Monday, May 4, 2009

சீனர்கள் சினமடைந்தால்...


ஒவ்வொரு முறையும் தேர்தலில் வெற்றி அடைந்தாலோ தோல்வி அடைந்தாலோ ஆளும் கட்சியான அம்னோ - பாரிசான் நேஷனல், சீனர்களின் ஆதரவை பெரிதுப்படுத்தி பேசுவதை கண்டிருக்கலாம். 'பெரிய வெற்றி' யினை அடையும்போது சீனர்களின் ஆதரவுதான் என ஆய்ந்தறியப்படுவதும் 'பெரிய தோல்வி' என்று அடைந்தாலும் சீனர்களே காரணம் என்று ஆய்ந்தறியப்பட்டு அறிக்கை விடுகிறது பாரிசான் நேஷனல் அரசாங்கம்.

சொல்லப்பட்ட அந்தக் காரணம் ஏற்புடையதா? ஆய்வுக்குரிய விஷயமாகவும் சூழ்நிலையை 'எரிக்கும்' விஷயமாகவும் அக்காரணம் இருப்பது சரியா, தகுந்ததா என்பதில் மனதில் தோன்றி மறையும் கேள்வியாகும். ஆக புதிதாக, பாரிசான் புக்கிட் கந்தாங்கிலும் செலம்பாவிலும் தோற்ற போது சீனர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று சொன்னவர் அம்னோவின் துணைத் தலைவரும் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்.பக்காத்தான் ராயாட் உறுப்பு கட்சிகளான பிகேஆர், மற்றும் டிஏபி கட்சியின் ஆய்வுகள் வேறுபட்டிருக்கின்றன.அவர்கள், 'மக்கள்' தொடர்ந்து பாரிசானை புறக்கணிக்கிறார்கள் என்றார்கள். ஆனாலும் கூட இதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் கூடாதிருக்கிறது. பாரிசான் படுதோல்வி அடைந்திருந்தால் மட்டுமே 'மக்கள்' தொடர்ந்து பாரிசானை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள் எனலாம். மக்கள் பாரிசானை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற கூற்றை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

சீனர்கள் நன்றியற்றவர்கள், பரிசானை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என தாம் சொன்னதாக வந்த செய்தியை மறுத்திருந்தார் துணைப் பிரதமர் மொகிதீன் யாசின். சீன பத்திரிகை திரித்து கூறிவிட்டது தமக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். சீன பத்திரிகை நிருபர்கள் அப்படியா மலாய் மொழியில் பலவீனமடைந்திருக்கிறார்கள், இருக்காதே என்ற கருத்தும் நமக்குள் உதிக்கிறது. இந்நாட்டில் இந்தியர்களை விட மலாய்க்காரர்களைவிட சீன சமூகத்தினரே விகிதாச்சார பெரும்பான்மையில் பட்டப்படிப்பு கல்வியினை பெற்றிருக்கிறார்கள்.

'திரித்துக் கூறப்பட்டதாக' என சொல்லப்படும் இவ்விஷயம் மிகவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும், துணைப் பிரதமரின் ஓர் உரையை மட்டுமல்ல, உயர்மட்ட பதவிகளில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களின் உரையும் கூட கவனக்குறைவாகவோ அசட்டையாகவோ திரித்து எழுதுவது என்பது, அப்படி எழுதியவரின் மேல், அப்பத்திரிகையின் மேல், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். திரித்துக் கூறப்படுவது உண்மை என நிரூபிக்கப்படுமானால்; அது சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.மசீச - வின் தலைவர் ஓங் தீ கியாட், தேர்தலில் தோல்வி கண்டதினால் தன்மேல் குறை சொல்லப்படுவதையும் தன்னை நோக்கி சுட்டுவிரல் நீட்டப்படுவதையும் குறித்து அதிருப்தி அடைகிறார். அவர் கூறுவதாவது: தேர்தலின்போது தன் கட்சியான மசீச வேலையே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? நாங்களும் உழைத்தோம், ஆனால் மக்களின் தேர்வு அப்படி இருக்க, நாம் என்ன செய்ய முடியும்? ஜனநாயகத்தின்படி மக்கள் எடுக்கும் முடிவை மனந்திறந்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

புதிய பிரதமரான டத்தோஸ்ரீ முகமட் நஜீப் துன் ரசாக் இந்த விஷயத்தில் தன் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும், அரசை ஆதரிக்கவில்லை என்று சீனர்களை குற்றப்படுத்திருக்கக் கூடாது என்று விமர்சிப்பது அதிக பட்சம் என ஒரு சாராரும் இப்படியே அம்னோ தலைவர் சொல்லிக்கொண்டே இருந்தாரானால், ஒரு வேளை, ஒட்டுமொத்த சீன சமூகமே அரசின் மீது கோபப்படும் சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பும் உண்டு என்று மற்றொரு சாரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனையொட்டி மக்கள் மத்தியில் உலாவும் பேச்சு என்னவெனில், பாரிசான் கூட்டணிக் கட்சிக்குள் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் 'பனிப்போர்' நீடிக்கும் என்று தெரியவில்லை. இதில் மஇகா நீங்கலான ஒன்று. எப்போது பார்த்தாலும் அழுத பிள்ளை, அது வேண்டும் - இது வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பது போல மசீச நச்சரிப்பதில்லை. மசீச தனக்கு தேவையான யாவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மஇகாவிற்கு ஒரு இறைச்சித் துண்டை கொடுத்து அவ்வப்போது திருப்திபடுத்துவது போல மசீச - விடம் செய்ய இயலாது.எல்லா மலாய்க்காரர்களையும் ஒன்று படுத்துவதற்கான வியூகத்தை அம்னோவின் தலைவர் சிந்தித்து செயல்படுத்திடும் கட்டாயத்தில் இருக்கிறார். பாஸ்ஸோடும் கெ அடிலானோடும் மலாய்க்காரர்கள் யாவரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியானது கத்தி மேல் நடக்கும் வித்தைக்கு ஒப்பானது. கரணம் தப்பினால் மரணம் என்றுகூட சொல்லாம்.

இதன் முக்கியத்துவம் இக்காலக் கட்டத்தில் ஏன் அவசியமான ஒன்றாக திகழ்கிறது என்ற கேள்வி மனதில் எழும்பலாம். மசீச -விலும் டிஏபி -யிலும் கெராக்கானிலும் உள்ள சீனர்கள் ஒரு மேசையில் அமர்ந்து திட்டமிட்டு பேசி ஆலோசித்து ஒரே தலையணையை பகிர்ந்துக் கொள்வார்களேயானால் மலாய்க்காரர்கள் எப்படி இருக்க வேண்டும், யோசித்துப் பாருங்கள்!

சீனர்களிடமிருந்து வெளிப்பட்ட ஒற்றுமையை குறித்து இந்த நாட்டிலேயே நாம் அறிந்த வரலாறுகள் உண்டு.1) - சிகரெட் டன்ஹில் விவகாரம் (1977 அல்லது 1978)2) - புரோட்டோன் - (1980)3) - மென்டரின் பழம் விவகாரம் - (1980 - 1984)4) - பினாங்கு குறுஞ்செய்தி - பொது தேர்தலுக்குப்பின் - (2008)

ஆக, சீனர்கள் மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கட்சி ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ஒரு விஷயம், அவர்களின் ஒட்டுமொத்த இனத்திற்கும் பாதகம் விளைவிக்கிறதென்றால் - ஒன்று சேர்வதற்கு மூன்று வரி குறுஞ்செய்தி போதுமானதாக இருக்கின்றது.

பாரிசான், இடைத் தேர்தலில் தோற்ற விஷயத்திற்கு திரும்புவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை சீனர்களே என்று இந்நாட்டில் கிடையாது. இந்தியர்கள் 'பெரும்பான்மை' என்ற வார்த்தைக்கு ஏற்றவர்கள் அல்லர். எல்லா இடங்களிலும் சிதறிய வண்ணம் இருப்பதால் தொகுதி அடிப்படையில் 'பெரும்பான்மை' என்ற சொல்லுக்கு தகுதி வாய்ந்தவர்கள் மாலாய்க்காரர்களே. ஆகவே, சீனர்களின் ஆதரவு பாரிசானுக்கு கிடைக்கவில்லை என்ற ஆய்வறிக்கையானது வெறும் ஆத்திரத்தின் வெளிப்பாடு தேர்தல் ஓட்டுச் சீட்டின் மேல் - இது சீன சமூகம், இது மாலாய்க்கார சமூகம், இது இந்தியர்களின் சமூகம் என்றா குறிப்பிடப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடுமானால் யார், யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் யார், யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வியே எழும்ப அவசியமில்லாமல் போயிருக்கும். இதுவா ஜனநாயகம்? 'பாரிசானை சீனர்கள் ஆதரிக்கவில்லை' என்று கூறுவதே ஜனநாயகத்திறகு எதிரான உரையாகும்.

இன்று பாரிசானுக்கு இருக்கின்ற முதன்மையான முக்கியமான பெரிதான பிரச்சணை என்னவெனில் சொந்த இனத்தை அதாவது மலாய்க்காரர்களை மீண்டும் எப்படி கவர்வது என்பதாகும்.

பாஸ் கட்சிக்கும் கெஅடிலானுக்கும் டிஏபிக்கும் பிரிந்து சிதறி கிடக்கும் மலாய் இனத்தை எவ்வகையிலும் அம்னோவோ பாரிசானோ ஒன்றினைக்கும் முயற்சிகள், எடுக்கப்படாதிருக்கும் பட்சத்தில் அல்லது எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் அடுத்து வரும் 13-வது பொது தேர்தலில் பாரிசான் அரசாங்கம் பிஆர் அரசாங்கமாக மாறுவது திண்ணம்.

பாஸ் கட்சிக்கும் கெ அடிலானுக்கும் டிஏபிக்கும் பிரிந்து போன மலாய்க்காரர்களை இனி சேர்க்கவோ சரியாக சொன்னால் பாரிசானுக்கு திரும்பும்படியான நிகழ்வு இனி நடக்க வாய்ப்பேயில்லை என்றும் அதற்கு காரணம் எதிர்கட்சிகள் இக்காலக்கட்டத்தில் பலம் வாய்ந்ததாக மாறி விட்டதே ஆகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இடைத் தேர்தலில் தோற்றது குறித்து சீனர்களை மட்டும் குறைக்கூறிக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே அவர்களின் கையில்;தான் நாட்டின் பொருளாதார குடுமி இருக்கின்றது. அவர்களின் பிடியில் இந்நாட்டின் அரசியல் அகப்படும்போது (அரசியலில், அதுவும் ஜனநாயகத்தில், எதுவும் நடக்கலாம்) மலாய் இனமும் நாடும் எங்கே போகும் என்று சொல்ல முடியாது.

விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் நீதி நேர்மை, நியாயமும் பாரிசானில் குறைந்துக் கொண்டே வருகிறது. இதன் தங்க முலாம் பூசும் நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றன. அவ்வப்போது அரங்கேறியும் வருகின்றன.பக்காத்தான் ராயாட்டில் - புரிந்துணர்வு மனப்பான்மை அதிகளவு தேவைப்படுகின்றது என்றே சமீபத்திய சம்பவங்கள் சுட்டிகாட்டுகின்றன. ஆனால், ஒப்பிட்டு பார்ப்போமானால் பாரிசானைவிட பக்காத்தான் ராயாட்டில் மக்களின் அதிகளவு ஆதரவு காணப்படுவதாகவே தோன்றுகிறது. இவ்வெண்ணம் பரவி வருவது பாரிசானுக்கு ஆபத்து தவிர வேறென்ன?

சரி. அம்னோ மலாய்க்காரர்கள் மேல் ஏனிந்த கரிசனம் என்று நீங்கள் கேட்கலாம். இதனையும் சொல்லிவிட்டால் தான் இந்தக் கட்டுரை எழுதியதின் நோக்கம் நிறைவடையும்.

பாரிசான் தோற்றால், பிஆர் அரசாங்கம் வரும். பிஆர் கூட்டணிக்குள் கெஅடிலானும் டிஏபியும் சரிசமமாக நடந்து போவதற்கும் அதிக சாத்தியங்கள் உண்டு. அதன் கொள்கைகள் நமக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றன. அன்வார் இப்ராஹிம் தன்னை ஒரு பக்குவப்பட்ட ஓர் அரசியல்வாதியாகவே இப்போதெல்லாம் காட்டிக்கொள்கிறார். ஆனால், பாஸ் கட்சியின் அடிப்படை கொள்கையானது நமக்கு அலர்ஜியை தரக்கூடியது. அதற்கான முதன்மை காரணம் -இஸ்லாம்!

இஸ்லாமிய மதத்தின் சட்ட நடைமுறைகளும் ஆதிக்க வெளிப்பாடும் பல்லினம் வாழும் இந்நாட்டிற்கு ஒத்துவராதது ஆகும். இதனை புரிந்துக் கொள்ளாமலேயே பாஸ் கட்சியின் பிரதிநிதிகளின் ஒருவரான முகமட் நிஸார் ஜமாலுடின் புக்கிட் கந்தாங்கில் வெற்றி பெற்ற பின் தைப்பிங் மாநகராட்சி மன்றத்தில் உரையாற்றியது என்னவெனில் : 'பாஸின் இந்த வெற்றி மகிழ்சியளிக்கிறது@ அதைவிட மகிழ்ச்சி இஸ்hமியர் அல்லாதவர்கள் பாஸை ஏற்றுக் கொண்டதாகும். ஆகவே அதனால் தான் 'பாஸ் எல்லோருக்குமானது' என்பது அடையாள குணமாக இருந்து, பிறகு முடிவடைவது 'இஸ்லாம் எல்லோருக்குமானது ஆகும்'.

எப்படிப் பார்த்தாலும் கெஅடிலானோடும் டிஏபியோடும் பாஸ் கட்சி கொள்கையினால் நிலைத்திருக்காது. இந்த விஷயத்தில் டிஏபி கட்சியில் இருக்கும் சீனர்கள் சினமடைந்தால் பாஸ் தன் கொள்கைகளை பரப்பவோ செயற்படுத்தவோ விடமாட்டார்கள்.

ஆக, பாரிசான் ஆனாலும் சரி, பிஆர் கூட்டணியானாலும் சரி, சீனர்களை கோபப்படுத்துவது நஷ்டத்தையும் கஷ்டத்தையும் மட்டுமே கொண்டு வரும்.


மஹாத்மன்.

2 comments:

  1. அனைவரும் அறிந்த செய்திதான். அதனை பெரிதாக விளக்கத் தேவையில்லை.

    -முகிலன்-

    ReplyDelete
  2. பரவாயில்லையே, மஹாத்மன் நல்ல அரசியல் விமர்சகராக வளர்ந்துவிட்டாரே. என்ன புதியதாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பழையதை அரைக்கிறார். தாங்கலே.

    -பத்மா-

    ReplyDelete