அடிப்படையில் எனக்குக் கொஞ்சம் திக்குவாய்.சின்ன வயசில் வகுப்பறையில் பெயரைச் சொல்லக் கூடத் திக்குவேன். அதனாலேயே ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் இதயத் துடிப்பு அதிகரிக்க வகுப்பறையில் நுழைவதுண்டு. வகுப்பில் புதிதாய் நுழையும் ஒவ்வோர் ஆசிரியரும் சொல்லி வைத்தார்போல் பெயரையே முதலில் கேட்டுத் தொலைப்பார்கள். எனது முறை வர வர ஒரு குபீர் சிரிப்பொலியையும் கேலி கத்தல்களையும் கேட்கக் காது தயார் ஆகிவிடும். கொஞ்ச நேரம் இழுத்து, வியர்த்து பெயரையும் ஊரையும் சொல்லி முடிப்பேன். இப்போது அந்த அளவுக்கு மோசம் இல்லை. சுவாசம் சீராக வருகிறது.கோபப்படும் போதும் நீண்ட விவாதத்தில் ஈடுபடும் போதும் தவிர. அதனாலேயே இப்போதெல்லாம் எந்த நேரடி விவாதங்களிலும் ஈடுபடுவது குறைந்துவிட்டது.
ஆனால் இந்த 'நான் கடவுள்' பற்றி எழுதி தொலைத்த நேரம் அதிகமாக விவாதித்து சென்ற மாதம் ரொம்பவே திக்கித் திணறி தொலைத்துவிட்டேன். ஒருவேளை உண்மையாகவே கடவுள் இருக்கிறாரோ எனக்கூட சந்தேகம் வந்துவிட்டது.
ஒரு கிளாஸ் டீ குடித்து கொண்டு உலக இலக்கியம் பேசும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. இது போன்றவர்களிடம் இலக்கியம் பேசாமல் தப்பிப்பது பெரும்பாடு. தங்களது கருத்தை இரண்டு வரியில் எழுத மெனக்கெடாத இதுபோன்றவர்களை அடையாளம் கண்டுகொள்வது வெகு சுலபம். இவர்கள் ஜெயமோகனையும் சாருவையும் தொடர்ந்து வாசித்தபடி இருப்பார்கள். ஜெயமோகன், சாரு போன்றவர்களின் தீவிர வாசிப்பும் ஆய்வும் இன்றி தாங்கள் கூறும் கருத்துக்கான எவ்வித நியாயங்களையும் இவர்கள் கொண்டிருக்க மாட்டார்கள். சிறந்த நாவலை உதாரணம் காட்ட இவர்களுக்கு உடனே நினைவிற்கு வருபவர்கள் இவர்கள் இருவரும்தான். இவர்கள் இருவரின் கூற்றையும் வேதவாக்காக எடுத்துக்கொண்டு சுமப்பார்கள். சமயங்களில் கொஞ்சம் எல்லை மீறி அவர்கள் கருத்தைத் தங்கள் கருத்தாக வாந்தியெடுப்பார்கள். இப்படி ஒருவரை அண்மையில் சந்தித்தேன். உரையாடினேன்.
அந்த உரையாடல் பல தளங்களுக்குச் சென்றது. நண்பர் ஜெயமோகனின் பக்தன் என்பதால் பல தருணங்களில் பூமியில் இருந்து பேசாமல், கலை எனவும் உன்னதம் எனவும் பேசிக்கொண்டிருந்தார். அது பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் நான் பாலாவின் கலை வெளிபாடு குறித்தோ இயக்கும் திறன் குறித்தோ எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பாலா காட்டும் இன்னொரு உலகம் தமிழ் சினிமாவுக்குப் புதிது. அதற்காக அவரை கொண்டாடலாம். அத்தகைய முக்கியமானதொரு படத்தில் ஏற்படுகின்ற முறைக்கேடு குறித்துதான் சில கேள்விகள் ஏற்படுகின்றன. எனக்கு இருப்பது மிக எளிதான கேள்விகள். ஒரு சாமன்யனின் கேள்விகள்
கேள்வி 1: அத்தனை மெனக்கெட்டு வேறொரு உலகத்தைக் காட்டும் பாலா ஆர்யாவின் கதாபாத்திரத்தைக்கொண்டு வந்தது ஏன்? அதில் ஹீரோயிசம் இல்லையா?
கேள்வி 2: பலவீனமானவர்களை காப்பாற்ற சராசரி சினிமாவில் வரும் ரஜினிக்கும், விஜய்க்கும் இந்த ஆர்யாவுக்கும் என்ன வித்தியாசம்?
கேள்வி 3: சிலர் கூற்றுப்படி இந்தப்படத்தில் பாலா நாத்திகம் பேச முயன்றிருந்தாலும் அந்த ஊரில் தெய்வமாக மதிக்கப்படும் ஒருவர்,யாரையும் கண்திறந்து பார்க்காத ஒருவர், தலை திருப்பி கண்திறந்து புன்னகைத்து ஆர்யாவை சிவன் அவதாரமாக கூறுவது ஏன்?
கேள்வி 4: படத்தில் வரும் சிறைச்சாலை காட்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜியை ஜெயமோகனின் உதவியுடன் பாலா புகுத்தியது ஏன்?
கேள்வி 5: தமிழ் திரை இசைப் பாடல்களின் வழி என்னைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு மார்க்ஸியம் போதித்த எம்.ஜி.ஆரையும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை கதாபாத்திரமாக பதிவு செய்த சிவாஜியையும் (இவர்கள் இருவரின் தனி மற்றும் அரசியல் வாழ்வு குறித்த விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும்)ஆர்.எஸ்.எஸ்ஸில் தீவிரமாக செயல்பட்ட ஜெயமோகன் நக்கல் செய்வதின் தொடர்ச்சியாக அதைப்பார்க்கலாமா?
கேள்வி 6: திருநங்கை வேடமிட்ட ஒருவருக்கு நயன்தாரா என பெயரிட்டு ஆடவிட்டு அசிங்கப்படுத்த முயன்றது நடிகைகளையா? திருநங்கைகளையா?
இப்படி எந்த இலக்கிய ரசணையும் இல்லாத ஒரு பாமரனின் எளிய கேள்விகள்தான் என்னிடம் இருந்தவை. அதற்கு அந்த நண்பரின் உளரல்களையெல்லாம் முழுமையாக கேட்க முடியவில்லை. அதைதான் http://jeyamohan.in/ இணைத்தளத்தில் எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாமே. ஆனால் அவர் சொல்லிய ஒரு பதில் எனக்குக் கொஞ்சம் கடுப்பை கிளப்பி விட்டது.
அவர் "அரவாணிகள் அப்படிதானே இருக்கிறார்கள் என்றார்". நானும் சட்டென நீங்கள் அரவாணியா? என கேட்டேன். ஒரு திருநங்கையாக இல்லாத பட்சத்தில் குறைந்த பட்சம் அவர்களின் உணர்வை அறியாத பட்சத்தில் அந்த நண்பர் திருநங்கைகளென அறிந்திப்பது மலினமான தமிழ்த் திரைப்படம் காட்டும் கோமாளிகளைத்தான். அவருக்கு எத்தனைத் திருநங்கைகளுடன் பழக்கம் என்றும் தெரியவில்லை. ஒரு மசாலா தொடர் நாடகத்தில் மலேசிய பெண்ணைக் கொஞ்சம் மோசமாகக் காட்டினால் இவர்களுக்கு கொதிப்பு வந்து விடும். ஆனால் இவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத ஓர் இனத்தைக் கேலி செய்தால் அது யதார்த்தம்,கலை.
கண்பார்வையற்ற பிச்சைக்காரி ரயிலில் பாடிப் பிச்சையெடுக்கும் போது பின்னணியில் நூறு வயலின்களும், தப்லா, ஆர்மோனியம் ஒலிக்கும்... அதில் யதார்த்தம் பார்க்க மாட்டார்கள்... அதே பெண் ஆர்யாவிடம் குகையில் பாடும்போது கூட அப்படியே அந்தப் பழைய சினிமாப் பாடலை லௌட் ஸ்பீக்கரில் ஒலிக்க வைப்பதுபோல் ஒலிக்க வைப்பார்... அதில் யதார்த்தம் பார்க்க மாட்டார்கள்... பல வருடத்துக்குப் பிறகு இருட்டில் கொஞ்சம் தூரத்தில் அடையாளம் இழந்திருக்கும் ஒருவனைப் பார்த்தவுடன் தன் மகன் என்பார் தந்தை அதில்கூட யதார்த்தம் பார்க்க மாட்டார்கள். ஆனால் ஒரு திருநங்கை சிறையில் ஆடி... அங்கேயே ஒன்னுக்கடித்து அதை தனது உடையாலேயே துடைப்பது யதார்த்தம். ஒரு திருநங்கையின் நடனத்தை இவர்கள் பார்த்திருப்பார்களா என்ற கேள்வியும் கூடவே தொக்கி வருகிறது. நிச்சயமாக இருக்காது. இவர்கள் கற்பனையில் இருக்கும் திருநங்கைகள் தமிழ் சினிமா காட்டிக் காட்டி பழக்கப்படுத்திய வேடாந்தாரிகள். இது போன்ற காட்சியின் வலி சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான். வாய்ப்பிருந்தால் வாசிக்க.... http://livingsmile.blogspot.com/
அடுத்து சிங்கையில் நடந்த 'அநங்கம்' அறிமுகம் நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் பேசிய நண்பர் ஒருவர்... "நவீன் நான் கடவுள் படத்தை விமர்சனம் செய்யாமல் அந்தப் படத்தை எப்படி எடுத்திருக்கலாம் என போதித்துள்ளார். இனி பாலா நவீனைக் கேட்டுத்தான் படத்தை இயக்க வேண்டும் எனவும் கிண்டல் அடித்தார். இறுதியில் நான் 'கலையோ கடவுளோ மயிரோ' என எழுதிருந்ததை மாற்றி 'முடி' என கூறும் அளவிற்கு உத்தமராக இருந்தார். நிகழ்வின் இடையில் இன்றைய மலேசிய இளம் படைப்பாளிகள் தமிழக எழுத்தாளர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு உள்ளனர் எனவும் வாயார புகழ்ந்தார். நமக்கு கடவுளும் முக்கியம் கலையும் முக்கியம் என்றார். எனக்கென்னவோ முந்தைய கட்டுரையில் நான், "கலை என கூறி பணம் பண்ணும் கூட்டத்தையும் கடவுள் என கூறி பணம் பண்ணும் கூட்டத்தையும் 'உரோமத்திற்கு' (மயிர் என கூறி நான் பட்டபாடு போதும்) சமமானவர்கள்" என சாடியது அவருக்கு உறைத்து விட்டதோ எனப்பட்டது. இங்கு(கோலாலம்பூரில்) இலக்கியம் என இளித்துக்கொண்டு 'வித்தியாசமாய்' பணம் பண்ணும் ஒருவ'ரி'ன் தோரணையில் இருந்தது அந்த நண்பரின் நக்கல் பேச்சு.
வெறும் இலக்கியம் என தமிழக எழுத்து பிரதிகள் போல ஒன்றை உருவாக்குவதால் எக்காலத்திலும் மலேசிய இலக்கியம் வளராது. இன்று தமிழகத்தில் எழுதும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆழ்ந்த நுண் அரசியல் பார்வையோ... மார்க்ஸியப் பார்வையோ... பின்நவீனத்துவப் பார்வையோ அற்ற நிலையில் ஒரு சாதரண திரைப்படத்தைக்கூட பார்க்க ஜெயமோகனின் கண்ணும் சாருவின் கண்ணும் தேவைப்படும் நிலையில் அந்த உயரம் நமக்கு வெகு தொலைவில் இருக்கிறதோ என தோன்றுகிறது. ஓர் இலக்கிய பிரதியைப் படைத்தல் என்பது வேறு. ஓர் இலக்கியப் பிரதியைப் புரிந்துகொள்ளுதல் என்பது வேறு. "எனக்கு முக்கியம் மனிதன்தான்" என்ற எனது எளிய வரியைப் புரிந்துகொள்ளாமல் 'அப்படியானால் திரைப்படம் பார்க்கும் நேரத்தில் யாருக்காவது உதவி கொண்டிருக்கலாமே!' என பதில் வைத்திருக்கும் ஒருவர் சிங்கப்பூரில் அநங்கத்தை விமர்சனம் செய்தது ஆச்சரியம். ஒரு கலைப்படைப்பில் ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்தும் தன்மையை, அந்தக் கலைப்படைப்பாளி கலையின் பெயராலோ கடவுளின் பெயராலோ செய்வது தவறு என இனியாவது விரிவாக நான் எழுத பழக வேண்டும். இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து ஒரு கவிஞரை அழைத்து வந்து இந்த நண்பர் படுத்தியபாடு நினைவிற்கு வருகிறது.(அது இப்போது வேண்டாம்)
இறுதியாக பாலமுருகன். அநங்கத்தின் வெற்றியில் எனக்கு நம்பிக்கை உண்டு. உங்கள் உழைப்பு நிச்சயம் வெற்றியைத் தரும். முடிந்தால் இரண்டு விசயங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
1.தமிழக எழுத்தாளர்கள் எழுத நிறைய ஏடுகள் உண்டு. பாவண்ணனுக்கும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் நீங்கள் தரும் முக்கியத்துவத்தை நம்ம ஊர் பீர்முகமதுவுக்கோ, சண்முகசிவாவுக்கோ, சீ.முத்துசாமிக்கோ, கோ.முனியாண்டிக்கோ இராம.கண்ணபிரானுக்கோ கொடுத்தால் மகிழ்வேன். இவர்களுக்கும் பின்நவீனத்துவம், மாய யதார்த்தம் தெரியும் என நம்புகிறேன். அநங்கத்தின் நோக்கம் உள்ளூர் (சிங்கையையும் சேர்த்து) எழுத்தாளர்களை வெளிநாடுகளில் அறிமுகம் செய்யும் முயற்சியாக மாறினால் சிறப்பாக இருக்கும். தமிழக எழுத்தாளனின் வாலை விடுவதில்தான் நமது வெற்றி நண்பா.
இரண்டாவது எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய ஒரு நண்பனால் 'தமிழ்ச் சமூகத்தின் மீது வருத்தம் ஏற்பட்டதாக' குறிப்பிட்டு உள்ளீர்கள். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க முடியாத நம்மை நினைத்துதான் தமிழ் சமூகம் தீராத வருத்தம் அடைய வேண்டும். முற்றாக எழுத்துப் பிழைகளை அகற்ற முடியாவிட்டாலும் அதற்கான தொடர் முயற்சி அவசியம். இதற்காகவெல்லாம் தமிழ்ச் சமுகத்தின் மீது நாம் வருத்தம் கொள்ளத் தேவை இல்லை.
மேலும் உங்களது மற்றொரு கட்டுரையில் 'மரபுக்கவிஞர்கள் விபச்சாரியின் யோனிக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட நவீன கவிஞர்களுக்குத் தருவதில்லை' என்றீர்கள். சொற்களில் சில அரசியல் உண்டு. ஓர் எழுத்தாளனாக அதை நாம் கவனிப்பது அவசியம் என கருதுகிறேன். இதில் நீங்கள் மரபுக்கவிஞர்களைச் சாடுவது குறித்தும் எனக்கு கேள்வி உண்டு. அவர்கள் எதற்கு நவீன கவிதைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் அல்லது தரக்கூடாது? மரபுக்கவிஞர்கள் மட்டுமல்ல எந்த தரப்பு வாசகனாக இருந்தாலும் ஓர் இலக்கிய பிரதியை வாசிப்பது, நகர்த்துவது அவன் விருப்பம் சார்ந்ததே. அதற்காக ஒருவரைத் திட்டுவதும் வன்முறைதான். இதற்காக நீங்கள் விலை மாதர்களை வம்புக்கிழுப்பது வேதனை தருகிறது. ஊன்றி அந்த வரியை வாசித்தால் நீங்கள் அவர்களை அவமானப்படுத்தியிருப்பது புரியும். இதுவும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்களை நோக்கிய கேலிக் குரல்தான்.
தங்களின் தொடர்ந்த வெற்றி எனக்கு நிறைந்த நம்பிக்கையைத் தருகிறது. அந்த வெற்றிக்கு முன்பு இது போன்ற சிறு சிறு குறைபாடுகள் காணாமல் போய்விடும். நீங்கள் மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய தருணம் இது நண்பா. அநங்கம் வளர வாழ்த்துகள்.
ம.நவீன்
"அநங்கம்"
ReplyDeleteஅய்யப்பமாதவனுக்கு ஒதுக்கிய அரைப்பக்கத்தை மறந்துவிட்டீர்கள் போல. (பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் முன் இவர்அவ்வளவு......(உங்களுக்கான கற்பிதங்களுக்கு இந்த 6 புள்ளிகளும்))
பாண்டித்துரை
சிங்கப்பூர்
சை.பீர்முகமதுவுக்கோ, சண்முகசிவாவுக்கோ, சீ.முத்துசாமிக்கோ, கோ.முனியாண்டிக்கோ, இராம.கண்ணபிரானுக்கோ இவர்களை கடந்து எழுத யாருமில்லாத என்ற நிலையில் வல்லினம் கவிதை சிற்றிதழில் கவிதை பற்றிய கூறுகள் என்று ஜெயமோகன், விக்கிரமாதித்யன், மனுஸ்யபுத்தரன் என்று கட்டம் கட்டியிருந்ததால் தானோ மௌனப்புரட்சி வேண்டி சமீபத்திய கவிதை + கவிதை மீதான புரிதல் என்று மௌனம் சிற்றிதழ் மலேசியாவில் மலர்ந்திருக்கலாம். சமீபத்திய வல்லினம் இதழ் பூதக்கண்ணாடி வைத்து எழுத்துக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.
ReplyDeleteஇனி எந்த ஒரு மலேசிய இதழ்களும் தப்பித்தவறி இணையம் பரிட்சயம் இல்லாதவர்கள், உலகளாவிய படைப்பாளர்களின் படைப்புகள் கிடைக்கபெறாதவர்கள் உங்களின் இதழ் மூலமாக அவர்களை வாசித்துவிடக்கூடாது. உங்களை மட்டும் வாசித்து இன்புறவேண்டும் என்கிற ஆவாவும் புரிகிறது. ( அப்படி நீங்கள் கொடுக்ககூடிய அரைப்பக்கதை முழு பக்கத்தை வாசித்து பாலா போன்று இன்னொருவர் உருவாகிடக்கூடாது என்று நீங்கள் பாலா (கே.பாலமுருகன்) மேல் கொண்டுள்ள அக்கறை புரிகிறது.)
சிங்கப்பூர்தான் வேண்டாம் என்று மலேசிய அரசு ஒதுக்கிவிட்டபின்பு, அது என்ன மலேசியாவிற்கான படைப்பு என்று வரும்போது சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் இணைப்பது? அதுவும் படித்த முகங்களையே! { பாவம் இதழ் ஆசிரியர்கள் இவர்களை மட்டும்தான் மலேசியர்கள் வாசிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார்களோ என்னவோ? அல்லது படைப்பை கேட்டுப் பெறும் சூழலில் முந்திக்கொண்டு அஞ்சல் வழியேயும் மின்னஞ்சல் வழியேயும் வந்து குவியும் இவர்களின் படைப்புகளை புறக்கணிக்க முடியாமையோ?} அவர்கள்தான் தொடர்சியாக பல தமிழக இதழ்களில் எழுதுகிறார்களே? அந்த இடத்தில் சிவம் போன்ற மஹாத்மன் போன்ற யாரேனும் வரலாமே ?
சிங்கப்பூருக்கு வருகின்ற வல்லினம் இதழினை 5 வெள்ளிக்கு விற்று மிகுதியான லாபத்தினை துரைபிரசாந்தனும், பாண்டித்துரையும் சம்பாதித்திருக்ககூடும் என்று மலேசிய எழுத்தாளர்களும் வாசகர்களும் நினைப்பதற்கு முன் ஒரு தன்னிலை விளக்கம் ஒரு ஐந்து இதழ்களுக்கு தொகை வந்திருக்கக்கூடும் அவ்வளவுதான் (s$3x5Books). அதற்கு மிகுதியான பணத்தை துரைப்பிராசாந்தன் கொடுத்திருந்தால், பாண்டித்துரை இனி கொடுக்கவிளைந்தால் அது அவர்கள் ஒரு நாளைக்கு 12மணிநேரத்திற்கு மேல் உழைத்து சம்பாதித்த பணம்.
சிங்கப்பூரில் வைரமுத்து, பா.விஜய் வந்தால் கொள்ளையடிக்கலாம் வருபவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
இந்த பதிவை சிங்கப்பூரில் சமீபத்தில் நூல் வெளியிட்ட மலேசிய மூத்த எழுத்தாளர் படித்திருந்தால் பதறியடித்து எழுத்து அப்ப பயாஸ்கோப்பில் எம்புட்டு கொள்ளை போகியிருக்ககூடும் என்று விரல்களை விட்டு கணக்கு பார்க்க ஆரம்பித்திருப்பார்.
(//// அடித்தக் கொள்ளையும் நினைவிற்கு வருகிறது.(அது இப்போது வேண்டாம்) /// இதில் இருந்து எனக்கு தெரிவது நீங்கள் அந்த கொள்ளையை பக்கத்தில் இருந்து அவதானித்திருக்க வேண்டும் அல்லது உங்களின் அருமை கவிதை நண்பர் உங்களிடம் குறைபட்டிருக்கலாம். முழுமையாக சொன்னால் இனி வருபவர்கள் சுதாரித்து கொள்ளக்கூடும். ஏன்னா சிங்கப்பூரில் இவர் போன்றவகளை அழைக்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து திரிபவர்கள் ஓரிருவர்தான் (இவர்களை கடந்து அழைப்பது தேசியநூலகம் மட்டும்தான்).
வல்லினம் இதழ் சார்ந்து நான் அனுப்பிய தொடர்சியான என் மின்னஞ்சல்களுக்கு உங்களிடமிருந்து முறையாக வந்த பதில்களுக்கு இனி நான் என்கால்களை முடமாக்கி கொள்ளவேண்டும் அல்லது மாற்றுப்பால் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.
புரிகிறது என்ற என் புரிதல் மனிதர்கள் மீதான மனிதம் மீதான புரிதல்.
பாண்டித்துரை
சிங்கப்பூர்.
நண்பா!
ReplyDeleteஒரு சொல்லாடலிலன் வழி அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அரசியலைப் புரிந்து கொள்வதற்கு முன் நவீன சொல்லாடல்கள் வெறுமனே தன் சுயத்தை/பயன்பாட்டை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இன்றைய நவீன சொல்லாடல்களின் மகத்துவமே அதன் உள் அடுக்குகளும் முரண்பட்டு பிளவுப்படும் அதன் நுண் வெளிப்பாடுகளும்தான். சமூகம் குறித்து தனிநபர் குறித்து உலகம் குறித்து பயன்படுத்தப்படும் யதார்த்த சொல்லாடல்களை மீறிய ஒரு கட்டமைப்பு இப்பொழுதெல்லாம் மிக துணிச்சலாகக் கையாளப்படுகின்றன. அதை உடனே புரிந்துகொள்ள சில கட்டுடைப்புகளைச் செய்து படைப்பாளன் சொல்ல வரும் செய்தியை அடைய சில நுண் முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். மிக நேரடியாகச் சொல்லி மிக சுலபமாக வாசகன் புரிந்துகொள்ளும் பழக்கத்தைக் கொஞ்சம் மாற்றி அமைக்கை, வாசகர்களை அடுத்த புரிதலுக்குள் நுழைந்து சொல்லாடல்களுக்குள் இருக்கும் இரண்டாவது முரண்பாட்டை/புரிதலை நவீன சொற்களுடன் விளையாடி புரிந்து கொள்ள ஒரு சிறு பயிற்சி இது. (இவன் யாருடா இதையெல்லாம் செய்ய என்று நினைக்கத் தோன்றும்) எதையும் செய்து பார்க்க வேண்டும் என்கிற துணிச்சல் மனதில். சுயம் சார்ந்த வெளிப்பாடுகள் தவிர வேறெந்த தமிழக எழுத்தாளர்களின் வாலையும் பிடிக்கவில்லை நண்பா!
அவர்கள் மீது நான் சுமத்தும் கேலிக்குரல் என்று சொல்லியிருந்தீர்கள். மரபைக் கட்டமைக்க நவீன கவிஞர்களை மிக மோசமான முறையில் அவமானப்படுத்தும் மரபைச் சார்ந்தவர்களின் மீதான எனது விமர்சனத்தைப் பதிவு செய்யும்போது, "நவீன படைப்பாளிகளின் கவிதைகளுக்கு விபச்சாரிகளின் யோனிகளுக்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட தருவதில்லையே" எனும் வரியைச் சேர்த்துள்ளேன். யார் தருவதில்லையே? இந்த இடத்தில் மரபைச் சார்ந்தவர்களை நான் குறிப்பிட்ய்கிறேன். இதில் நானோ அல்லது என் சார்ந்த சமூகமோ அல்லது உலகமோ வரவில்லை. நான் கண்காணித்து புரிந்து கொண்ட இந்த மரபு கவிஞர்களின் வன்முறை சார்ந்த எனது புரிதலின் வழி வெளிப்பட்ட எனது காத்திரத்திற்கு நான் வடிவம் கொடுக்கும்போது அதில் விபச்சரிகளின் யோனி சிக்கிக் கொண்டது என்றே நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்தக் குறியீட்டை நான் படன்படுத்தியதற்குக் காரணத்தைத் தெரிவிக்கும் முன் "விபச்சாரிகளின் யோனி" என்கிற குறியீட்டைப் பல கலாச்சார தளங்களில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
விபச்சாரியின் யோனி என்று சொல்லும்போது அதை மட்டும் கேலிக்குரல் என்றால் மற்ற பெண்களின் யோனிகளுக்கு நிகரில்லாமல் மிகப்பெரிய ஒப்பீட்ய் பாவம் செய்து அதில் விபச்சாரிகளின் யோனியை மட்டும் பாவத்திற்குரியதாக அவமானத்திற்குரியதாகக் கட்டமைப்பது போல் ஆகிவிடும். ஆகையால் நான் விபச்சாரிகளின் யோனியைத் தமிழ் சமூகத்தின் பலவீனமான கேவலமான மதிப்பீடுகளின் பின்னனியிலிருந்துதான் பயன்படுத்தினேன், அவர்களின் மதிப்பீடுகளில் பளார் என்று அறைவதற்கு. விபச்சாரியின் யோனி என்பதை தமிழ்ச் சமூகம் மட்டும்தான் அதன்பால் உருவான புனித ஒழுக்கங்களை அளவுகோளாக வைத்துக் கொண்டு , விபச்சாரம் செய்யும் பெண்கள் பாவத்திற்குரியவர்கள், வழி தவாறிய சமூக சீர்கேடுகள் என்றெல்லாம் மதிப்பீடுகிறார்கள்.(இயேசு கிறிஸ்த்து போதனைகள் நடந்த காலத்திலேயே ஒரு விபச்சாரியைக் கல்லெறிந்து விரட்டியவர்கள் யூதர்கள்)ஆனால் இன்றென்னவோ மற்ற சமூகமும் நாடும் மாறிவிட்டது போல.
ஆனால் மற்ற கலாச்சார பின்னனியிலிருந்து பார்க்கும்போது விபச்சாரிகள் மீது அரசாங்கம் கொண்டுள்ள மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. தாய்லாந்தில் விபச்சாரிகள் அவமானத்துக்குரியவர்கள் கேலிக்குறியவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு நாம் நாடு திரும்ப இயலாது. அங்கேயே அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று என் நண்பர் சொல்லியிருக்கிறார். அந்த நாட்டில் விபச்சாரிகள் சக குடியுரிமை உள்ள சமூகத்தின் ஒரு அங்கமாக மதிக்கப்படுகிறார்கள். நாடும் அவர்களில் தொழிலை கௌரமான தொழிலாக அங்கீகரிக்கிறது. இதில் எங்கேந்து அவர்களை ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்த முடியும். மேலும் இக்ளு நாட்டில்(அடர்ந்த குளிர் பிரதேசம்)வெப்பத்தை அன்னியருடம்ன் பகிர்ந்து கொள்தல் என்பது தேசிய கொள்கையாகும். அதாவது அந்த ஊருக்கு யாராவது ஆண் விருந்தாளிகள் வந்தால், அவர்களுடன் தன் வீட்டுப் பெண்களி உடலுறவு வைத்துக் கொள்ள அவர்களின் கலாச்சாரம் இடமளிக்கின்றது. அவர்கள் அன்னியருடன் வெப்பத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த நாட்டில் ஒழுக்கமோ, விபச்சாரமோ கிடையாது, அங்கு வெப்பம் மட்டுமே கொண்டாடப்படுகிறது. இந்த நாட்டில் சென்று நம் தமிழ் சமூகத்திற்கே உரிய ஒழுக்க சொல்லாடல்களைப் பயன்படுத்தினால்,நம் கதி என்னவென்று சிந்துத்துப் பார்க்கவும்.ஆகையால் வெறும் தமிழ்ச் சமூகத்தின் மதிப்பீடுகளை மட்டும் பின்னனியாக வைத்துக் கொண்டு நாம் அவர்களை(விபச்சாரிகளை) ஒடுக்கப்பட்டவர்கள், கேலிக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அப்படிச் செய்தால் அது நவீன பார்வைக்கு அப்பாற்பட்ட பின்னடைந்த சிந்தனையாக இருக்கக்கூடும்.
ஒருசிலர் விருப்பப்பட்டு தொழில் செய்பவர்களும் உண்டு, இந்த இடத்தில் ஒட்டு மொத்த விபச்சாரிகளையே ஒடுக்கப்பட்டவர்காள் எனும் கூறும்போது விருப்பத்தின் பெயரில் இந்தத் தொழிலைச் செய்து கொண்டிருப்பவர்களின் சுதந்திரங்களைக் கொச்சைப்படுத்துவது போல இருக்கிறது. மேலும் விபச்சாரிகளை வெறுமனே ஒடுக்கப்பட்டவர்கள் பாவத்திற்குரியவர்கள் என்று சொல்வது உலகலாவிய அளவில் செயற்கையான பரிதாபங்களை அள்ளி வீசுவது போல இருக்கிறது.
ஆகையால் நான் இந்த மரபு கவிஞர்களின் உலகம் எப்படி இருக்கிறது என்பதை மிகத் துணிச்சலாக சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்கள் சார்ந்த இன்னும் மாறுபடாமல் போலி கலாச்சார போர்வைக்குள் அகப்பட்டு, விபச்சாரியைக்கூட பாவத்திற்குரியவள் எனும் கருதும் அபத்தமான சிந்தனைகள் கொண்ட அவர்களின் மதிப்பீடுகள், நவீன கவிஞர்களின்பால் இன்னும் மோசமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன். காரணம் விபச்சாரிகள் மீது அவர்கள் கொண்டுள்ள மதிபீட்டைக் கண்கூடாக பார்த்திடுக்கிறேன் என்கிற தைரியத்தில்தான் சொல்கிறேன். மேலும் இந்தச் சமூகத்தை வளரவிடாமல் இன்னும் இலக்கணம், மரபு வாழ்வு, ஒழுக்கங்கள் என்று பின்னடைவை நோக்கி இலக்கியம் வழியாக நம் சமூகத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான வெளிப்பாடுகளைப் பார்க்கும்போது கோபம் வரத்தான் செய்கிறது. தனி மனிதனை இழிவுப்படுத்துவதும் கேலிக்குரல்தான். அப்படி பல நவீன கவிஞர்களைக் கேலிச் செய்து கொண்டு அவமானப்படுத்துக் கொண்டும் தாங்கள் படைக்கும் இலக்கியமே சிறந்தது என்று மார்த்தட்டிக் கொள்ளும் சிலரைப் பார்க்கும் போது உக்கிரம் கொள்கிறது மனம்.
ஆனால் இங்கு யார் ஒடுக்கப்பட்டவர்கள் என்று வெறுமனே தீர்மானித்துவிட முடியாது.
உண்மையிலே ஒடுக்கப்பட்டவர்கள் யாரென புரிதலை ஏற்படுத்தும் முன் நம் நமது எல்லாம் பின்னனிகளையும் அளவுகோல்கள்களையும் துறந்துவிட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்மானிக்க வேண்டும் போல. மேலும் ஒரு சொல்லில் வரும் அரசியலைப் புரிந்து கொள்வதற்கு முன் அதே சொல்லில் மறைந்து கிடக்கும் எதிர் அரசியலையும் நுண் அரசியலையும் நுண் முரண்பாட்டு அரசியலையும் இப்படி பலவகையில் பிளவுப்படும் பல கூறுகளையும் புரிந்து கொள்ள முற்பட வேண்டும் நண்பா!.
நீங்காள் முன்வைத்த ஒரே புரிதலில், நான் ஒடுக்கப்பட்டவ்ர்களின் மீது கேலிக்குரல் சுமத்துபவன் என்கிர அடையாளம் எனக்கு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட அடையாளத்தை பதிவில் சுமத்தும் முன் என்னுடன் தனிப்பட்ட முறையில் நீங்கள் பேசியிருக்க வேண்டும்நாம் எவ்வித கட்டுபாடுகளும் இன்றி தாராளமாகப் பேசியிருக்கலாம். மேலும் சில எதிர்வினைகள் உண்டு, எழுத்துப் பிழைகள்-தமிழக எழுத்தாளர்களின் வால் பிடிப்பது குறித்து. அடுத்த மடலில் அதைப் பற்றி பேசலாம்.
அன்புடன்
கே.பாலமுருகன்