Friday, April 10, 2009

எனக்கும் நுண் அரசியல் - நுண் முரண்பாட்டு அரசியல் - எதிர் அரசியல் தெரியாது

ஒவ்வொரு நவீன கண்டுப்பிடிப்பின் பயன்பாட்டிலும் நன்மையும் தீமையும் அடங்கியிருக்கிறது, ஏதேன் தோட்டத்து நடுமரம்போல. தீமை என்று வரும்போது அது வேரூன்றி தடித்த வேர்களை மேல்பரப்பும் போது அத்தீமையினை அழிக்க முற்படும் முயற்சிகள் பெரும்பான்மையாக தோல்வியில் முடிகின்றன அல்லது பெருஞ்சேதம் விளைவிக்கின்றன. இன்று தென்கொரியாவின் 'தெபோடாங்- 2' போல. நாளை ஒரு நாள், விஷக்காற்று பரப்பப்பட்டு மூன்றில் ஒரு பங்கின் உலக மக்கள் சித்திரவதையின்றி - கத்தியின்றி இரத்தமின்றி சுலபமாக கொல்லப்படலாம். ஒரு காலகட்டத்திற்குள் மட்டும் (அநேகமாக 100 ஆண்டுகள்) இங்கேயும் வெளிமண்டல கவசங்களை மனிதர்கள் அணிய நேரிடலாம்.

இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாதே என்ற போராட்டத்தில்தான் சமூகநலவாதிகள், மனிதாபிமான அறிவுஜீவிகள் அரசை வற்புறுத்தி வற்புறுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகிற நவீன கண்டுப்பிடிப்புகளின் நன்மைகளுக்கு எதிராக செயற்படும் தீமை செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும், தண்டித்து மற்றவர்களுக்கு பயத்தை உருவாக்கியும் பத்துகட்டளைகளைப் போன்றதொரு கட்டமைப்புகள் பிறப்பிக்கின்றன.

மலேசியாவில் இணைய - வலைப்பக்கங்களின் குற்றங்கள் அரசியல் ரீதியாக 'அளவு மீறப்படுகின்றன' என்று கருதிய அரசு, உடனே அதனை தடுத்து நிறுத்தவும் அதற்கு காரணமானவர்களை பிடித்து தண்டிக்கவும் செய்கின்றது. (உதாரணமாக ராஜாபெட்ரா)

'அல்தான்துயா என்ற பெண்ணை கொன்ற பாவிகளை நரகத்திற்கு அனுப்புவோம்' என்று வலைப்பக்கத்தில் எழுதிய காரணத்திற்காக ராஜாபெட்ராவின் வாழ்வு சற்று அலைக்கழிக்கப்பட்டது என்றுச் சொன்னால் உண்மைதான். உண்மைக்காக போராட முன்வருபவர்கள் சொகுசான - அமைதியான - பேரோடும் புகழோடும் வாழ்ந்தாக நான் படித்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இருந்த சொகுசான வாழ்வை, நான்கு தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் உத்திரவாதத்தை இழந்து நின்றவர்களைத்தான் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.

அந்த போராட்டமான வாழ்க்கைப் பாதையானது முற்புதரும், கற்குவியலும் நிறைந்தது. அதன் மேல் வெறுங்காலால் நடக்கும் நிர்ப்பந்தம். பிணவாடைகளின் மத்தியில் சுவாசிக்கும் சூழல். சுற்றிலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவனின் வாழ்வு அப்படியானது. திடீரென கல்லெறிவார்கள். கார் கண்ணாடியை உடைப்பார்கள். மனைவியின் முன்னாலேயே குடலை உருவி வெறியுடன் வெற்றிச் சிரிப்பை காட்டிச் செல்வார்கள். ஆகவே, திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக்கொண்டவர்கள் உண்மை போராட்டவாதியாக உருவெடுப்பதில் அதிகச் சிரமம் உண்டு. அதிக இழப்பு உண்டு. அதிக வேதனை உண்டு. (இப்போது ஹிண்ட்ராப்பின் தலைவர்கள் பலரை இப்படி யோசிக்க வைத்துவிட்டது.)

போராட்டத்திற்குள் நுழைந்த பிறகு, போராட்ட குரலை மட்டும் நம்பியிருக்காமல் நேரடி சந்திப்புகளையும் நம்பியிருக்காமல் எழுத்து ரீதியிலும் பத்திரிகையையோ, அகப்பக்கத்தையையோ கையாள வேண்டியுள்ளது. பராதியாரின் படைப்புகளை ஆய்வு செய்தபோது சமூக போராட்டத்தினையே அடிப்படையாக வைத்துக்கொண்டிருந்ததை அறிய முடிகிறது. மஹாத்மா காந்தி, போராட்டத்தை முடித்துக்கொண்ட பிறகு புத்தகம் எழுதவில்லை. சமூகத்திற்காக, நாட்டிற்காக போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் புத்தகத்தையும் எழுதினார். கலைஞர் கருணாநிதி எழுத்தாளரே அல்ல என்று சொன்னால் எப்படி நமக்கு சிரிப்பு வருமோ அப்படித்தான் மஹாத்மா காந்தி எழுத்தாளரே அல்ல என்று சொல்லும்போது சிரிப்பு வருகிறது. சத்திய சோதனை என்ற புத்தகம் மட்டுமே நூறு புத்தகங்களுக்கு சமம். (இந்த நூறு புத்தகங்கள் படடியலில் அம்புலிமாமாவையும் ராணிமுத்துவையும் இந்தியன் மூவிசையும் சேர்த்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

இறுதிவரை போராட்டத்தில் உண்மையாக இருப்பதும் கூட ஒரு போராட்டம்தான். உதாரணமாக, டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக பதவிறே;ற முதல் நாளிலேயே ஹிண்ட்ராப்பின் இருண்டு இசா கைதிகளை விடுதலையாக்கினார். விடுதலை செய்ய வேண்டுமென்றால், எல்லா ஹிண்ட்ராப் கைதிகளையும் அல்லவா விடுதலையாக்கியிருக்க வேண்டும். ஏன் அந்த இரண்டு பேர் மட்டும்? விடுதலையாக்க அதிக நியாயங்கள் பெற்றவர்கள் இருவர்.
1).மனோகரன் - சிறையிலிருந்துக்கொண்டே தேர்தலில் ஜெயித்தவர்.
2).உதயகுமார் - அவசிய - அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்.

இவர்களை அல்லவா அரசு விடுதலையாக்கியிருக்க வேண்டும். ஏன் அவர்கள்? ஒரு வதந்தி பரவியிருக்கிறது. வதந்தி என்றாலே அதனை நாம் நம்ப வேண்டாம் தானே. ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. 1931ல் 'ஜாலியன் வல்லாபாக்' போராட்டதின் நிமித்தம் பகவத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன் அவர், ஆங்கிலேயே மகாராணி அரசுக்கு தான் இனி போராட்டவாதியாக இருப்பதில்லை, மன்னித்து விடுதலையாக்குங்கள் என்ற அவர் அனுப்பிய வாக்குமூல கடிதத்தை எப்படி நம்புவது? இதனை அரசியல் விமர்சகர்கள் மூன்று விதமாக கூறுகிறார்கள்:

1.இதுவொரு அரசியல் தந்திரம். (எப்படியாவது விடுதலையாகி மறுபடியும் போராட வேண்டும் என்ற நோக்கம்)
2.அந்தமான் சித்திரவதையும் வேதனையும் அப்படி எழுத வைத்திருக்கக் கூடும்.
3.அக்கடிதம் இட்டுக்கட்டியது, போலியானது. அந்தமான் சிறையில் காகிதமும் பேனாவும் பென்சிலும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

இந்த காரணங்களில் முதல் காரணத்தை விடுதலையான அந்த இருவருக்கு ஒப்பிடலாமா? அப்படியே இருந்தாலும் மற்ற தோழர்கள் சிறையில் இருக்க, மேள தாளத்தோடு ஹிண்ட்ராப் குழுவினர் அவ்விருவரையும் வரவேற்றுச் சென்றது ரொம்பவே ஓவர்.-நானும் ரொம்பவே அறுக்கிறேனோ...

2.கோமளா - குமார் - அந்தோனி - தமிழன்பர் யாவரையும் சந்திக்க நானும் தயார். நீங்கள் நியமிக்கும் நாளில் நான் ஓய்வாக இருக்க நேர்ந்தால் சந்திப்பு நிச்சயம். (உங்கள் யாவரின் எழுத்து நடையும், எழுத்துப் பிரயோகங்களும் நீங்கள் ஒருவரே என்று சுட்டிக்காட்டுகின்றன. இது உண்மை இல்லை என்று நேரில் நிரூபியுங்கள்.)

3.உண்மையாக, எனக்கும் நுண் அரசியல் - நுண் முரண்பாட்டு அரசியல் - எதிர் அரசியல் தெரியாது. ஆனால், சொல்லப்பட்ட விஷயங்களில் இவை இல்லை என்பது மட்டும் தெரியும். (அ.மார்க்ஸ், பிரேம் - ரமேஸ் ஆகியோரின் அனைத்து புத்தகங்களையும் இன்னும் படித்து முடிக்கவில்லை. முன்பு ஆங்கிலத்தில் பின் நவீனமும் அதிநவீனமும் படித்தது ஒன்றும் புரியாமல் இருந்தது. அவை உயர்ரக இலக்கிய ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருந்ததால் ஒரு வெங்காயமும் புரிந்திடவில்லை. ஒருவேளை உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வாய்ப்புண்டு.

4.நாஸ்டர்டாமுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்ன கொழுப்புள்ள வார்த்தைக்கு மருந்து: தயவு செய்து அப்புத்தகத்தை படித்துவிட்டு வந்து விவாதிக்கவும்!

5.சாத்தானின் வேதங்கள், வெட்கம் ஆகிய புத்தகங்களை எழுதியவர்களையும் மதம் சம்பந்தப்பட்டுள்ளதால் எழுத்தாளர்கள் இல்லை என்பீர்களோ.....

6.'அடிமுட்டாள்தனமாக சொல்லியிருக்கிறீர்கள்' என்ற சொற்பிரயோகம் - 'பிறரை முட்டாள் எனும் அடையாளம் காட்டும் அதிபுத்திசாலித்தனம்'என்று அர்த்தப்படுமா? அப்படியா!! -பிறரை அல்ல@ ஒருவரை!-நீ முட்டாள் என நேரடியாக தாக்கவில்லை. சொல்லப்பட்ட விஷயம் முட்டாள்தனமாக இருக்கின்றதே என்றேன்.-மனம் புண்பட்டிருக்கும் என்று இப்போது உணர்வதால் மன்னிப்பு கேட்கிறேன.

7.நான் மதிக்கும் மனிதர் ஒருவர் கூறினார், "நாங்கள்தான் முன்பு சர்ச்சை செய்து எழுத்தில் மோதிக்கொண்டோம், அடித்துக்கொண்டோம். இப்போது நீங்களுமா? நான் மற்றவர்களிடம் 'இன்றைய இளைய தலைமுறை ஒற்றுமையாக இருப்பதை பாருங்கள.; நம்மைப் போல் அடித்துக் கொள்வதில்லை' என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், இப்படி செய்துவிட்டீர்களே..." என்று சொல்லி அங்கலாய்த்துக்கொண்டார். உண்மைதான். யாருடைய கண்பட்டதோ... நாங்கள் என்ன ஜென்ம விரோதிகளா? முதுகில் குத்திய துரோகிகளா? நாங்கள் அடித்துக்கொள்வோம், மறுநாள் கைகுலுக்கிக் கொள்வோம் என்று சொல்லி சமாளிக்கலாம் தான். அவர் மனம் வருத்தமடையாதவாறு என் வார்த்தைகளை உபயோகித்துக்கொண்டேன். இலக்கிய சர்ச்சை என்பது அவரவர் முன் வைக்கும் சொற்களைப் பொறுத்துள்ளது.

-மஹாத்மன்.

1 comment:

  1. aaga mottatula onnu nalla teriyutu.inta BALAMURUKANTAN VIKNEESVARAN...SAARANGAN...rombooo kevalama iruku...udane inta talai kuniva sarikadda balamurukan seiyura aldaapu ataivida super.oru koopai teneeram...tamil naadam...santipaam....yappa yappa yappa sutta arasiyal vaati.aduta MIC talaivar.Ada elutalar sanga talaivar pataviyavathu tangapa.

    ReplyDelete