Monday, March 30, 2009

வலுவாகப்பதித்தல்= பிரசுரித்தலோ பரிசு பெறுதலோ இல்லை.

கடாரத்து கோ-மகள் கோமளாவுக்கு,

உங்கள் முதல் மடலின் கடைசி பத்தி (குறிப்பு) தான் நீங்கள் விவாதம் எனும் போர்வையில் ஒரு சார்பு நிலையை கையாண்டுயிருக்கிறீர்கள் என்று காட்டுகிறது. நீங்கள் வைத்திருக்கின்ற தராசின் ஒரு பக்கத்தின் தட்டின் கீழ் காந்தக் கல் இருப்பதை அறிய முடிகிறது. கே.பா.வுக்காக யார் வேண்டுமானாலும் பேசலாம். வரிந்து கட்டிக்கொண்டு வரலாம். ஆனால் விவாதம் நியாயமாகவும் சரியாகவும் இருக்க வேண்டாமா?

மலேசிய படைப்பிலக்கியத்திலும் தமிழகத்திலும் தமது இலக்கிய பிம்பத்தை 'வலுவாக பதித்தவர்' என்று சொல்வது அதிகபட்ச துதிபாடல். அதுவும் 'எல்லோரும் அறிந்ததே' என்று வேறு சொல்வதைக் கேட்கையில் சிரிப்பு தான் வருகிறது.

மலேசியாவில் சில போட்டிகளில் முதல்-இரண்டாம்-மூன்றாம் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

*தமிழகத்தில் (ஒரு) பரிசைப் பெற்றிருக்கிறார். (1970-களில் ஆனந்த விகடன் நடத்திய போட்டியில் சங்கு சண்முகத்தின் 'இரைதேடும் பறவைகள்' பரிசு பெற்றது. 1977-களில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது 'இலக்கிய சிந்தனை' என்ற அமைப்பு. அவ்வாண்டின் மிகச் சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்து கௌரவித்தது அந்த அமைப்பு. பல இலக்கிய ஜாம்பவான்கள் போட்டியிட்ட காலகட்டமது:
1). லா.ச.ரா.
2). சிவசங்கரி
3). பாஷா
4). கோமகள்
5). திலிப்குமார்
6). பொள்ளாச்சி அம்பலம்
7). பா.செயப்பிரகாசம்
8). மேலாண்மை பொன்னுசாமி
9). ஜெயகாந்தன்
10). பாலகுமாரன்
11). சீ.முத்துசாமி
12). நாஞ்சில் நாடன்
இவர்களின் மத்தியில் சீ.முத்துசாமியின் 'இரைகள்' என்ற சிறுகதை வெற்றிப்பெற்றது பாராட்டவேண்டிய ஒரு விஷயமல்லவா.(இவ்விடத்தில் சீ.முத்துசாமியின் பிம்பம் வெறும் பரிசுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கியச் சுரண்டல்களுக்கு தனது வழுவான குரலை தைரியமாகப் பதித்தவர்.) பின்வந்த காலகட்டங்களில் ரெ.கா.-வின் சிறுகதை இடம்பெற்றிருந்தாலும் 1977-ஆம் ஆண்டின் பரபரப்பும் உன்னதமும் இலக்கிய ஜாம்பவான்களின் பங்கேற்பும் இல்லாமலிருந்தது. அந்த 1977-ஆம் ஆண்டில் கிடைத்த அங்கீகாரத்திற்கு தனி மரியாதையும் தனிசிறப்பும் உண்டு)

*ஞாயிறு தினசரிகளில் சில கதைகளுக்கு பரிசுகள் பெற்றிருக்கிறாh.;
*மலேசிய - தமிழக சிற்றிதழ்களில், (இடைநிலை ஏடுகளில்!? ) சில கதைகள் இடம் பெற்றிருக்கினறன.
*இணைய ஏடுகளில் பங்கேற்பு.

எல்லாம் சரி 'வலுவாக பதிக்கும் முயற்சிகள்'தான் இவை. ஓர் இலக்கியவாதி தன் படைப்புகளை 'வலுவாக பதிக்கும்' அடையாளம் புத்தகங்களை வெளியிடுவதும் கதைகளைப் பிரசுரிப்பதும் மட்டுமல்ல . புத்தகங்களின் பாரத்தை விட அதற்குள்ளிருக்கும் இலக்கிய வலுவே, ஓர் இலக்கியவாதியை இலக்கியவுலகில் வலுவாகப் பதித்தவர் என்று கூறுவர்.

தற்காத்து பேசுகிறோம் என்கிற நோக்கத்தில் இங்கே நீங்களும் தவறு புரிகின்றீர்கள்.

'இப்போது இப்படி மன்னிப்பு கேட்டு நிற்கும் அளவிற்கு வந்திருக்காது!'

மன்னிப்பு கேட்பது ஒரு மகத்தான காரியம். எல்லோருக்கும் வராது. எழுத்தாளனாக இருந்துக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்பது ஏதோ ஒரு கீழ்தரமான செயல் என்று ஏண்ணிக்கொன்டிருக்கிறார்கள். தனக்கு இருக்கும் ஈகோ, மன்னிப்பை கேட்க வைக்காது. தவறை ஏற்றுக்கொள்ள வைக்காது. மன்னிப்பு கேட்காமல் நழுவியபடி தெரியாத்தனமாக போய்விடலாம். அதன்பிறகு எவ்வளவுதான் எழுதினாலும அவன் எழுத்து எடுபடாது. ஈகோ காரணமாக மன்னிப்பு கேட்காததால் தன் எழுத்தின் வலிமையை இழந்து நிற்கும் நிலை ஏற்படும். எழுத்தாளர்கள் சறுக்குவது இயல்பு என்பது இவர்களைப் போன்றோரின் மாய்மால வாக்குமூலங்கள.; சொல்ஆய்வாளர்.திருச்செல்வம், 'பொதுமேடைக்கு வா' என்று அழைத்தும் தைரியமில்லாமல் விலாங்குமீன் சொற்களை வாரி கொடுத்துவிட்டு சென்றவர், மன்னிப்பு கேட்காததால் எழுத்து மரியாதை இழந்து நிற்கிறார் ஒருவர்.;


இன்னொரு ரகத்தினரும் உண்டு. எவ்வித சர்ச்சையிலும் விவாதங்களிலும்; ஈடுபடாதவர்கள். சர்ச்சையில் கலந்து கொள்வதன் வழி, தான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயர் களங்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் ஒதுங்கி நிற்பவர்கள். இவர்கள் மேடையில் பேசுவதற்கும் நிகழ்ச்ச்சியில் பங்கேற்பதற்கும் பஸ், இரயில், விடுதி கட்டணங்களுக்கான பணத்தை மறக்காமல் வாங்கிச் செல்பவர்கள். இலக்கியத்திற்காக செலவு செய்யவும் செலவு பண்ணப்படவும் துணியாதவர்கள். இவர்களைப் போன்றவர்களைத் தான், நீங்கள் இதுவரையிலும் கொண்டாடி வருகிறீர்கள். இவர்களின் விமர்சனமே அற்புதம் என தலைமேல் வைத்து கொண்டாடி வருகிறீர்கள். இவர்களின் வாயால் பாராட்டுப்படுவதையே தெய்வ ஆசீர்வாதம் என ஏற்றுக்கொள்கிறீர்கள். (கருத்துக் கூறாமல் இருப்பதும் கொண்டாடியதாகத்தான் அல்லது ஏற்றுக்கொண்டதாகத்தான் குறிக்கும்.)


இதனை தட்டிக்கேட்டால் 'எல்லாம் தெரிந்தவன் மாதிரி எழுதுபவன்' என்றும் 'எல்லோருக்கும் புத்திமதி சொல்லும் பகவான்' என்றும் 'விபச்சாரிகளுக்கு வாழ்வளிக்கும் உத்தமன்' என்றும் 'விபச்சாரியைக் கண்டால் மண்டியிட்டு கும்பிடும் பக்தன்' என்றும் 'நல்லவன் போல வேடமிட்டு நாடகமாடியவன்' என்றும் பரிகசிக்கிறீர்கள்.

எழுத்தாளன் என்பவன் சமூக சீர்திருத்தவாதியோ அல்லது தீர்க்கதரிசியோ கிடையாது.

-அடிமுட்டாள்தனமாக சொல்லியிருக்கிறீர்கள்!
எழுத்து பலவகை. எழுத்தாளர்களும் பலவகையினர். சமையல் குறிப்பிலிருந்து மஞ்சள் ஏடுகள் (காமசூத்ரா வகையறாக்கள்) அரசியல்-அறிவியல் என்று பற்பல தளங்களில் எழுத்துவகை, வகை வகையாக அச்சேறியிருக்கின்றன, அச்சேறுகின்றன. இதில் ஒரு வகை அபூர்வமாக தென்படுவது சமூக சீர்திருத்தமும் தீர்க்கதரிசனமும். சமூகத்தை சீர்திருத்திய எத்தனையோ நாவல்கள் உண்டு .எத்தனையோ எழுத்தாளர்கள் உண்டு. சேகுவாரா, அரசாங்க உயர் ஸ்தானத்தில் உட்கார்ந்து சேவையாற்றியதன் அடிப்படை தூண்டுதல் அல்லது தளம் ஏதுவாக இருந்தது? அதைப்போல் பாப்லோ நெருடாவை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தது எது? உட்கார்ந்த பின் காலை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தார்களா? உயர்ரக மதுவை அருந்திக் கொண்டு காலந்தள்ளினார்களா? இந்தியாவின் மகாத்மா காந்தி,விவேகானந்தர் தங்களுக்கு மட்டும் புத்தகங்களை எழுதி வைத்து சென்றனரா? இன்று ஹிண்டிராஃப்பும் தென்னாப்பிரிக்க அரசியல் கட்சி ஒன்றும் காந்தியின் படத்தை ஏந்திக்கொண்டு 'தொலைதூர பார்வைக்கு ஓட்டுப்போடுங்கள்' என்று பிரச்சாரம் செய்வது எப்படி? ஏன்?

நமது நாட்டில் மலாய் நாவலாசிரியர்கள் இன்று அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உட்கார வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தை தேசிய நூலகத்திற்கு போய் ஆராயுங்கள். முடிந்தால், அவர்களை சந்தித்து 'எப்படி இந்த உயர் நிலைக்கு வந்தீர்கள்? உங்களை இங்கு கொண்டு வந்துவிட்டது எது? அல்லது யார்? நீங்கள் எழுதிய புத்தகங்கள் மலாய் சமூக சீர்த்திருத்தங்கள் கொண்டவையா?' என கேளுங்கள். அப்படி அவர்கள் இல்லையென்று உறுதியாய்-பகிரங்கமாய் பதில் சொல்வார்களேயானால் நான் என் தலையை மொட்டையடித்து மீசையை எடுக்கிறேன். அந்த முகத்தோடு என் தோல்வியை, தவறை ஏற்றுக்கொண்டு நான் பணிபுரியும் 'ஜனசக்தியில்' பிரசுரித்து விட்டு வெளியேறுகிறேன். ( தன் சொந்த வீட்டில் - ஊரில் - அலுவலகத்தில் அவமானப்படுதல் மிகவும் கேவலமானது, வேதனையானது: வெளியேறுவதே சரியானது).


தீர்க்கதரிசிகள் : நீங்கள் இன்னும் நாஸ்டர்டாம் புத்தகத்தை படிக்கவில்லை போலிருக்கிறது. அதைக் குறித்து கேள்விப்படவில்லை போலிருக்கிறது. அல்லது மூளையின் ஏதோ ஓர் பகுதி வேலை செய்யவில்லை போலிருக்கிறது. எப்படி? ஆணைவிட பெண்ணுக்கே மூளை பெரியது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களே. பொய் சொல்கிறார்களோ.......
மதம் சார்ந்த புத்தகங்களையாவது படித்திருக்கலாம். பைபில், அல்குரான், பகவத் கீதை, மகா பாரதம்.....(இதனை கடவுளா இறங்கி வந்து எழுதினார்.... மனுஷர் தானே!) இப்புத்தங்களில் தீர்க்க தரிசன வார்த்தைகள் அதிகமாய் காணப்படுவது பைபிள் ஆகும். வாதிடுவோமா ? தயாரா?

இங்குள்ள 'சிறந்த' எழுத்தாளர் ஒருவர் சொல்வதைப் போல 'திருவள்ளுவர் என் கனவில், சொப்பனத்தில், தரிசனத்தில், வந்தார். முதல் குறளில் சொல்லப்பட்ட ஆதிபகவன் 'அல்லா' தான் என்று விளக்கிய வியாக்கினத்தில் மெய்சிலிர்த்துப் போனேன். அதன் பிறகு ' ஊடாடி மூலமாக என் முன் தோன்றிய அகத்தியரும் 'ஆமாம், சாமி' என்றார், என்றெல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்த மாட்டேன்.

விபச்சாரிகள் ஒடுக்கப்பட்வர்கள்தான் என்று வெறுமனே எப்படி அடையாளப்படுத்த முடியும்?

இந்த விபச்சாரிகளிலும் பல ரகம் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். பணத்திற்காக என்பது பெரும்பான்மை. கட்டாயத்தின் பேரில் என்பது சிறுபான்மை. கணவன் இருக்க காமவெறி போக்குவதற்காக விபச்சாரத் தொழிலை மிக ரகசியமாக செய்வது அதிலும் குறைந்த சதவீதம். கணவனே வழியனுப்புவது அதனினும் குறைவு. பெரும்பான்மை - சிறுபான்மை - குறைந்த சதவீதம் பற்றியெல்லாம் மூலக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. குறித்துக்கொள்க என்று கேட்டுக்கொள்ளப்பட்டதும் இல்லை.

இப்படியிருக்க...
பொதுபுத்தியில் சமூகம் கற்பித்ததின்படி விபச்சாரிகள் ஓடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறது. இப்படி சொல்வதில் அத்துமீறல் எங்கேயிருந்து வருகிறது? மண்ணாங்கட்டி அத்துமீறல் !


யார் ஒடுக்கப்பட்டவர்கள் என வரையறுக்கும் முன், எல்லாவற்றையும் பொதுவாகவே சொல்லிவிட்டோ, பொதுவான அடையாளத்தையோ கொடுத்துவிட்டுப் போக முடியாது.


இந்தக் கருத்தை முன் வைத்து தயவு செய்து நீங்கள் பரிதாபப்படும், ஆதரிக்கும், கே.பா.வின் முதல் இரண்டு பத்திகளை (மூலத்தையும் சேர்த்து ) நிதானமாக வாசிக்கவும். பல பிதற்றல்களை உங்கள் மனம் வாசித்தறியும் !
எல்லாவற்றையும் பொதுவாகவே சொல்லாமல், பொதுவான அடையாளத்தை கொடுத்துப் போகாமல், தீர ஆராய்ந்தோமானால் இன்று அதிகமாய் பணத்தை வைத்திருப்பவன் குறைந்த வருமானவுள்ளவனை ஒடுக்குகிறான். இதில் ஆணும் சரி, பெண்ணும் சரி.

எழுத்தாளன் என்ன சமூக சீர்த்தவாதியா? அவனை அப்படி வற்புறுத்துவதும் வன்முறை தான்.

இந்த வாக்கியத்தில் அதிகச் செல்லம் பீறிடுகிறது.
தன் மகன் இராணுவ வீரனாக வரவேண்டுமென்று போர் பயிற்சிக்கு அனுப்பிவைத்துவிட்டு அவன் உடலில் சிறு கீறல் பட்டால்கூட 'ஐயோ! வன்முறை.....' என அலறும் ஒரு தாயின் அறியாமையைப் போன்றுதான் இருக்கிறது உங்கள் வாக்குமூலம்.


'இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவித்துக்கொள்வது என்னவென்றால், ஓர் எழுத்தாளன் என்பவன் சமூக சீர்த்திருத்தவாதியல்ல. அது அவன் வேலை அல்ல. சமூகத்திற்காக அதன் மீட்சிக்காக எழுதச் சொல்லி வற்புறுத்துவது வன்முறையாகும். நியாயங்களை தட்டிக்கேட்க வற்புறுத்துவது வன்முறை எனப்படும். அநீதியை எதிர்க்க வற்புறுத்துவது ஒரு வன்முறை ஆகும். தைரியசாலிகள் மட்டும் எதிர்க்கட்டும். எழுத்தாளனை எழுத மட்டும் விடுங்கள். எதையாவது எழுதி எப்படியாவது போகட்டும். அவனை தனியாக விட்டுவிடுங்கள். அவனை வற்புறுத்துவது ஒரு வன்முறை என்று சட்டம் இயற்ற தீர்மானம் எடுக்கப்படுகிறது. இது கடாரத்து கோ-மகளின் ஆணை, ஆணை, ஆணை !!'

இதை இப்படி இணைய பக்கத்தில் பகிரங்கமாக பதிவுக்குக் கொண்டு வந்தது எனக்கென்னவோ அநாகரிமாகத் தெரியவில்லை!


மஹாத்மன்

No comments:

Post a Comment