Saturday, May 30, 2009

ஒரு க‌விதை

டிக்கெட்

'வரவேண்டாம்'
எனஎன்னை நீ பணித்த
சில நிமிடங்களுக்கு முன் தான்
டிக்கெட் உயிர் பெற்றது.

தனதுடலில் அச்சிடப்பட்டிருந்த
திகதியையும் நேரத்தையும்
ஒருதரம் உரக்கச் சொன்னது

தனதுபயணம் பற்றிய அவசியம் குறித்தும்
புலன்களின்வேட்கை பற்றியும்
அது ஓயாமல்பிதற்றத் தொடங்கியது

நமது பிரிவை
தனது மெளிந்த மேனியால்
இணைக்க முடியும் எனவும்

உன்னுள் உடைந்த சில பகுதிகளை
ஒட்ட முடியும் எனவும்
அது தீர்க்கமாக சொன்னது

நான் உன்னூரில் நடக்கும்
மூன்று அதிசயம் பற்றி கூறினேன்:

1.வண்ணத்துப்பூச்சி மீண்டும் கூட்டுப்புழுவாவது பற்றி
2.மலர்கள் மீண்டும் மொட்டாவது பற்றி
3.ஓர் அன்பு சிதைவது பற்றி

டிக்கெட் சிரித்தபடி
தான் உயிர் பெற்றதை விட
அவை பெரிதில்லை என்றது.

இர‌ண்டு க‌விதை

காதலி 1

காமம் வெல்வது பற்றி
காதலிசொல்லிக்கொண்டிருந்தாள்

முதலில் தனது முகம் மறக்கச் சொன்னாள்
அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்
அவைகளில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள்

உதடுகள் பற்றி கேட்டேன்
சுரக்கும் எச்சில் பற்றியும்
கிருமிகள் பற்றியும்
நினைவு படுத்தினாள்

என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக
மார்பை பசு மடியுடன் ஒப்பிட்டாள்
அத்தனையும் ஊளை சதை என்றாள்

என்னைத்தொடர விடாமல்
தனது மூத்திரம் பற்றியும்
அதன் துர்வாடை
ஒரு பிணத்திற்கு சமமானது என்றாள்

என் பார்வையில் நம்பிக்கை இழந்தவள்
பிரத்தியேக திரவம் ஒன்று தடவி
தோலை சுருங்கச் செய்தாள்

ஒரு தீக்குச்சியில்
தன்னை எரித்துசாம்பலாக்கினாள்

நான்
பத்திரமாய் விழுந்துகிடந்த
அவள் காமத்தை கையில் ஏந்திச் சென்றேன்

காதலி 2

நீ தான் தொடங்கினாய்
என நான் தப்பித்துக்கொள்கிறேன்

அதன் மூலம் உன்னில்
குற்றவுணர்வை ஏற்றுகிறேன்

உன் நடத்தையில் உமிழ்கிறேன்

தொடர்ந்து புலம்பி
இரக்கம் ஏற்படுத்த முயல்கிறேன்

கரிக்கும் இரத்தம் உமட்டும் போதெல்லாம்
உன்னையும் வாந்தியெடுக்கிறேன்

எதுவும் முடியாமல் போக
கடிதம் எழுதுகிறேன்
சொற்களை நேர்ப்படுத்துகிறேன்

என் நோய்க்கு உன் பெயரை எதிர்ப்பார்க்கிறேன்

இதுதன் இறுதியென
உன் எண்களை இருவதாவது முறையாக அழுத்துகிறேன்

மன்னிப்பு கேட்கிறேன்

அப்போது நீ மன்னித்து
சில நிமிடங்கள் கடந்திருக்கும்.

மூன்று க‌விதைக‌ள்

கானலின் சுவடுகள்

என்பீறிடும் அழுகையும்
கனத்த கோபமும்
எப்போதும் உன்னை
ஒன்றும் செய்வதில்லை.

அவை
ஒருகரப்பான் பூச்சியை கொள்வதற்குக் கூட
சக்தியற்றவை

கால்களும் கைகளும் அறிவுமற்ற அவை
எப்போதும் என்னைச் சுற்றி
நான் விரும்பாத போதும்வட்டம் போடும்

ஒரு பட்டாம் பூச்சியைப்பிடிக்க
அவை பின்னிக்கொண்டு உருவாக்கும் வலையில்
கழுகு ஒன்று புகுந்து சென்று இரை பிடிக்கும்
அவை உருவாக்கும் வார்த்தைகள்
அர்த்தங்கள் தேடிச்செல்லும்
ஒரு குருடனின்தனிமை பயணத்தில்
காணக்கிடைப்பவை

அவை ஒன்றும் செய்ய திரணியற்றவை
அற்ப ஆயுள் கொண்டவை
சுயமாக இறப்பவை

பின்
தன்னைத் தொடரும்
அழுகையையும் கோபத்தையும்
காண முடியாதவை




நாம் பேசத்தொடங்கிய போது

நாம் பேசத்தொடங்கிய போது
சில வருடங்களின் மௌனம்
ஒரு சவர்க்கார பலூன் போல
சட்டென உடைந்தது.


நமது இறுதி சொல்லையும்

இறுதி பாவனையையும்
தேடிக்கொண்டு
இறுதியாய் சண்டையிட்ட
இடம் நோக்கி சென்றோம்.

அங்கு சிதறிகிடந்த

நமது மௌன காலங்களின்
காலண்டர் காகிதங்களை
நீ உணர்ச்சியற்று பொருக்கினாய்.

ஒரு குளி தோண்டி

அதை நட்டு வைத்தாய்

அதில் வரப்போகும்
கால மரத்தில்
ஒரு ஊஞ்சல் கட்டித்தர சொன்னாய்



சிதைவின் நகர்வு

ஓர் அன்பு நம்மை நிராகரிக்கும்போதும்
அன்பின் நுழைவாயில் அடைப்படும்போதும்
செய்வதற்கு ஒன்றும் இல்லை.

அன்பை வேண்டி பெறுதல் பிச்சையாகிவிடும்
தளர்ந்தமுகம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தலாம்
சகஜமாக சிரிப்பது அன்பை பரிகசித்ததாகிவிடலாம்
நமது அன்பின்மீது நமக்கே சந்தேகம் ஏற்படலாம்

நிராகரித்து நகரும் அன்பை பின் தொடரவும் இயலாது
அது பாதைகளற்ற பெருவெளியில் பயணிக்கக்கூடும்

நிராகரித்து நகரும் அன்பை வேரொரு சந்தர்பத்தில்
எதிர்கொள்ளுதல் பயங்கரமானது
அப்போதைய தன்மை அறிந்து
முகத்தை மாற்றும்திறன் கைவர வேண்டும்

நகர்ந்த அன்பு ஏற்படுத்திய வெற்றிடத்தை
கவிதை கொண்டு நிரப்ப இயலாது
அது மேலும் பிரிவின் துக்கத்தையும்
அயற்சியையும் ஏற்படுத்தும்

நிராகரிப்பு ஏற்படுத்தும் வெறுமையில்
வெறுமை இருப்பதில்லை

அது அன்பை தேடவும் சேகரிக்கவும்
சில சந்தர்பங்களைத்தருகிறது
கால்களை நகர வைக்கிறது.


ம‌.ந‌வீன்


Saturday, May 16, 2009

நீங்கள் சொல்ல இயலுமா?

முகிலன்: அனைவரும் அறிந்த செய்திதான், பெரிதாக விளக்கத் தேவையில்லை என்கிறார்.

பத்மா : பழையதை அரைக்கிறார் - தாங்கலே என்கிறார்.
சரிதான்!

சீனர்களின் ஒற்றுமையை குறித்து தெளிவான பார்வையும் முழுக்கதையும் தெரியாமல் இருக்கிறது.ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை முன்வைத்து -
1) சிகரெட் டன்ஹில் விவகாரம் (1977 - 1978)
2) புரோட்டொன் கார் (1980)
3) மெண்டரின் பழம் (1980 - 1984)
4) பினாங்கு குறுந்செய்தி (2008)

உங்கள் கைதொலைபேசி எண்களையும் முகவரிகளையும் வெளியிடுங்கள். நானே தேடி வந்து பெற்றுக்கொள்கிறேன்.


- மஹாத்மன்.

இம்மாத வல்லினத்தில்...


பல வேடிக்கை மனிதரைப் போல... o ம.நவீன்

கேப்டன் விஜயகாந்த் திரைப்படம்.சிறுவயதில் விஜயகாந்தைத் தொலைத்துவிடுகிறார் அவர் தந்தை.விஜயகாந்த் ஒரு ரௌடிகள் கூட்டத்தில் சேர்கிறார்.ஒரே ‘ஜம்பில்' பறந்து பத்து பேரை உதைக்கவும் ஒரே குத்தில் எதிரியைக் காடு மலையெல்லாம் கடந்து போய் அடுத்த நாட்டில் பாஸ்போர்ட் விசா இன்றி விழ வைக்கும் அளவுக்கு ஒரு ‘சூப்பர் மேனாக' இருக்கிறார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய பிறந்த ஊருக்கு வர நேர்கிறது.அங்கே அந்த ஊர் மக்கள் அத்தனைப் பேரையும் அடிமை படுத்தி வைத்திருக்கும் வில்லனைப் பார்த்து பொங்கி எழுகிறார்.அவர் கண் சிவக்கிறது. ‘ஏய்...’என ஆரம்பித்து நீண்ட வசனமெல்லாம் பேசுகிறார்.எலும்பும் தோலுமாக இருக்கும் இருநூறு முன்னூறு அப்பாவி ஜனங்கள் விஜயகாந்த் வசனத்துக்குத் கைத்தட்டுகின்றனர்.வெறும் முப்பது பேர் கொண்ட வில்லன்கள் கூட்டம் முன்னூறு பேரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது குறித்து அவர்கள் யாரும் உணர்ந்தவர்களாக இல்லை.பெற்றோ ரைச் சந்தித்தவுடன் ஒரு செண்டிமெண்டு பாடல்; சின்ன வயதிலிருந்து தன் மாமனுக்காக ஏதோ நம்பிக்கையில் காத்திருக்கும் கதாநாயகியுடன் கனவில் ஒரு டூயட்; விஜயகாந்த் பொங்கி எழும்போது பின்னனியில் ஒரு புரட்சி(?) பாடல்;இறுதியில் விஜயகாந்த் ஒரு பொட்டல் நிலத்தில் வில்லன்களுடன் மோதி அவர்களைக் கொல்லும் காட்சி.சில வருடங்களுக்குப் பின்...சிறையிலி ருந்து விடுதலையாகி அதே அத்தை மகளுடன் கலர் கலராகச் சட்டைப்போட்டுக்கொண்டு ஆடுவார் விஜயகாந்த். ஏறக்குறைய இதே பாணியிலான திரைக்கதையில் நாம் தமிழ்திரைப்பட கதாநாயகர்களான ரஜினி,கமல்,சத்யராஜ்,கார்த்திக்,பிரபு,விஜய்,அஜித் என அனைவரையும் பொருத்திப்பார்த்தால் ஏதோ ஒரு தமிழ் திரை ‘காவியத்தில்' அவர்கள் இதுபோன்ற கதாப்பாத்திரத் தில் நடித்திருப்பது நினைவிற்கு தட்டும்.இந்தப் பழைய அச்சில் கொஞ்சம் ‘கலை' ஊறுகாயையும் ‘பிரம்மாண்ட' அப்பளத்தையும் வைத்து மறைத்தால் பல சினிமா விமர்சகர்கள் உலக திரைப்படத்திற்கு நிகரானது என சப்புகொட்டும் ‘நான் கடவுள்' திரைப்படம் கிடைக்கும்.

இந்தத் திரைப்படம் குறித்து நான் ஏற்கனவே ‘அஞ்சடி'அகப்பக்கத்தில் (http://anjady.blogspot.com/) எழுதி பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டாலும் ஏன் இந்தத் திரைப்படம் குறித்து மட்டும் சாதகமாகவும் பாதகமாக வும் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன என்பது முக்கியமான கேள்வி.

பாலா எனும் ஓர் ஆளுமையின் மீதுள்ள கவர்ச்சி, இந்தப்படத்தை ஒரு ரசிகன் அணுகும் விதத்தை மாற்றியிருக்கலாம்; ஜெயமோகனின் ஆளுமையின் மீதுள்ள நம்பிக்கை இப்படத்தின் அத்தனைப் பலவீனங்களுக்கும் வேறொரு சார்பான தெளிவினை ஏற்படுத்தியிருக்கலாம், தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பேரரசுவின் திரைப்படத்தையும் உலகத் தரமானது என சொல்லத் தயங்காத சாருநிவேதிதாவின் ‘வாக்கு' மீது நம்பிக்கை இருக்கலாம், ‘புரியவில்லை' என்றால் முட்டாள் என சொல்லிவிடுவார்களோ என சிலர் கோணங்கியின் கதைகளைச் சுமந்து திரிவது போல இந்தப்படத்தையும் அணுகியிருக்கலாம். இதுபோன்ற உபரி காரணங்கள் அல்லாமல் கதையில் ஆன்மாவாக இருக்கும் உடல் குறையுள்ளவர்களின் வாழ்வும் அவர்களின் கொண்டாட்டங்களும் இந்தப் பழைய பிளேடை மறைத்திருக்கலாம்.

எழுத்தின் மூலம் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்' நாவலில் வரும் உருப்படிகளின் வாழ்வு தந்த அதிர்வலைகள் பாலாவின் காட்சி படிமங்களில் கிடைக்காதபோதும் நீண்ட அவர் உழைப்பிற்கு நாம் மரியாதை செலுத்தவே வேண்டும். (கவனிக்க. திட்டமிடப்பட்ட காலக்கெடுவை விட அதிக நாள் மற்றும் பணசெலவையும் இப்படம் ஏற்படுத்தியிருந்தாலும் அவற்றை நாம் ‘முறையான திட்டமின்மை' என கூறுதல் தவறு. இதெல்லாம் கலையின் வெவ்வேறு ரூபங்கள் என்றே நாம் நம்ப வேண்டும்.யப்பாடா.) ஆயினும் மீண்டும் மீண்டும் ஹீரோ இசத்தைக்காட்டும் அவர் திரைப்படங்கள் எப்படி ‘உலகத் தரமானது’என விமர்சகர்களால் சொல்லப்படுகின்றது என்பது என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.இது போன்ற ஆச்சரியங்கள் பலமுறை எனக்கு ஏற்பட்டதுண்டு.அதில் மிக முக்கியமாக இந்நாட்டின் நல்ல ஜனரஞ்சகப் படைப்புகளான ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் (வானத்து வேலிகள், தேடியிருந்த தருணங்கள், காதலினால் அல்ல,சூதாட்டம் ஆடும் காலம்) ஒரு தீவிர அல்லது நவீனத்தன்மைக் கொண்டதாக நம் ஊர் விமர்சகர்களால் புகழப்படும் போது ஏற்பட்டுவிடுகிறது. மற்றது ’கானாவின்' திரைப்படங்கள் இந்நாட்டில் நல்ல நகைச்சுவை நிறைந்ததாக நம்பப்படும்போது...



தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் 0 பாரதீ
"தீக்குளிக்காதீர்கள், உயிரை வதைக்காதீர்கள்' என்று ஒரு பக்கம் முழங்கிக்கொண்டே மறுபக்கம் தீக்குளித்த முத்துக்குமாருக்கு ‘வீரமகன்' பட்டம் தந்தார்கள். அவரது மரணத்தில் கவிதை படித்தார்கள். மேடை போட்டு வீரவசனம் பேசினார்கள். அவரது குடும்பத்திற்குப் பணம் கொடுத்தார்கள். காரியம் கண்ணுக்குத் தெரியாமல் போய் வீரியப் பேச்சுகள் விஸ்வரூபம் எடுத்தன. ‘வீரம், மானம், ரோசம்’மிக்க தமிழ் மக்களிடையே திடீர் ஹீரோவானார் முத்துக்குமார். விளைவு தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் ஜனீவாவிலும் இரண்டு மாதக் காலத்திற்குள் திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட பன்னிரெண்டு பேர் வரை (இந்த கட்டுரை எழுதும் நேரம் வரை - 2.5.2009) தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்...



ஆட்டுக்காரனும் குச்சுக்காட்டு சனமும் o பா.அ.சிவம்

நான் கோட்பாடுகளை அல்லது தியோரிகளை வைத்துக் கொண்டு மண்புழுக்களை அணுகுவதில்லை. அப்படி அணுகுவதற்கான அறிவும் திறனும் என்னிடம் இல்லை என்பதை நான் அறிவேன். எனது தோட்ட முகத்தை நான் மீண்டும் காணக் கிடைத்த போது எழுந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இந்நூலை அணுகினேன். இந்நாவலில் வரும் கதைமாந்தர்களும் சரி... பிராணிகளும் சரி... நாவலாசிரியர் சந்தித்த மனிதர்களா கவும் எதிர்கொண்ட கதாபாத்திரங்களாகவும்தான் இருக்க முடியும் என்பது எனது அனுமானம். அனுமானம் என்பதில் நம்பிக்கை இல்லைதான். எனினும், நாவலில் வந்து போகும் மனிதர்கள் யாவரும் தோட்டத்தில் முன்பு ஒரு முறை வாழ்ந்து மடிந்த அல்லது எங்கோ இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் சுட்டுவதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். நாவலில் குடிகொண்டுள்ள உண்மைதான் அது....



தமிழில் நவீன இலக்கியம் இருக்கின்றதா? oஷோபா சக்தி

நவீன இலக்கியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். இம்சை அரசன் புலிகேசிக்கு பின்நவீனத்துவ சினிமா என்று உரையெழுதிய எத்துவாளி எழுத்தாளர்களுக்கு மத்தியில்தானே நாமும் பொருத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதற்கெல்லாம் அரசியல் சார்ந்த செயற்பாடுகளும் நெகிழ்ச்சியான ஆனால் எல்லையிட்ட வரையரைகளும் உள்ளன. கோட்பாட்டாளர்கள் குறிப்பாக 15ம் நூற்றாண்டையொட்டி நவீன காலம் ஆரம்பிக்கிறது என்பார்கள். எப்போது ஆட்சிலிருந்து, கலையிலிருந்து, இலக்கியத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ தத்துவத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ அதற்கு பின்னான காலத்தை அவர்கள் நவீன காலமென்று குறிக்கிறார்கள். இந்த நீக்கம் பொருள் உற்பத்தி முறையின் பெருக்கம் எப்படி முதலாளிய சனநாயகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றதோ அதேபோல பண்பாட்டுத்தளத்தில் முதலாளிய சனநாயகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. ஆக, நவீன இலக்கியம் என்பது மத நீக்கம் செய்யப்பட்டதாகவும், அது ஆகக்குறைந்தது முதலாளிய சனநாயக விழுமியங்களைப் பேசுவதாயுமிருக்க வேண்டுமல்லவா! நம்முடைய தமிழ் இலக்கியம் அப்படித்தான் இருக்கிறதா?



புதிய தொடர்...பரதேசியின் நாட்குறிப்புகள்... o மஹாத்மன்

எனது நோக்கமில்லா தேடலில்லா திரிதலில் ‘சவ் கிட்’ என்ற சிவப்பு விளக்கு பிரதேசம் மறந்துவிட முடியாதபடிக்கு சில அனுபவங்களைத் தந்திருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் ‘சவ் கிட்’டின் இருப்பையும் மாற்றத்தையும் கண்டு வந்திருக்கிறேன். ஆனால் அதனை யாவும் ஆண்டு வாரியாக விளக்கமளிக்க நான் பேனா-காகிதத்தோடு அலைந்து திரிந்ததில்லை. அப்போதெல்லாம் முதுகில் எந்தவொரு பாரத்தையும் சுமக்காமல் கைக்கடிகாரமோ குளிர்கண்ணாடியோ அணியாமல் பையில் பணமில்லாமல் தேய்ந்து போன காலணியோடு வியர்வை நாற்ற உடையோடு அலைந்து திரிந்திருக்கிறேன். ‘ஏன் இப்படி இருந்தாய்?’ என குறுஞ்செய்தி வடூயாக, தொலைப்பேசி வாயிலாக, நேரில் பார்த்து கேட்பதற்கு முன்பாக சொல்லிவிடுகிறேன்; இனியாரும் இந்த கேள்வியை கேட்கக் கூடாது என்பதற்காக. தொடர்ந்து வாசியுங்கள். பதில் ஏதோ ஒரு மூலையில் அகப்படலாம். ராஜா லாவூட்டில் நுழைந்ததும் ஹோட்டல் மலாயாவை பார்ப்பீர்கள். அதற்கு அடுத்தது தான் ‘சவ் கிட்டின்’ இருதயப் பகுதி. முடிவடைவது முன்னாள் கேத்தே - ·பெடரல் தியேட்டர் வரை. அதன் இடது பக்க வட்டாரத்தையும் வலது பக்க வட்டாரத்தையும் சேர்த்தே ‘சவ் கிட்' என்று அழைப்பார்கள்...


திருநங்கைகளுடனான நேர்காணல்...

கவிதைகள்...

யுவராஜன் மற்றும் கோ.முனியாண்டியின் சிறுகதை...

அ.ரெங்கசாமி மற்றும் சை.பீர்முகமதுவின் பத்தி...

சீ.முத்துசாமியின் தொடர்...

இன்னும் நிறைய...



தொடர்ந்து வாசிக்க இம்மாத 'வல்லினம்' பிரதியைப் பாருங்கள்... தொடர்புக்கு ம.நவீன் - 0163194522 (valllinamm@gmail.com)

Monday, May 4, 2009

சீனர்கள் சினமடைந்தால்...


ஒவ்வொரு முறையும் தேர்தலில் வெற்றி அடைந்தாலோ தோல்வி அடைந்தாலோ ஆளும் கட்சியான அம்னோ - பாரிசான் நேஷனல், சீனர்களின் ஆதரவை பெரிதுப்படுத்தி பேசுவதை கண்டிருக்கலாம். 'பெரிய வெற்றி' யினை அடையும்போது சீனர்களின் ஆதரவுதான் என ஆய்ந்தறியப்படுவதும் 'பெரிய தோல்வி' என்று அடைந்தாலும் சீனர்களே காரணம் என்று ஆய்ந்தறியப்பட்டு அறிக்கை விடுகிறது பாரிசான் நேஷனல் அரசாங்கம்.

சொல்லப்பட்ட அந்தக் காரணம் ஏற்புடையதா? ஆய்வுக்குரிய விஷயமாகவும் சூழ்நிலையை 'எரிக்கும்' விஷயமாகவும் அக்காரணம் இருப்பது சரியா, தகுந்ததா என்பதில் மனதில் தோன்றி மறையும் கேள்வியாகும். ஆக புதிதாக, பாரிசான் புக்கிட் கந்தாங்கிலும் செலம்பாவிலும் தோற்ற போது சீனர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று சொன்னவர் அம்னோவின் துணைத் தலைவரும் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்.பக்காத்தான் ராயாட் உறுப்பு கட்சிகளான பிகேஆர், மற்றும் டிஏபி கட்சியின் ஆய்வுகள் வேறுபட்டிருக்கின்றன.அவர்கள், 'மக்கள்' தொடர்ந்து பாரிசானை புறக்கணிக்கிறார்கள் என்றார்கள். ஆனாலும் கூட இதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் கூடாதிருக்கிறது. பாரிசான் படுதோல்வி அடைந்திருந்தால் மட்டுமே 'மக்கள்' தொடர்ந்து பாரிசானை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள் எனலாம். மக்கள் பாரிசானை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற கூற்றை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

சீனர்கள் நன்றியற்றவர்கள், பரிசானை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என தாம் சொன்னதாக வந்த செய்தியை மறுத்திருந்தார் துணைப் பிரதமர் மொகிதீன் யாசின். சீன பத்திரிகை திரித்து கூறிவிட்டது தமக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். சீன பத்திரிகை நிருபர்கள் அப்படியா மலாய் மொழியில் பலவீனமடைந்திருக்கிறார்கள், இருக்காதே என்ற கருத்தும் நமக்குள் உதிக்கிறது. இந்நாட்டில் இந்தியர்களை விட மலாய்க்காரர்களைவிட சீன சமூகத்தினரே விகிதாச்சார பெரும்பான்மையில் பட்டப்படிப்பு கல்வியினை பெற்றிருக்கிறார்கள்.

'திரித்துக் கூறப்பட்டதாக' என சொல்லப்படும் இவ்விஷயம் மிகவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும், துணைப் பிரதமரின் ஓர் உரையை மட்டுமல்ல, உயர்மட்ட பதவிகளில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களின் உரையும் கூட கவனக்குறைவாகவோ அசட்டையாகவோ திரித்து எழுதுவது என்பது, அப்படி எழுதியவரின் மேல், அப்பத்திரிகையின் மேல், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். திரித்துக் கூறப்படுவது உண்மை என நிரூபிக்கப்படுமானால்; அது சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.மசீச - வின் தலைவர் ஓங் தீ கியாட், தேர்தலில் தோல்வி கண்டதினால் தன்மேல் குறை சொல்லப்படுவதையும் தன்னை நோக்கி சுட்டுவிரல் நீட்டப்படுவதையும் குறித்து அதிருப்தி அடைகிறார். அவர் கூறுவதாவது: தேர்தலின்போது தன் கட்சியான மசீச வேலையே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? நாங்களும் உழைத்தோம், ஆனால் மக்களின் தேர்வு அப்படி இருக்க, நாம் என்ன செய்ய முடியும்? ஜனநாயகத்தின்படி மக்கள் எடுக்கும் முடிவை மனந்திறந்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

புதிய பிரதமரான டத்தோஸ்ரீ முகமட் நஜீப் துன் ரசாக் இந்த விஷயத்தில் தன் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும், அரசை ஆதரிக்கவில்லை என்று சீனர்களை குற்றப்படுத்திருக்கக் கூடாது என்று விமர்சிப்பது அதிக பட்சம் என ஒரு சாராரும் இப்படியே அம்னோ தலைவர் சொல்லிக்கொண்டே இருந்தாரானால், ஒரு வேளை, ஒட்டுமொத்த சீன சமூகமே அரசின் மீது கோபப்படும் சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பும் உண்டு என்று மற்றொரு சாரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனையொட்டி மக்கள் மத்தியில் உலாவும் பேச்சு என்னவெனில், பாரிசான் கூட்டணிக் கட்சிக்குள் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் 'பனிப்போர்' நீடிக்கும் என்று தெரியவில்லை. இதில் மஇகா நீங்கலான ஒன்று. எப்போது பார்த்தாலும் அழுத பிள்ளை, அது வேண்டும் - இது வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பது போல மசீச நச்சரிப்பதில்லை. மசீச தனக்கு தேவையான யாவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மஇகாவிற்கு ஒரு இறைச்சித் துண்டை கொடுத்து அவ்வப்போது திருப்திபடுத்துவது போல மசீச - விடம் செய்ய இயலாது.எல்லா மலாய்க்காரர்களையும் ஒன்று படுத்துவதற்கான வியூகத்தை அம்னோவின் தலைவர் சிந்தித்து செயல்படுத்திடும் கட்டாயத்தில் இருக்கிறார். பாஸ்ஸோடும் கெ அடிலானோடும் மலாய்க்காரர்கள் யாவரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியானது கத்தி மேல் நடக்கும் வித்தைக்கு ஒப்பானது. கரணம் தப்பினால் மரணம் என்றுகூட சொல்லாம்.

இதன் முக்கியத்துவம் இக்காலக் கட்டத்தில் ஏன் அவசியமான ஒன்றாக திகழ்கிறது என்ற கேள்வி மனதில் எழும்பலாம். மசீச -விலும் டிஏபி -யிலும் கெராக்கானிலும் உள்ள சீனர்கள் ஒரு மேசையில் அமர்ந்து திட்டமிட்டு பேசி ஆலோசித்து ஒரே தலையணையை பகிர்ந்துக் கொள்வார்களேயானால் மலாய்க்காரர்கள் எப்படி இருக்க வேண்டும், யோசித்துப் பாருங்கள்!

சீனர்களிடமிருந்து வெளிப்பட்ட ஒற்றுமையை குறித்து இந்த நாட்டிலேயே நாம் அறிந்த வரலாறுகள் உண்டு.1) - சிகரெட் டன்ஹில் விவகாரம் (1977 அல்லது 1978)2) - புரோட்டோன் - (1980)3) - மென்டரின் பழம் விவகாரம் - (1980 - 1984)4) - பினாங்கு குறுஞ்செய்தி - பொது தேர்தலுக்குப்பின் - (2008)

ஆக, சீனர்கள் மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கட்சி ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ஒரு விஷயம், அவர்களின் ஒட்டுமொத்த இனத்திற்கும் பாதகம் விளைவிக்கிறதென்றால் - ஒன்று சேர்வதற்கு மூன்று வரி குறுஞ்செய்தி போதுமானதாக இருக்கின்றது.

பாரிசான், இடைத் தேர்தலில் தோற்ற விஷயத்திற்கு திரும்புவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை சீனர்களே என்று இந்நாட்டில் கிடையாது. இந்தியர்கள் 'பெரும்பான்மை' என்ற வார்த்தைக்கு ஏற்றவர்கள் அல்லர். எல்லா இடங்களிலும் சிதறிய வண்ணம் இருப்பதால் தொகுதி அடிப்படையில் 'பெரும்பான்மை' என்ற சொல்லுக்கு தகுதி வாய்ந்தவர்கள் மாலாய்க்காரர்களே. ஆகவே, சீனர்களின் ஆதரவு பாரிசானுக்கு கிடைக்கவில்லை என்ற ஆய்வறிக்கையானது வெறும் ஆத்திரத்தின் வெளிப்பாடு தேர்தல் ஓட்டுச் சீட்டின் மேல் - இது சீன சமூகம், இது மாலாய்க்கார சமூகம், இது இந்தியர்களின் சமூகம் என்றா குறிப்பிடப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடுமானால் யார், யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் யார், யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வியே எழும்ப அவசியமில்லாமல் போயிருக்கும். இதுவா ஜனநாயகம்? 'பாரிசானை சீனர்கள் ஆதரிக்கவில்லை' என்று கூறுவதே ஜனநாயகத்திறகு எதிரான உரையாகும்.

இன்று பாரிசானுக்கு இருக்கின்ற முதன்மையான முக்கியமான பெரிதான பிரச்சணை என்னவெனில் சொந்த இனத்தை அதாவது மலாய்க்காரர்களை மீண்டும் எப்படி கவர்வது என்பதாகும்.

பாஸ் கட்சிக்கும் கெஅடிலானுக்கும் டிஏபிக்கும் பிரிந்து சிதறி கிடக்கும் மலாய் இனத்தை எவ்வகையிலும் அம்னோவோ பாரிசானோ ஒன்றினைக்கும் முயற்சிகள், எடுக்கப்படாதிருக்கும் பட்சத்தில் அல்லது எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் அடுத்து வரும் 13-வது பொது தேர்தலில் பாரிசான் அரசாங்கம் பிஆர் அரசாங்கமாக மாறுவது திண்ணம்.

பாஸ் கட்சிக்கும் கெ அடிலானுக்கும் டிஏபிக்கும் பிரிந்து போன மலாய்க்காரர்களை இனி சேர்க்கவோ சரியாக சொன்னால் பாரிசானுக்கு திரும்பும்படியான நிகழ்வு இனி நடக்க வாய்ப்பேயில்லை என்றும் அதற்கு காரணம் எதிர்கட்சிகள் இக்காலக்கட்டத்தில் பலம் வாய்ந்ததாக மாறி விட்டதே ஆகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இடைத் தேர்தலில் தோற்றது குறித்து சீனர்களை மட்டும் குறைக்கூறிக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே அவர்களின் கையில்;தான் நாட்டின் பொருளாதார குடுமி இருக்கின்றது. அவர்களின் பிடியில் இந்நாட்டின் அரசியல் அகப்படும்போது (அரசியலில், அதுவும் ஜனநாயகத்தில், எதுவும் நடக்கலாம்) மலாய் இனமும் நாடும் எங்கே போகும் என்று சொல்ல முடியாது.

விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் நீதி நேர்மை, நியாயமும் பாரிசானில் குறைந்துக் கொண்டே வருகிறது. இதன் தங்க முலாம் பூசும் நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றன. அவ்வப்போது அரங்கேறியும் வருகின்றன.பக்காத்தான் ராயாட்டில் - புரிந்துணர்வு மனப்பான்மை அதிகளவு தேவைப்படுகின்றது என்றே சமீபத்திய சம்பவங்கள் சுட்டிகாட்டுகின்றன. ஆனால், ஒப்பிட்டு பார்ப்போமானால் பாரிசானைவிட பக்காத்தான் ராயாட்டில் மக்களின் அதிகளவு ஆதரவு காணப்படுவதாகவே தோன்றுகிறது. இவ்வெண்ணம் பரவி வருவது பாரிசானுக்கு ஆபத்து தவிர வேறென்ன?

சரி. அம்னோ மலாய்க்காரர்கள் மேல் ஏனிந்த கரிசனம் என்று நீங்கள் கேட்கலாம். இதனையும் சொல்லிவிட்டால் தான் இந்தக் கட்டுரை எழுதியதின் நோக்கம் நிறைவடையும்.

பாரிசான் தோற்றால், பிஆர் அரசாங்கம் வரும். பிஆர் கூட்டணிக்குள் கெஅடிலானும் டிஏபியும் சரிசமமாக நடந்து போவதற்கும் அதிக சாத்தியங்கள் உண்டு. அதன் கொள்கைகள் நமக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றன. அன்வார் இப்ராஹிம் தன்னை ஒரு பக்குவப்பட்ட ஓர் அரசியல்வாதியாகவே இப்போதெல்லாம் காட்டிக்கொள்கிறார். ஆனால், பாஸ் கட்சியின் அடிப்படை கொள்கையானது நமக்கு அலர்ஜியை தரக்கூடியது. அதற்கான முதன்மை காரணம் -இஸ்லாம்!

இஸ்லாமிய மதத்தின் சட்ட நடைமுறைகளும் ஆதிக்க வெளிப்பாடும் பல்லினம் வாழும் இந்நாட்டிற்கு ஒத்துவராதது ஆகும். இதனை புரிந்துக் கொள்ளாமலேயே பாஸ் கட்சியின் பிரதிநிதிகளின் ஒருவரான முகமட் நிஸார் ஜமாலுடின் புக்கிட் கந்தாங்கில் வெற்றி பெற்ற பின் தைப்பிங் மாநகராட்சி மன்றத்தில் உரையாற்றியது என்னவெனில் : 'பாஸின் இந்த வெற்றி மகிழ்சியளிக்கிறது@ அதைவிட மகிழ்ச்சி இஸ்hமியர் அல்லாதவர்கள் பாஸை ஏற்றுக் கொண்டதாகும். ஆகவே அதனால் தான் 'பாஸ் எல்லோருக்குமானது' என்பது அடையாள குணமாக இருந்து, பிறகு முடிவடைவது 'இஸ்லாம் எல்லோருக்குமானது ஆகும்'.

எப்படிப் பார்த்தாலும் கெஅடிலானோடும் டிஏபியோடும் பாஸ் கட்சி கொள்கையினால் நிலைத்திருக்காது. இந்த விஷயத்தில் டிஏபி கட்சியில் இருக்கும் சீனர்கள் சினமடைந்தால் பாஸ் தன் கொள்கைகளை பரப்பவோ செயற்படுத்தவோ விடமாட்டார்கள்.

ஆக, பாரிசான் ஆனாலும் சரி, பிஆர் கூட்டணியானாலும் சரி, சீனர்களை கோபப்படுத்துவது நஷ்டத்தையும் கஷ்டத்தையும் மட்டுமே கொண்டு வரும்.


மஹாத்மன்.

Sunday, May 3, 2009

ஷோபாசக்தி - புதிய சிறுகதைத் தொகுப்பு

“ஒவ்வொரு கொலை விழும்போதும், ஒவ்வொரு குண்டுவீச்சு நிகழும்போதும், ஒரு பட்டினிச்சாவு நிகழும்போதும், நாடுகடத்தல் உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு அகதியைக் காணும்போதும் அவர்கள் குற்ற உணர்வுகளில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். அந்தக் குற்ற உணர்வே அவர்களை எழுத இடைவிடாமல் தூண்டிக்கொண்டிருக்கிறது. இந்தக் குற்ற உணர்வு அவர்களின் மரணம்வரை அவர்களைக் கைவிடாதிருக்கட்டும்!”







திரு. முடுலிங்க (அநிச்ச) ,விலங்குப் பண்ணை (பவளமல்லி) ,Cross Fire ( காலம்), ரம்ழான் (புதுவிசை),குண்டு டயானா (தீராநதி) ,எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (எதுவரை),பரபாஸ் (காலம்), ,தமிழ் (அநிச்ச),இயக்கம் F ( உயிர்மெய்),வெள்ளிக்கிழமை (இன்மை) ஆகிய பத்துக் கதைகளின் தொகுப்பு.



பிரதிகளிற்கு:கருப்புப் பிரதிகள்B74,
பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை
சென்னை - 600 005
பேச: 00 91 94442 72500
மின்னஞ்சல்:karppu2004@rediffmail.com