Monday, March 23, 2009

புனித ஆத்மாக்களுக்கு எனது கடைசி நன்றி

இந்த விவாதத்தில் கலந்து கொண்டதில் எனக்குப் பல நன்மைகளும் புதிய கற்பிதங்களும் ஏற்பட்டுள்ளன. அதற்காக அஞசடி பக்கத்திற்கும், அஞ்சடியில் எனக்குப் புத்திமதிகளும், விவாதத்தின் வாயிலாக எனது போலி முகங்களையும் சுட்டிக் காட்டி, பக்குவத்தை ஏற்படுத்திய புனித ஆத்மாக்களுக்கும் எனதூ மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் தோழமையுடனும் நாகரிகமான ஒப்பீடுகளுடனும், மிகவும் நிதானமாக இலக்கிய உரையாற்றிய அன்பான நண்பர்களுக்கும் இந்த வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவாதங்களின் வழியாக நான் கண்டறிந்த எனது பலவீனங்களை இனி உடனடியாகத் துறக்க முயற்சிக்கின்றேன்.

ஜென் தத்துவத்தில் ஒரு வாசகம் வரும், "உனது குறைகளை நீ கண்டறிந்த பின் அதை உடனடியாகத் துறந்துவிடு". நான் சாதரண மனிதன்தான் என்கிற பட்சத்தில், போலி முகங்களை அணிந்து கொண்டு சுற்றித் திரிந்த அபத்தங்களை கண்டடைந்துள்ளேன். அந்தக் கண்டடைவிற்கு எனக்கு உதவிய அனைத்து பரிபூரண ஆத்மாக்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். இலக்கியமும் இலக்கிய விவாதங்களும் கொடுக்கும் பக்குவம் என்றே கருதலாம்.

சிறுகதைகள், கவிதைகள் எழுதி கொண்டு, தீவிர இலக்கியம் வாசித்துக் கொண்டு இப்படி நாலு சுவற்றில் கிடந்து கொண்டு செய்யும் தொழிலுக்கும் கொஞ்சம் நேர்மையாக இருந்து கொண்டு காலத்தைக் கடத்திய நான், எதிர்வினையாற்ற மறந்த தருணங்களை எண்ணி வருத்தமடைகிறேன். போலிமைகளுக்கும் அநியாங்களுக்கும் குரல் கொடுக்க (எழுத்தாளன் என்ற போர்வை முக்கியம் இல்லாத தருணத்தில்) முற்படுவது நமது எதிர்கால அடையாளங்களை நிர்ணயம் செய்யும் என்கிற கற்பிதம் ஏற்பட்டுள்ளது.

எனது இருப்பும் செயலும் குறித்து எந்தமாதிரியான சமூக-தனிமனித விமர்சனங்கள் ஏற்படும் என, விவாதங்களின் வழி புரிந்து கொண்டேன். சொல்லப்போனால் படைப்பிலக்கியம் தவிர்த்து இலக்கியத்தில் உள்ள சில அடுக்குகளையும் புரிந்து கொண்டேன். நான் முன் வைத்த கருத்துகளுக்கு எதிர்வினை கிளம்பியதும் இதுவே முதன்முறை என்பதால், அதை எதிர்த்து விவாதம் செய்து பதில் எதிர்வினையாற்றியதும் எனக்கு முதல் அனுபவம் என்கிற பட்சத்தில், இலக்கிய விவாதம் செய்வது குறித்தும் நான் கற்றுக் கொண்டுள்ளேன். சில இடங்களில் படைப்புச் சுதந்திரம் குறித்து பேசுவதும் தவறு எனவும் தெரிந்து கொண்டேன்.

வார்த்தையை அதிகம் விட்டால் சிக்கிக் கொள்வோம் என்கிற புரிதலுக்கும் ஆட்பட்டுள்ளேன். அப்பப்பா எத்தனை விதங்கள் இலக்கியத்தில்? முதல்முறையாக எனக்கு ஏதோ நிறவைவான ஆழமான இலக்கியத்தை நோக்கி நகர்வது குறித்து மகிழ்ச்சியடைகிறது மனம். மேலும் சும்மா சும்மா எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பதால் நமது படைப்பிலக்கியமும் அதற்கான நேரமும் பாதிக்கும் என்றும் தெரிந்துகொண்டேன்.

அந்த நேரத்தில் ஒரு சிறுகதை எழுதினாலாவது ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறலாம் போல. . ஆக மொத்தத்தில், இந்த முதல் அனுபவம், அதுவும் பல இலக்கிய ஆளுமைகள் மத்தியில் சிக்கிக் கொண்டு பதிலுக்குப் பதில் பேசி, அவ்வப்போது தடுமாறி, நிலைபாடுகளில் இறுக்கமாக இருந்து கொண்டு, இதுவரை கண்டடையாத பல முகங்களை, குறைகளை, தவறுகளைக் கண்டறிந்து, என் இலக்கியத்தை வளர்த்துக் கொள்ள, மேலும் எனது சிந்தனையைக் கூர்த் தீட்டிக் கொள்ள, பலரின் மொழியை/பார்வையை அறிந்து கொள்ள மிகப்பெரிய களமாக இருந்த "அஞ்சடி" வலைத்தளத்திற்கு ரொம்பவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறைகளை பலவீனங்களைத் தைரியமாக ஒப்புக் கொண்டு, அதைத் துறக்கவும் இனி முயற்சி எடுப்பேன் எனக் கூறிக் கொண்டு அஞ்சடியிலிருந்து விடைபெறுகிறேன். கூடியவிரைவில் "விபச்சாரிகளின் யோனியை உடைக்கும் உத்திகள்" எனும் ஒரு பின் நவீனத்துவ கதையை எழுதவுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி. வாழ்த்துகள்!

அன்புடன் :
கே.பாலமுருகன்

No comments:

Post a Comment