Monday, April 20, 2009

யாரும் இங்கு பரிபூரண ஆத்மா கிடையாது

தீர்க்கத்தரிசனம்/சமூக சீர்த்திருத்தம் எந்தத் தளத்தில் வைத்து கையாளப்படுகிறது என்பதை வைத்துதான் அதன் சார்ந்த மதிப்பீடுகளுக்குள் நுழைய முடியும். மேலும் ஒரு கருத்து எந்தப் பின்னனியில், எந்த களத்தில், எந்தச் சமயத்தில் சொல்லப்படுகிறது என்பதையெல்லாம் ஆராய்ந்தால் அல்லது உற்று நோக்கினால்தான் அதற்கான எதிர்வினைகளும் எடுப்படும்.

சமாளிப்பதற்காகவும், தம்முடைய மேதமையைக் காட்டுவதற்காகவும், தமது வாசிப்பின் ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு கருத்தை வெறுமனே தன்னால் எதிர்வினையாற்றக்கூடிய சரக்கு இருக்கிறது என்பது போல் அணுக நேர்ந்தால், அது தர்க்க விவாதங்களுக்கு ஏற்படும் பயங்கர சறுக்கல்.

"பாலியல் தொழிலாளி" (விபச்சாரி எனக் குறிப்பிடுவதே அவர்களை ஒடுக்குவதுதான் என்று நண்பர் ஒருவர் கூறியிருந்தார்) குறித்த எனது விவாத்தில் நவீன சொல்லாடல்கள், நுண் அரசியல் எதிர் அரசியல் என்று விவாதம் செய்ததுகூட எனது கருத்தை நான் அணுகிய விதத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. அதை உணர்ந்த மறுகணமே குறைபாடுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டாயிற்று. நான் ஏற்கனவே சொன்னது போல யாரும் இங்கு பரிபூரண ஆத்மா கிடையாது. பிறருக்கு புத்திமதி சொல்வதற்கு தமது இலக்கிய/வாசிப்பு ஆளுமையைப் பய்ன்படுத்துபவன் தமது மேதமையைக் கண்டு போதை பிடித்தவன் போல ஆகிவிட்டான் என்றுதான் நினைக்கிறேன்.

மஹாத்மன் அவர்களுடைய ஆகக் கடைசியான கடிதம் மிகவும் கருத்தியல் சார்ந்தும் தமது வாசிப்பாளுமை சார்ந்தும் நிதானமாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள். எல்லோரும் தேடலில்தான் இருக்கிறோம். அதே சமயம் எல்லோரும் கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறோம். எந்த விவாதம், யாரால், எப்பொழுது, எந்த சூழ்நிலையில் முன் வைக்கப்பட்டு, வெற்றி தோல்வி காண்கிறது . . இப்படி பல மோதல்கள், விவாதங்கள், முரணான கருத்தின் செறுக்குகள் என்று இப்படியொரு களத்திலும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரே ஒரு வேதனைதான், நம் கருத்தை நியாயப்படுத்த வரும் இடத்தில் பிறரின் தனிப்பட்ட விஷயங்களை அம்பலப்படுத்துவது என்பது ஆரோக்கியமற்ற அணுகுமுறை. விவாதம் கருத்துகளுக்குத்தான். அவரின் தோற்றத்திற்கோ, குணங்களுக்கோ, குடும்ப செயல்பாடுகளுக்கோ அல்ல. (எனக்கும் சேர்த்து)

நாம் முன் வைக்கும் கருத்துகளுக்குப் பிறர் உடன்பட வேண்டும் என்று நினைப்பதும், அல்லது நாம் முன் வைக்கும் விவாதங்கள் எல்லாம் நிலைகளிலும் நியாயமாகத்தான் இருக்கும் என்றும் நினைப்பதும் அபத்தம் என்று கருதுகிறேன். நமக்கு தெரியாத, தர்க்கத்திற்குள் அகப்பட இயலாத பல கோணங்களில் வைத்து மதிப்பீட வேண்டிய நிலைகள் இருக்கின்றன.

டொரொண்டோ பாரிஸ். . நாங்கள்: மலேசியாவில் மாறி மாறி அடித்துக் கொள்வதை நீங்கள் வேடிக்கைப் பார்ப்பதாகச் சொல்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன் எங்குத்தான் இல்லை மோதல்கள்? எந்தத் துறையில்தான் இல்லை முரண்பாடுகள்? எல்லாம் நேரங்களிலும் நாம் உடன்படுவது அசாத்தியம். மேலும் மலேசிய இளம் தலைமுறையினர் ஒற்றுமையாகத்தான் இருக்க வேண்டும் என்று பிறர் வைக்கும் மதிப்பீடு அவர்களின் நம்பிக்கையைச் சார்ந்தது. அதற்காகவெல்லாம் நாம் கட்டுப்பட்டு, கருத்துகளே சொல்ல முடியாமல் அப்பாவியாக இருக்க முடியாது.

அஞ்சடியில் தொடங்கிய விவாதம், உண்மையில் மௌளனம் இதழில் வெளி வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நடுநிலை மாயையாக சில புத்திமதிகளை தம்பட்டம் அடித்துக் கொண்டு இன்று பலரின் பார்வையில் மிகப் பிரபலமாக அஞ்சடி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நடுநிலமை மாயையை ஏற்படுத்திய அஞ்சடிக்கு எனது வாழ்த்துகள். கருத்தும் விவாதமும் எங்கு வந்தால் என்ன? ஆனால் நான் எங்கு எதிர்வினைகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க உரிமை உண்டு. மௌளனம் ஆசிரியர் "புரிதல்" களத்தை வெகுவாக வரவேற்கிறாரே? அதை மறந்துவிட்டு அஞ்சடியை பிரபலப்படுத்த வேண்டும் என்கிற ஏதாவது நோக்கம் இதில் இருந்திருக்குமோ? அதையறியாமல் நானும் உள்ளே நுழைந்து பேசிவிட்டேன் போல.

மேலும் அநங்கம் குறித்த ஆலோசனைகளை ம.நவீன் ஆலோசகராக இருந்ததால் தனிப்பட்ட முறையில் என்னிடமோ அல்லது ஆலோசனை குழுவிலோ பேசியிருக்க வேண்டும். (அதன் போக்கு குறித்து) அதைவிட்டுவிட்டு அஞ்சடியில் பதிவிட என்ன உள்நோக்கம் வந்தது? தமது காத்திரத்தின் உச்சத்தில் எல்லோரும் அறியும்படி ஒரு இதழை விட்டு நான் செல்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு வெளியேறுவது எந்தவகையான நாடகம் இது? மேலும் மூத்த மலேசிய எழுத்தாளர்களுக்கு அநங்கத்தில் இடம் தருவது இல்லை என்கிற எதிர்வினையையெல்லாம் அநங்கத்திற்கு எழுதி அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பப்பட்ட கருத்துகளை நான் பிரசுரிக்காமல் மறைத்திருந்தால், நீங்கள் அஞ்சடியில் பேசுவது நியாயம். ஆனால் இங்கு நடந்தது எல்லாம் தலைக்கீழ்தானே? நான் கேட்பது சரியா?

சரி போகட்டும். ஆலோசனை-ஆசிரியர் குழு- இதழியல்- இப்படி இந்தத் துறையில் நமக்கு இன்னும் பக்குவம் தேவை என நினைக்கிறேன்.

மேலும் என்னையும் உட்பட எல்லோருக்கும் சொற்பிரயோகங்கள் குறித்து விழிப்புணர்வு அவசியம் தேவை. விவாதம் செய்ய வந்த இடத்தில் தூற்றுவது/அவதூறு படுத்துவது, கேள்விக்குள்ளாக்குகிறேன் என்று சொல்லி கிண்டல் அடிப்பது, இதுவெல்லாம் ஆரோக்கியமான எதிர்வினைகளா?

ஆகக் கடைசியாக, எதிர்வினையாற்றுவது என்றால் நான் நேரடியாகவே வருவேன். எனக்கு புனைப்பெயர்கள் அனாவசியம். எழுத்து நடைக்குள் அப்படியொன்றும் தங்கமலை இரகசியங்கள் புதைந்து கிடப்பதற்கில்லை. சார்லி சப்லின் "city Lights "படத்தில் எல்லோரையும் அவர் கோமாளியாக்கிவிடுவார், குத்து சண்டை வீரர், போலிஸ்காரர்கள், தொழிலதிபர் என்று எல்லோரையும் ஒரு கணம் தனது நகைச்சுவை உடல் இயக்கத்தாலும் சுபாவங்களாலும் கோமாளியாக்கிவிடுவார்.

அது போல வெறும் எழுத்து நடையை வைத்து மட்டும் இங்கு நாம் பிறரை கோமாளியாக்கி எதையும் சாதிக்க முடியாது. தனித்துவமான எழுத்து நடையை அவ்வளவு நுட்பமாகக் கண்டறியும் அளவிற்கு பேதப்படுத்தும் அளவிற்கு நாமெல்லாம் என்ன அப்படியொரு மேதாவிகளாக மாறிவிட்டோமா?

ஆகையால், பாடாங் செராய் நண்பர்கள் தலைநகரத்தின் நண்பர்கள் எங்கு சந்தித்துக் கொண்டு தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறார்களோ அல்லது வளர்த்துக் கொள்கிறார்களோ, போகட்டும்.

நான் நானாக மட்டுமே எழுதுவேன், என் கருத்துகளை எப்படி முன் வைக்க வேண்டும், எனது பலவீனங்களை எப்படி உணர வேண்டும் , திருத்திக் கொள்ள வேண்டும் என்பது என் பெயரியிலேயே என்னாலேயே புரிந்து கொள்ள முடியும் என்கிற தெளிவு இருப்பதால், நான் ஒருவனே பலர் எனகிற குற்றசாட்டை நான் அலட்சியப்படுத்துகிறேன். நான் எதையும் நிருபிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை என்பதால் இதை இங்கேயே விட்டுவிடுகிறேன்.

குறிப்பு : சே.குவாரா மகாத்மா காந்தி போன்றவர்கள் தமது எழுத்தாளுமையை பிற துறையில் வெளிப்படுத்தியவர்கள். தன்னுடைய போராட்டத்தையும் வாழ்க்கை பயணங்களையும் எழுத்தாளுமையின் மூலம் பிரச்சாரம் செய்தார்கள். சே.குவாராவின் எழுத்தில் இன்றும் போராட்டத்தன்மையும் விளிம்பு நிலை மக்களுக்கான குரலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது, காரணம் அவரின் எழுத்து ஆற்றல்தான்.

அவரை எழுத்தாளர் இல்லை என்று சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியென்றால் விளிம்புநிலை மக்களுக்காக எழுப்பப்பட்ட அந்தச் சீர்திருத்தம் எழுத்து இல்லையா? மேல்தட்டு மக்களின் கலா இரசனையும் வாழ்வணுபவங்கள் மட்டும்தான் எழுத்து என்றாகிவிடுமா? பிரச்சாரம் என்பது எப்படி எந்த வடிவத்தில் கையாளப்படுகிறது என்பதை வைத்துதான் பேச முடியும்.

அன்புடன்
கே.பாலமுருகன்

No comments:

Post a Comment