Saturday, May 30, 2009

மூன்று க‌விதைக‌ள்

கானலின் சுவடுகள்

என்பீறிடும் அழுகையும்
கனத்த கோபமும்
எப்போதும் உன்னை
ஒன்றும் செய்வதில்லை.

அவை
ஒருகரப்பான் பூச்சியை கொள்வதற்குக் கூட
சக்தியற்றவை

கால்களும் கைகளும் அறிவுமற்ற அவை
எப்போதும் என்னைச் சுற்றி
நான் விரும்பாத போதும்வட்டம் போடும்

ஒரு பட்டாம் பூச்சியைப்பிடிக்க
அவை பின்னிக்கொண்டு உருவாக்கும் வலையில்
கழுகு ஒன்று புகுந்து சென்று இரை பிடிக்கும்
அவை உருவாக்கும் வார்த்தைகள்
அர்த்தங்கள் தேடிச்செல்லும்
ஒரு குருடனின்தனிமை பயணத்தில்
காணக்கிடைப்பவை

அவை ஒன்றும் செய்ய திரணியற்றவை
அற்ப ஆயுள் கொண்டவை
சுயமாக இறப்பவை

பின்
தன்னைத் தொடரும்
அழுகையையும் கோபத்தையும்
காண முடியாதவை




நாம் பேசத்தொடங்கிய போது

நாம் பேசத்தொடங்கிய போது
சில வருடங்களின் மௌனம்
ஒரு சவர்க்கார பலூன் போல
சட்டென உடைந்தது.


நமது இறுதி சொல்லையும்

இறுதி பாவனையையும்
தேடிக்கொண்டு
இறுதியாய் சண்டையிட்ட
இடம் நோக்கி சென்றோம்.

அங்கு சிதறிகிடந்த

நமது மௌன காலங்களின்
காலண்டர் காகிதங்களை
நீ உணர்ச்சியற்று பொருக்கினாய்.

ஒரு குளி தோண்டி

அதை நட்டு வைத்தாய்

அதில் வரப்போகும்
கால மரத்தில்
ஒரு ஊஞ்சல் கட்டித்தர சொன்னாய்



சிதைவின் நகர்வு

ஓர் அன்பு நம்மை நிராகரிக்கும்போதும்
அன்பின் நுழைவாயில் அடைப்படும்போதும்
செய்வதற்கு ஒன்றும் இல்லை.

அன்பை வேண்டி பெறுதல் பிச்சையாகிவிடும்
தளர்ந்தமுகம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தலாம்
சகஜமாக சிரிப்பது அன்பை பரிகசித்ததாகிவிடலாம்
நமது அன்பின்மீது நமக்கே சந்தேகம் ஏற்படலாம்

நிராகரித்து நகரும் அன்பை பின் தொடரவும் இயலாது
அது பாதைகளற்ற பெருவெளியில் பயணிக்கக்கூடும்

நிராகரித்து நகரும் அன்பை வேரொரு சந்தர்பத்தில்
எதிர்கொள்ளுதல் பயங்கரமானது
அப்போதைய தன்மை அறிந்து
முகத்தை மாற்றும்திறன் கைவர வேண்டும்

நகர்ந்த அன்பு ஏற்படுத்திய வெற்றிடத்தை
கவிதை கொண்டு நிரப்ப இயலாது
அது மேலும் பிரிவின் துக்கத்தையும்
அயற்சியையும் ஏற்படுத்தும்

நிராகரிப்பு ஏற்படுத்தும் வெறுமையில்
வெறுமை இருப்பதில்லை

அது அன்பை தேடவும் சேகரிக்கவும்
சில சந்தர்பங்களைத்தருகிறது
கால்களை நகர வைக்கிறது.


ம‌.ந‌வீன்


No comments:

Post a Comment