Saturday, May 16, 2009

இம்மாத வல்லினத்தில்...


பல வேடிக்கை மனிதரைப் போல... o ம.நவீன்

கேப்டன் விஜயகாந்த் திரைப்படம்.சிறுவயதில் விஜயகாந்தைத் தொலைத்துவிடுகிறார் அவர் தந்தை.விஜயகாந்த் ஒரு ரௌடிகள் கூட்டத்தில் சேர்கிறார்.ஒரே ‘ஜம்பில்' பறந்து பத்து பேரை உதைக்கவும் ஒரே குத்தில் எதிரியைக் காடு மலையெல்லாம் கடந்து போய் அடுத்த நாட்டில் பாஸ்போர்ட் விசா இன்றி விழ வைக்கும் அளவுக்கு ஒரு ‘சூப்பர் மேனாக' இருக்கிறார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய பிறந்த ஊருக்கு வர நேர்கிறது.அங்கே அந்த ஊர் மக்கள் அத்தனைப் பேரையும் அடிமை படுத்தி வைத்திருக்கும் வில்லனைப் பார்த்து பொங்கி எழுகிறார்.அவர் கண் சிவக்கிறது. ‘ஏய்...’என ஆரம்பித்து நீண்ட வசனமெல்லாம் பேசுகிறார்.எலும்பும் தோலுமாக இருக்கும் இருநூறு முன்னூறு அப்பாவி ஜனங்கள் விஜயகாந்த் வசனத்துக்குத் கைத்தட்டுகின்றனர்.வெறும் முப்பது பேர் கொண்ட வில்லன்கள் கூட்டம் முன்னூறு பேரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது குறித்து அவர்கள் யாரும் உணர்ந்தவர்களாக இல்லை.பெற்றோ ரைச் சந்தித்தவுடன் ஒரு செண்டிமெண்டு பாடல்; சின்ன வயதிலிருந்து தன் மாமனுக்காக ஏதோ நம்பிக்கையில் காத்திருக்கும் கதாநாயகியுடன் கனவில் ஒரு டூயட்; விஜயகாந்த் பொங்கி எழும்போது பின்னனியில் ஒரு புரட்சி(?) பாடல்;இறுதியில் விஜயகாந்த் ஒரு பொட்டல் நிலத்தில் வில்லன்களுடன் மோதி அவர்களைக் கொல்லும் காட்சி.சில வருடங்களுக்குப் பின்...சிறையிலி ருந்து விடுதலையாகி அதே அத்தை மகளுடன் கலர் கலராகச் சட்டைப்போட்டுக்கொண்டு ஆடுவார் விஜயகாந்த். ஏறக்குறைய இதே பாணியிலான திரைக்கதையில் நாம் தமிழ்திரைப்பட கதாநாயகர்களான ரஜினி,கமல்,சத்யராஜ்,கார்த்திக்,பிரபு,விஜய்,அஜித் என அனைவரையும் பொருத்திப்பார்த்தால் ஏதோ ஒரு தமிழ் திரை ‘காவியத்தில்' அவர்கள் இதுபோன்ற கதாப்பாத்திரத் தில் நடித்திருப்பது நினைவிற்கு தட்டும்.இந்தப் பழைய அச்சில் கொஞ்சம் ‘கலை' ஊறுகாயையும் ‘பிரம்மாண்ட' அப்பளத்தையும் வைத்து மறைத்தால் பல சினிமா விமர்சகர்கள் உலக திரைப்படத்திற்கு நிகரானது என சப்புகொட்டும் ‘நான் கடவுள்' திரைப்படம் கிடைக்கும்.

இந்தத் திரைப்படம் குறித்து நான் ஏற்கனவே ‘அஞ்சடி'அகப்பக்கத்தில் (http://anjady.blogspot.com/) எழுதி பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டாலும் ஏன் இந்தத் திரைப்படம் குறித்து மட்டும் சாதகமாகவும் பாதகமாக வும் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன என்பது முக்கியமான கேள்வி.

பாலா எனும் ஓர் ஆளுமையின் மீதுள்ள கவர்ச்சி, இந்தப்படத்தை ஒரு ரசிகன் அணுகும் விதத்தை மாற்றியிருக்கலாம்; ஜெயமோகனின் ஆளுமையின் மீதுள்ள நம்பிக்கை இப்படத்தின் அத்தனைப் பலவீனங்களுக்கும் வேறொரு சார்பான தெளிவினை ஏற்படுத்தியிருக்கலாம், தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பேரரசுவின் திரைப்படத்தையும் உலகத் தரமானது என சொல்லத் தயங்காத சாருநிவேதிதாவின் ‘வாக்கு' மீது நம்பிக்கை இருக்கலாம், ‘புரியவில்லை' என்றால் முட்டாள் என சொல்லிவிடுவார்களோ என சிலர் கோணங்கியின் கதைகளைச் சுமந்து திரிவது போல இந்தப்படத்தையும் அணுகியிருக்கலாம். இதுபோன்ற உபரி காரணங்கள் அல்லாமல் கதையில் ஆன்மாவாக இருக்கும் உடல் குறையுள்ளவர்களின் வாழ்வும் அவர்களின் கொண்டாட்டங்களும் இந்தப் பழைய பிளேடை மறைத்திருக்கலாம்.

எழுத்தின் மூலம் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்' நாவலில் வரும் உருப்படிகளின் வாழ்வு தந்த அதிர்வலைகள் பாலாவின் காட்சி படிமங்களில் கிடைக்காதபோதும் நீண்ட அவர் உழைப்பிற்கு நாம் மரியாதை செலுத்தவே வேண்டும். (கவனிக்க. திட்டமிடப்பட்ட காலக்கெடுவை விட அதிக நாள் மற்றும் பணசெலவையும் இப்படம் ஏற்படுத்தியிருந்தாலும் அவற்றை நாம் ‘முறையான திட்டமின்மை' என கூறுதல் தவறு. இதெல்லாம் கலையின் வெவ்வேறு ரூபங்கள் என்றே நாம் நம்ப வேண்டும்.யப்பாடா.) ஆயினும் மீண்டும் மீண்டும் ஹீரோ இசத்தைக்காட்டும் அவர் திரைப்படங்கள் எப்படி ‘உலகத் தரமானது’என விமர்சகர்களால் சொல்லப்படுகின்றது என்பது என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.இது போன்ற ஆச்சரியங்கள் பலமுறை எனக்கு ஏற்பட்டதுண்டு.அதில் மிக முக்கியமாக இந்நாட்டின் நல்ல ஜனரஞ்சகப் படைப்புகளான ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் (வானத்து வேலிகள், தேடியிருந்த தருணங்கள், காதலினால் அல்ல,சூதாட்டம் ஆடும் காலம்) ஒரு தீவிர அல்லது நவீனத்தன்மைக் கொண்டதாக நம் ஊர் விமர்சகர்களால் புகழப்படும் போது ஏற்பட்டுவிடுகிறது. மற்றது ’கானாவின்' திரைப்படங்கள் இந்நாட்டில் நல்ல நகைச்சுவை நிறைந்ததாக நம்பப்படும்போது...



தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் 0 பாரதீ
"தீக்குளிக்காதீர்கள், உயிரை வதைக்காதீர்கள்' என்று ஒரு பக்கம் முழங்கிக்கொண்டே மறுபக்கம் தீக்குளித்த முத்துக்குமாருக்கு ‘வீரமகன்' பட்டம் தந்தார்கள். அவரது மரணத்தில் கவிதை படித்தார்கள். மேடை போட்டு வீரவசனம் பேசினார்கள். அவரது குடும்பத்திற்குப் பணம் கொடுத்தார்கள். காரியம் கண்ணுக்குத் தெரியாமல் போய் வீரியப் பேச்சுகள் விஸ்வரூபம் எடுத்தன. ‘வீரம், மானம், ரோசம்’மிக்க தமிழ் மக்களிடையே திடீர் ஹீரோவானார் முத்துக்குமார். விளைவு தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் ஜனீவாவிலும் இரண்டு மாதக் காலத்திற்குள் திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட பன்னிரெண்டு பேர் வரை (இந்த கட்டுரை எழுதும் நேரம் வரை - 2.5.2009) தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்...



ஆட்டுக்காரனும் குச்சுக்காட்டு சனமும் o பா.அ.சிவம்

நான் கோட்பாடுகளை அல்லது தியோரிகளை வைத்துக் கொண்டு மண்புழுக்களை அணுகுவதில்லை. அப்படி அணுகுவதற்கான அறிவும் திறனும் என்னிடம் இல்லை என்பதை நான் அறிவேன். எனது தோட்ட முகத்தை நான் மீண்டும் காணக் கிடைத்த போது எழுந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இந்நூலை அணுகினேன். இந்நாவலில் வரும் கதைமாந்தர்களும் சரி... பிராணிகளும் சரி... நாவலாசிரியர் சந்தித்த மனிதர்களா கவும் எதிர்கொண்ட கதாபாத்திரங்களாகவும்தான் இருக்க முடியும் என்பது எனது அனுமானம். அனுமானம் என்பதில் நம்பிக்கை இல்லைதான். எனினும், நாவலில் வந்து போகும் மனிதர்கள் யாவரும் தோட்டத்தில் முன்பு ஒரு முறை வாழ்ந்து மடிந்த அல்லது எங்கோ இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் சுட்டுவதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். நாவலில் குடிகொண்டுள்ள உண்மைதான் அது....



தமிழில் நவீன இலக்கியம் இருக்கின்றதா? oஷோபா சக்தி

நவீன இலக்கியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். இம்சை அரசன் புலிகேசிக்கு பின்நவீனத்துவ சினிமா என்று உரையெழுதிய எத்துவாளி எழுத்தாளர்களுக்கு மத்தியில்தானே நாமும் பொருத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதற்கெல்லாம் அரசியல் சார்ந்த செயற்பாடுகளும் நெகிழ்ச்சியான ஆனால் எல்லையிட்ட வரையரைகளும் உள்ளன. கோட்பாட்டாளர்கள் குறிப்பாக 15ம் நூற்றாண்டையொட்டி நவீன காலம் ஆரம்பிக்கிறது என்பார்கள். எப்போது ஆட்சிலிருந்து, கலையிலிருந்து, இலக்கியத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ தத்துவத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ அதற்கு பின்னான காலத்தை அவர்கள் நவீன காலமென்று குறிக்கிறார்கள். இந்த நீக்கம் பொருள் உற்பத்தி முறையின் பெருக்கம் எப்படி முதலாளிய சனநாயகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றதோ அதேபோல பண்பாட்டுத்தளத்தில் முதலாளிய சனநாயகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. ஆக, நவீன இலக்கியம் என்பது மத நீக்கம் செய்யப்பட்டதாகவும், அது ஆகக்குறைந்தது முதலாளிய சனநாயக விழுமியங்களைப் பேசுவதாயுமிருக்க வேண்டுமல்லவா! நம்முடைய தமிழ் இலக்கியம் அப்படித்தான் இருக்கிறதா?



புதிய தொடர்...பரதேசியின் நாட்குறிப்புகள்... o மஹாத்மன்

எனது நோக்கமில்லா தேடலில்லா திரிதலில் ‘சவ் கிட்’ என்ற சிவப்பு விளக்கு பிரதேசம் மறந்துவிட முடியாதபடிக்கு சில அனுபவங்களைத் தந்திருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் ‘சவ் கிட்’டின் இருப்பையும் மாற்றத்தையும் கண்டு வந்திருக்கிறேன். ஆனால் அதனை யாவும் ஆண்டு வாரியாக விளக்கமளிக்க நான் பேனா-காகிதத்தோடு அலைந்து திரிந்ததில்லை. அப்போதெல்லாம் முதுகில் எந்தவொரு பாரத்தையும் சுமக்காமல் கைக்கடிகாரமோ குளிர்கண்ணாடியோ அணியாமல் பையில் பணமில்லாமல் தேய்ந்து போன காலணியோடு வியர்வை நாற்ற உடையோடு அலைந்து திரிந்திருக்கிறேன். ‘ஏன் இப்படி இருந்தாய்?’ என குறுஞ்செய்தி வடூயாக, தொலைப்பேசி வாயிலாக, நேரில் பார்த்து கேட்பதற்கு முன்பாக சொல்லிவிடுகிறேன்; இனியாரும் இந்த கேள்வியை கேட்கக் கூடாது என்பதற்காக. தொடர்ந்து வாசியுங்கள். பதில் ஏதோ ஒரு மூலையில் அகப்படலாம். ராஜா லாவூட்டில் நுழைந்ததும் ஹோட்டல் மலாயாவை பார்ப்பீர்கள். அதற்கு அடுத்தது தான் ‘சவ் கிட்டின்’ இருதயப் பகுதி. முடிவடைவது முன்னாள் கேத்தே - ·பெடரல் தியேட்டர் வரை. அதன் இடது பக்க வட்டாரத்தையும் வலது பக்க வட்டாரத்தையும் சேர்த்தே ‘சவ் கிட்' என்று அழைப்பார்கள்...


திருநங்கைகளுடனான நேர்காணல்...

கவிதைகள்...

யுவராஜன் மற்றும் கோ.முனியாண்டியின் சிறுகதை...

அ.ரெங்கசாமி மற்றும் சை.பீர்முகமதுவின் பத்தி...

சீ.முத்துசாமியின் தொடர்...

இன்னும் நிறைய...



தொடர்ந்து வாசிக்க இம்மாத 'வல்லினம்' பிரதியைப் பாருங்கள்... தொடர்புக்கு ம.நவீன் - 0163194522 (valllinamm@gmail.com)

No comments:

Post a Comment