Monday, March 23, 2009

நல்லவர்களுக்கு அவள் கெட்டவள் ...

மரபுக்கவிஞர் குறித்த பாலமுருகனின் ஆதங்கமும் சினமும் நியாயமானதே...ஆனால் அதனைக் குறிப்பிட்ட விதம் அவரது நோக்கத்தை அடையவில்லை என்றே கருதுகிறேன்.மாறாக அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆத்திரத்தையும் (மூத்திரத்தையும்) வெளிப்படுத்துவதற்கு மனிதர்களுக்கு சுதந்திரம் உள்ளது.சுதந்திரம் எவ்விதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதே பல வேளைகளில் கேள்வியாகிறது.

ஒன்றை இவ்விடத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பாலமூருகன் வேண்டுமென்றே மரபுக்கவிஞர்களைச் சீண்டுகிறாரா? அல்லது அவர்களின் சீண்டலுக்கு எதிர்வினை ஆற்றுகிறா என்று...வேண்டுமென்றே கல் எறிந்தால் கண்டிக்கத்தக்கதே...கல் எறியப்பட்டால் பதிலுக்கு வீட்டை கொளுத்துகிற நிலையும் வந்துவிடும்.

பாலமுருகனின் கட்டுரை மேலும் ஆழமான விவாதத்திற்கு இட்டுச் செல்கிறது. இன்று நாமாகவே சென்று மரபுக்கவிஞர்களைச் சீண்ட வேண்டிய அவசியம் இல்லை.அவர்களை ஏன் நாம் பொருட்படுத்த வேண்டும்? நாம் எழுதுகிற கவிதைகளை அல்லது நமது இலக்கிய போக்கை, இலக்கியத்தின் உயிரைக் கொல்லும் ஒரு கிருமியாகவே இன்றளவும் பார்க்கும் அவர்களை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும்?அவர்களின் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்று எவர் சொன்னது?

அவர்களுடைய சிந்தனையும் செயலும் நமக்கு ஒவ்வாத நிலையில், அவர்களிடமிருந்து நாம் ஏன் மாலையையும்-பொன்னாடையையும் மதிப்பையும் எதிர்ப்பார்க்க வேண்டும்?யாரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டும் என்பது முக்கியம் இல்லையா ? அரசியல் தலைவருக்கு கவிதை எழுதி, புகழ்பாடி இன்றைய இலக்கிய போக்கை வஞ்சித்து தனது இலக்கியத்தை வளர்க்கும் இறைவனின் கவிஞர்களை எல்லாம் நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்.

பாலமுருகனின் கட்டூரையில்...அவர்களின் பிதற்றலுக்கு கொஞ்சம் மதிப்பளித்து ...வாருங்கள் நவீன படைப்பாளிகளே தைரியமாக.நாமெல்லாம் துரோகிகள், மரபை உடைக்கும் பரிசோதனை படைப்பாளிகள் என்று கெளரவமாக ஏற்றுக்கொள்வோம் ...என எழுதியுள்ளார்.

எனக்கு சில கேள்விகள் உள்ளன ...
- அவர்களின் பிதற்றலுக்கு நாம் ஏன் (கொஞ்சம்) மதிப்பளிக்க வேண்டும்?- அது பிதற்றல் எனும் போது(கொஞ்சம்) மதிப்பளிக்க வேண்டும் என்பது ( கொஞ்சம்) முரணாகத் தெரியவில்லையா?

பாலமுருகனிடம் மற்றும் சக எழுத்தாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேணடி சில கருத்துக்கள்...

நவீன படைப்பாளிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு எதிராக நமது இலக்கியத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உள்ளதா? சத்தியமாக எனக்கு இல்லை.ஏனென்றால் அவர்களை நான் பொருட்படுத்தவில்லை.அவர்கள் எழுதுகிறார்கள்.நானும் எழுதுகிறேன்.

அவர்களுக்கு நிரூபிப்பதற்காகவென எழுதி குவிக்க வேண்டிய அவசியம்/தேவை நமக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நண்பர்களே...நன்கு யோசித்துப் பாருங்கள். மரபை உடைத்த துரோகிகள் யார் ? நாமா ? அவர்களா? நானில்லை மிக உறுதியாக!

வளரும் பயிரைக் கிள்ளி எறிய, அல்லது அவமானப்படுத்த,பொதுவில் கேவலப்படுத்த , நமது கருத்துக்களை மறுதலித்து, நேர்மையற்ற, விதண்டாவாதத்தை முன்வைக்கும் அவர்கள்தானே மரபை உடைக்கும் துரோகிகள் !

நவீன வாழ்வின் உற்பத்தியில் வாழ்ந்தாலும், எழுத்தின் நவீன போக்கை மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் , நவீன இச பதிவுகளை நிராகரிக்கும் அவர்கள் அல்லவா மரபை உடைக்கும் துரோகிகள்...

அவ்வகையினருக்கு நாம் ஏன் கொஞ்சம் மதிப்பளிக்க வேண்டும் அல்லது அவர்களைப் பொருட்படுத்தி எழுத்தணி திரள வேண்டும்?

ஆனால் பாலமுருகனுக்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம்.அதை ஏற்றுக் கொள்வதும் , ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம் மற்றும் சுதந்திரம். ஆனால் கூற்றுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் எம்பித் தவிக்கும் முரண், எழுத்துண்மையை காலப்போக்கில் புலப்படுத்தி விடும்.விபச்சாரியின் யோனி ... நல்ல தலைப்பு இன்னும் எழுதாத கவிதைக்கு...ஒவ்வொருவருக்கும் விபச்சாரி குறித்து தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்..இருக்க வேண்டும். நல்லவர்களுக்கு விபச்சாரி கெட்டவள் ஆகிறாள்.என்னைப் போன்ற கெட்டவர்களுக்கு அவள் தெய்வமாகிறாள்.ஆக அவளது யோனியும் தெய்வீகத்தன்மையை அடைகிறது. விபச்சாரி என்பவள் கெட்டவள் அல்லது தீண்டத்தகாதவள், சமூகத்தின் தீட்டு என்றால் கடவுளின் தெய்வீகத்தன்மையும் - புனிதமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நீங்கள் ( அனுபவசாலிகள்) கவனிக்க வேண்டும்.விபச்சாரி என்று குறிப்பிடுவதே அவளைச் சிறுமைப்படுத்துவது போன்று/ அடிமைப்படுத்துவது போன்று...விபச்சாரியின் யோனி என்று வேறு குறிப்பிட வேண்டுமா? விபச்சாரியும் யோனியும் வெவ்வேறா? இரண்டும் ஒன்றுதானே...

அப்படியென்றால் அவர்களை எப்படி அடையாளப்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. அவர்களை உவமைக்கு எடுத்துக் கொள்வதே... அதுவும் சிறுமைப்படுத்த உவமைக்கு எடுத்துக் கொள்வது தவறு; தவிர்க்கப்பட வேண்டும். யோசித்துப் பார்க்க வேண்டும் நாம் எல்லாம். புத்தகத்தில் வாசித்தது போல, போதிக்கப்பட்டது போல இவர்கள் கெட்டவர்கள் இவர்கள் நல்லவர்கள் என பகுத்துப் பார்க்க முடிகிறதா இக்கால கட்டத்தில் ?
பாலமுருகனின் சொல்லாடல் - தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. ஒன்றே ஒன்று பாலமுருகனிடம் நான் கூறிக் கொள்ள விரும்புவது யாருடைய எதிர்பார்ப்புக்கும் நாம் எழுத வரவில்லை. தொடர்ந்து எழூதிக் கொண்டே இருங்கள்.அங்கீகாரம் கிடைக்கிறதா இல்லையா அதுவெல்லாம் முக்கியமே இல்லை.மரபுக்கவிஞர்களின் கவனிப்பும் நமக்குத் தேவையில்லை. அவர்களின் வசைபாடல்களை ஒருபோதும் பொருட்படுத்த வேண்டாம். எனக்குத் தெரிந்து கோ.முனியாண்டி, கோ.புண்ணியவான் என மேலும் பலரை மரபுக்கவிஞர்கள் வசைபாடியுள்ளனர்..திட்டித் தீர்த்தவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். இவர்கள் எங்கோ சென்று விட்டார்கள்..

பாலமுருகனின் அக்கட்டுரை விவாதங்களையும் - பகிர்தல்களையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுப்பையும் குரோதத்தையும் ஏற்படுத்தினால், இவ்விவாத மேடையால் எந்த பயனும் இல்லை.
ஆனால் நட்பையும் இலக்கியத் தொடர்பையும் அறுத்துக் கொள்ளாமல் விமர்சிக்க வேண்டும். அறுக்கும் நோக்கத்தில் விமர்சிக்க கூடாது. ஏனென்றால் மரணத்தை விட கொடியது நண்பர்களின் பிரிவு...
பா.அ.சிவம்

No comments:

Post a Comment