அப்பெய‌ர் எவ்வ‌கையான‌ அர்த்த‌ங்க‌ளைக் கொடுக்க வ‌ல்ல‌து என‌க்கூறி பாராட்டினார். தூங்கி விழித்த‌போது தோன்றிய‌து என்றேன். ஒன்றும் கூறாம‌ல் மௌன‌மானார்.


'வ‌ல்லின‌ம்' வெளிவ‌ர‌ ல‌தா மிக‌ முக்கிய‌க் கார‌ண‌ம். அவ‌ர் கொடுத்த‌த் திட்ட‌ங்க‌ளும் ஆறுத‌ல்க‌ளும் தொட‌ர்ந்து செய‌ல்ப‌டும் தெம்பினைக்கொடுத்த‌து. 'நீ க‌ண்டிப்பாக‌ இத‌ழை ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்று கூறிய‌ நூல‌க‌விய‌லாள‌ர் செல்வ‌ராஜா 300 ரிங்கிட்டும் ல‌ண்ட‌னிலிருந்து அனுப்பிவைத்தார். வ‌ல்லின‌த்திற்கு முத‌லில் கிடைத்த‌த் தொகை 300.00. ல‌தாவும் அடிக்க‌டி ப‌ண‌ உத‌வி செய்தார்.(இந்த‌ எளிய‌ வ‌ரியைக்கூட‌ அவ‌ர் நிச்ச‌ய‌ம் விரும்ப‌ மாட்டார்)இன்று அத‌ன் எண்ணிக்கையைக் கூட்டினால் நிச்ச‌ய‌ம் நான் பெரிய‌ க‌ட‌ன்கார‌ன். என்னிட‌ம் ஒரு ப‌ழைய‌ க‌ணினி ம‌ட்டும் இருந்த‌து. ல‌தாவும் செல்வ‌ராஜாவும் கொடுத்த‌ப்ப‌ண‌ம் ஏற்ப‌டுத்திய‌ ந‌ம்பிக்கையில் வேலையைத் துரித‌ப்ப‌டுத்தினேன். உட‌ன‌டியாக‌ ச‌ம்ப‌ள‌த்தை எதிர்ப்பார்க்காம‌ல் ஜீவிதா எனும் தோழி டைப் செய்து கொடுத்தார். தெரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌மெல்லாம் ப‌ணம் கேட்டேன்.சில‌ரிட‌ம் கிடைத்த‌து. மா.செ.மாய‌தேவ‌ன் 800.00 ரிங்கிட் அனுப்பிவைத்தார்.சிவ‌ம் 500 ரிங்கிட் கொடுத்தார். ப‌ல‌ர் என் அழைப்பை எடுக்க‌ ம‌றுத்த‌ன‌ர்.ஸ்கேன‌ர்,பிரிண்ட்ட‌ர் போன்ற‌ அடிப்ப‌டையான‌ சில‌ பொருட்க‌ள் வாங்க‌வும் ப‌ண‌ம் க‌ரைந்து கொண்டிருந்த‌து. வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்துகொண்டே வ‌ந்த‌து.


முத‌ல் புத்த‌க‌ம் த‌மிழ‌க‌த்தில் அச்சான‌து. ம‌னுஷ்ய‌ புத்திர‌ன்தான் அச்சிட்டுக் கொடுத்தார்.அத‌ற்கு முன் ப‌ண‌மாக‌ 5000 ரூபாய் ம‌ட்டுமே செலுத்தினேன்.மிச்ச‌ ப‌ண‌த்தை ஒரு வ‌ருட‌ம் க‌ட‌ந்த‌பின் தான் செலுத்த‌ முடிந்த‌து.அதுவ‌ரை அவ‌ர் அந்த‌ப் ப‌ண‌ம் குறித்து ஒன்றும் கேட்க‌வில்லை. ம‌ற‌ந்தும் போயிருந்தார். ஆனால் புத்த‌க‌த்தை இங்கே எடுத்துவ‌ருவ‌தில் புதிதாக‌ப் பெரும் சிக்க‌ல் ஏற்ப‌ட்ட‌து. 500 புத்த‌க‌ங்க‌ளை அனுப்ப‌ ஆயிர‌ம் ரிங்கிட் வேண்டும் என்ற‌ன‌ர். ஒரு வ‌ழியாக‌ ஐநூறு ரிங்கிட் செல‌வு செய்து சிவ‌குரு நிறுவ‌ன‌ம் மூல‌மாக‌ புத்த‌க‌ம் ம‌லேசியா வ‌ந்திற‌ங்கிய‌து ஒரு பிர‌த்தியேக‌ வாச‌த்தோடு.சில‌ நாட்க‌ள் காணாம‌ல் போயிருந்த‌ ம‌ஹாத்ம‌ன் சிறையிலிருந்து மீண்டு வ‌ந்து வ‌ல்லின‌த்தோடு த‌ன்னை இணைத்துக்கொண்டார்.


ஆர‌ம்ப‌மான‌து எங்க‌ள் ப‌ணி...


நாளைக்கு முடிச்சிடுவேன்...

1 comment:

  1. தீவிரமாக வாசிக்கத் துவங்கிய காலக்கட்டத்தில் முதலில் “காதல்” இதழை வாங்கியது 2005ஆம் ஆண்டில் மலாயாப்பல்கலைக்க்ழகத்தில் நடந்த “கம்பன் விழாவின்” போதுதான். “காலச்சுவடு இதழ் தொகுப்புகளை” வாங்க வேண்டும் என்று (பண)அலை மோதிக்கொண்டிருந்தபோது, “காதல்” என்று பெயரிடப்பட்டிருந்த இதழைப் பார்த்தேன். அது மலேசிய இதழ் என்று ஒருவர் அறிமுகப்படுத்தினார்,(அவர் யார் என்று ஞாபகத்தில் இல்லை).

    காதலைப் பற்றிய இதழாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் வாங்கிப் படித்தபோது, சமக்காலத்து மலேசிய இலக்கியத்தின் படைப்புகளும் எழுத்தாளர்களின் மொழிநடைகளையும் அவதானிக்க வாய்ப்புக் கிடைத்த இதழாகவே காதலை மாதந்தோறும் வாங்கிப் படிக்கத் துவங்கினேன்.

    அதன் பிறகு சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான் போன்றவர்களின் நேர்காணல்களைக் கொண்ட இதழ்களைப் படிக்கும்போது மலேசிய எழுத்தின் வளர்ச்சியையும் தரத்தையும் மேலும் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது. எழுதுவதற்கு உத்வேகம் அடைந்த காலக்கட்டம் என்றும் அதைச் சொல்லலாம்.

    பிறகு சிறு இடைவெளியில் காதல் இதழ் நின்று போனதை அறிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. வல்லினம் முதல் இதழ் அறிமுகத்தை சுங்கைப்பட்டாணியில் கெடா மாநில எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தபோது நானும் போயிருந்தேன். இதழ் கிடைத்தபோது முற்றிலும் புதிய முயற்சியுடன் தனித்துவமான நவீன படைப்புகளின் பக்கங்களாக விரிந்திருந்தன வல்லினம். வல்லினத்தில் எப்படியாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது சீ.முத்துசாமித்தான் அதற்கான வாய்ப்பைப் பிறகொருநாளில் ஏற்படுத்திக் கொடுத்தார்.

    “காதல்” “வல்லினம்” இதழ்களுடன் எப்பொழுதும் திரிந்துகொண்டிருந்த ஒரு காலக்கட்டமும், அதில் எழுதும் எழுத்தாளர்களின் படைப்பை உள்வாங்கியபடி இதைவிட நன்றாக் எழுத வேண்டும் என்கிற வெறியும் உருவாகியிருந்தது.

    வல்லினம் மலேசிய இலக்கியத்திற்கான களமாக எந்தத் தனிகுழுவையும் சார்ந்திருக்காமல் (அப்படிச் சார்ந்தும் இருந்ததில்லை) இப்பொழுது உருவாகியிருக்கும் புதிய எழுத்தாளர்களையும் இணைத்துக் கொண்டு புதிய எழுச்சியுடன் வரும்.

    கே.பாலமுருகன்
    சுங்கைப்பட்டாணி

    ReplyDelete