Thursday, February 12, 2009

ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி கேலிக்குரல்



'நந்தா' திரை படத்தில் சூரியாவிடம் ராஜ்கீரன் நன்றாக தண்ணி அடித்தபடி உணர்ச்சிப்பொங்க சொல்வார் 'நாமெல்லாம் கடவுளுக்குச் சமமானவர்கள்.யாரையும் கொல்ல உரிமை உண்டு'.அதைக்கேட்கும் போது சூரியாவின் கண்களில் உணர்ச்சி பொங்கும்.மிகத்துரிதமாக எதிரிகளை விளாசு விளாசு என விளாச கிளம்பிவிடுவார்.இந்த ஒரு வரியை ஒரு படம் முழுவது சொல்ல பாலா இத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டாம்.

சிறிய வயதில் காசியில் விட்டுச்செல்லும் தன் மகனை தேடிச் செல்கிறார் தந்தை.ஆர்யா ஒரு சித்தனாக ருத்திரனாக காட்சி கொடுக்கிறார்.தன் மகனை அடையாளம் கண்டு கொண்ட தந்தை அவனை வீட்டிற்கு அழைக்கிறார்.குருவின் ஆசியோடு ஆர்யா ஊருக்கு திரும்புவதும் அங்கே ஊனமுற்றவர்களை பிச்சைவாங்க வைத்து வயிறு வளர்க்கும் கூட்டத்தினரை அழிப்பதும் மீதிக்கதை.

படத்தில் வசனம் ஜெயமோகன்.'விஷ்ணுபுரம்' 'பின் தொடரும் நிழலின் குரல்' போன்ற தடித்த புத்தகங்கள் எழுதிய அதே ஜெயமோகன்.ஒரு A4 காகிதத்தில் அடங்கும் அளவுக்கு அடக்கமாக வசனம் எழுதியுள்ளார்.படத்தில் அவரது பங்களிப்பு வெரும் வசனத்தோடு இருந்திருக்கும் என்பது சந்தேகம்தான்.தனது 'ஏழாம் உலகம்' நாவலை மையமாக வைத்து நகர்த்தப்படிருக்கும் திரைக்கதையில் அவரது பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் என நம்பலாம்.அவர் 'ஆமாம்' என பெருமை படவும் பெரிதாக ஒன்றும் திரைக்கதையில் இல்லை என்பது வேறு விஷயம்.ஏழாம் உலகத்தின் நிழலைக்கூட பாலாவின் கடவுள் நெருங்கவில்லை.

அறிவாளிகள் அதிகம் சிந்திக்கக்கூடாது என்பதை முதலில் உணர்த்தியவர் கே.பாலசந்தர் பிறகு மணிரத்தினம் இப்போது பாலாவும் அதில் சேர்ந்து கொண்டிருக்கிறார்.ஊனமானவர்களைத் தேடிப்பிடித்ததும் இரண்டு மூன்று வருடங்கள் சிரமப்பட்டு அவர்களை நடிக்க வைத்தது என எல்லாம் சரி...இத்தனை உழைப்பும் எதற்கு?மீண்டும் தமிழ்ப்படத்திற்கே உரிய கதாநாயக கூஜாவை தூக்கிப்பிடித்து காட்டுவதற்குதான்.ஒன்றும் அறியாத அப்பாவி மக்களுக்காக போராட திடீரென தோன்றும் ரஜினியையும் விஜயகாந்தையும் அர்ஜூனையும் போலவே ஆர்யாவும் வடிவமைத்திருக்கிறார் பாலா.மக்கள் பிரமிக்க வேண்டுமே! இருக்கவே இருக்கிறார்கள் காசியில் சித்தர்கள்.அதிக தாடி ஸ்டைலான முடி மிரட்டும் பார்வை.நடக்கும் போதும் பார்க்கும் போதும் உயிரோட்டமான இளையராஜாவின் பின்னனி இசை.முடிந்தது. ரசிகர்களும் உலக திரைப்படதின் போஸ்டர்களைக்கூட காணாத விமர்சகர்களும் பாராட்ட அது போதும்.

படத்தில் இரண்டு கதைகள் ஒன்றாக நகர்கின்றன.முதலில் ஆர்யாவின் வாழ்வு மற்றது 'உருப்படிகளின்'(கதைப்படி) வாழ்வு.இவை இரண்டில் ஒன்றை உருப்படியாக சொல்ல முயன்றிருந்தாலும் படம் மனதில் நின்றிருக்கும்.சிறுவயதிலிருந்தே காசியில் உள்ள ஒரு பிரிவு சாமியார்களோடு தன்னை ஒரு கடவுளாக எண்ணி வாழும் ஒருவன் தனது குடும்பத்தில் இணையும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அதன் பலகீனங்களோடு சொல்ல முயன்றிருக்கலாம்.(அப்படியும் இல்லை.ஆர்யாவை சிவனுக்கு ஒப்பாகப் பேசுகிறார் அந்த ஊர் சாமியார்.)அல்லது அங்கவீனர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தாமல் 'பிதாமகனில்' சம்பந்தமே இல்லாமல் சிம்ரனை பழைய பாட்டுக்கு ஆடவிட்டு பணம் பண்ணியது போல இதில் திருநங்கயையும் போலி எம்.ஜி.ஆர் சிவாஜியையும் ஆடவிடாமலாவது இருந்திருக்கலாம்.குறைந்த பட்சம் எந்தக் கதாநாயகனும் வந்து காப்பாற்றாமல் அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் படியாவது இருந்திருக்கலாம்.அப்படி அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடியாத பாவப்பட்ட ஜென்மங்கள் என பாலா அறிவாளித்தனமாகப் பேசினால் அவர்களைத் தற்கொலை செய்யவாவது வைத்திருக்கலாம்.பாலாவின் கூற்றுப்படி(சித்தர்களின் கூற்றாம்) வாழமுடியாதவர்களை கொல்வது தர்மம் என்றால் அவர்களே தற்கொலை செய்து இறப்பதும் தர்மமாகியிருக்கும்.அது வில்லனுக்கு தண்டனையாகவும் இருந்திருக்கும்.

இதையெல்லாம் விட்டு விட்டு பலவீனமானவர்களை பலவீனமானவர்களாகவே காட்டும் போக்கும்...ஒரு சமூகத்தின் பகுதியை காப்பாற்ற இன்னமும் திடுதிப்பென ஒரு தனி மனிதன் தோன்றுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய கேலிக்குரலாகவே கேட்கிறது.

பலவீனமானவர்கள் இன்னமும் கதாநாயகர்களுக்குக் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

'அப்படியெல்லாம் இல்ல சார்.பாலா படத்த நல்லா தான் எடுத்திருப்பாரு.சென்சார்ல வெட்டிடதனால படம் இப்பிடி ஆச்சி' என பாலாவின் ரசிகர்கள் சப்பை கட்டலாம்.நியாயம்தான்.

இன்னும் சிலர் 'பாலா இந்தப்படதுல கடவுள் இல்லனு சொல்ல வரார்.அத சரியா சொல்லல' என்றும் கூறலாம்.

என்னைப்பொறுத்தவரை இதில் எனக்கு கடவுளோ கலையோ மயிரோ முக்கியம் கிடையாது.மனிதன் தான்.

ம.நவீன்

6 comments:

  1. Super vimarsanam........ Valga neer Valgaa unthan vimarsanam.

    Naanum Kadavul (vishnu)

    ReplyDelete
  2. • பாலா மீதும் நான் கடவுள் மீதும் உங்களுக்கு என்ன கடுப்பு என்று தெரியவில்லை. உலக சினிமா என்று எல்லோரும் பேசுவதே ஒரு மாயை. எது உலக சினிமா? உலக சினிமா என்று நீங்கள் கொண்டாடும் சினிமாவில் எது சிறந்தது என்கிறீர்கள்?
    • மிக கொரூரமான வன்முறையை காட்டிய சுப்ரமணியபுரத்தைக் கொண்டாடிய நீங்கள் நான் கடவுள் படத்தில் பாலா காட்டும் களம் உங்களுக்கு புரியவில்லை.
    • சில புத்தகங்கள் படிப்பதற்கு பயிற்சிகள் தேவை. ஆதே போல் சில படங்கள் பார்பதற்கும் பயிற்சி தேவை.
    • வழக்கமான வார்த்தைக்களுக்கான வழக்கமான படம் இது இல்லை.
    • உலகம் முழுவதும் இப்போது பேசப்படும் ஸ்மல்டக் மில்லியனர் மற்றும் நான் கடவுள் இரண்டையும் பாருங்கள். சிறந்தது(best) என்றால் என்ன என்று புரியும்.
    • இது வரை யாரும் கேட்காத இசை, பார்காத காட்சிகள். இன்னோரு முறை நான் கடவுள் படத்தை பாருங்கள்.
    • ஸ்மல்டக் மில்லியனர் நல்ல படம். ஆனால் சிறந்தது(best film) என்று எதுவும் கிடையாது. ஆனால் விருதுகளைக் குவிக்கிறது.
    • மிக கேவலமான பாலியல் கற்பனையை முன்பு உங்களிடம் பார்த்தேன். இப்போது மிக மோசமான வார்த்தைகளை உங்களிடம் பார்கிறேன்.
    • விடுபட்ட பயிற்சி உங்களிடம் தெரிகிறது. நிறைய படிப்பு பயிற்சி செய்யுங்கள்.
    • படத்தில் எந்த மயிரையும் பார்க்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்கள்.
    • புஜாவின் மயிரை வில்லன் அறுத்துவிட்டான் அதனால் பார்த்திருக்கமாட்டீர்கள்.
    • ஆனாலும் ஆர்யாவிடம் நிறைய மயிர் இருந்ததே…..
    • உங்கள் படம் பார்க்கும் திறன் எனக்கு தெரியவில்லை.
    • இந்திய திரைபட உலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததே கிடையாது.
    • மீண்டும் ஒரு முறை கண்கள் மற்றும் அறிவு திறனையும் திறந்து படத்தை பாருங்கள்.

    ReplyDelete
  3. பூஜாவுடன் ஒரு குத்துப்பாட்டு..ரெண்டு கனவுப் பாட்டு பிறகு மனசு திருந்தி அம்மாவுடன் சேர்ந்த பின் ஒரு குடும்ப பாட்டு...என போயிருந்தா உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்....நீங்க சொல்றது போல அறிவவாளிகள் ரொம்ப சிந்திக்கக் கூடாது தான். ஏன்னா உங்கள மாதிரியானவங்களால அந்த மாதிரி எல்லாம் சிந்த்திக்க முடியாதுல்ல. சரியான பேரரசுவோட ரசிகனா இருப்பீங்களோ..

    ReplyDelete
  4. “நரகத்திலிருந்து ஒரு குரல்”

    இந்த உருப்படிகளெல்லாம் ஹாலிஉட் சினிமாவில் நாம் காணும் க்ராஃபிக்ஸ் ஜீவராசிகள் இல்லை. எல்லா வழிபாட்டுத் தலங்களின் வாசல்களிலும் நாம் காணக் கூடிய பிச்சைக்காரர்கள்தான் இவர்கள். ஆனால் நாம் இவர்களுக்குச் சில்லறைகளைப் போட்டுவிட்டு நகர்ந்துவிடுவோம். ஆனால் பாலா இந்தப் பிச்சைக்கார்களின் உலகத்துக்குள் சென்று வந்திருக்கிறார். அந்த உலகம் நாம் வாழும் கற்பனை உலகம் அல்ல. தொலைக்காட்சி பெட்டியும் சினிமாவும் தரும் ஜிகினாக் கனவுகளால் நிரம்பியது அல்ல. அது ஒரு நிஜமான நரகம். இந்த நரகத்தை ஒரு சினிமாவில் காண்பிப்பதே அராஜகம் என்றால் இப்படி ஒரு நரகத்தை உருவாக்கி இதில் ஒரு மனிதக்கூட்டத்தையே அடைத்து வைத்திருக்கும் இந்த சமூகத்தையும் இதன் அங்கத்தினர்களாகிய நம்மையும் நம்முடைய அரசாங்கத்தையும் என்ன செய்யலாம்

    மார்ச் 2009 உயிர்மை இதழிலிருந்து சாருநிவேதிதா

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. வணக்கம்,
    எனக்கும் இந்த படம் ஒரு தெளிவான கருத்தைக் கூற்வதாக தெரியவில்லை. நான் என்னமோ, எனக்கு பக்குவம் போதவில்லை என நினைத்தேன்...அல்லது, அறிவாளிகளில் நானும் ஒருவளோ என நினைத்தேன்... எனக்க்குத் துணையாக மா.நவீன் அவர்களின் விமர்சனம் தோது. மிக்க நன்றி. எதற்கும், மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்.. குறைந்தது, விமர்சிக்கலாம் அல்லவா...!
    -யுவபாரதி-

    ReplyDelete