
எம்.ஏ.இளஞ்செல்வன்
எம்.ஏ.இளஞ்செல்வன் மது அருந்துவார் என்பது நான் அதுவரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. அதிலும் ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லும் ஆதி.குமணன் பட்டப்பகலில் மது அருந்துவது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.எழுத்தாளன் என்பவன் ஒரு போதகன்.அவன் சமூகத்திற்காக எதையாவது போதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நம்பினேன். நான் வாசிக்கும் புத்தகங்களில் அப்போது மு.வரதராசனுக்கும் முக்கிய இடம் இருந்தது.வாரம் ஓர் அறிவுரையைத் தேர்ந்தெடுத்து அதை கவிதையாக்கி பெரும் சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தேன்.மது எனக்கு இதற்கு முன் கொடுத்தக் காட்சிகள் இளஞ்செல்வனின் பால் இருந்த மரியாதையைக் குறைத்தது.நான் மனதளவில் இளஞ்செல்வனிடமிருந்து விலகினேன்.அதோடு அவரைச் சந்திப்பதையும் குறைத்துக் கொண்டேன்.
இறுதியாண்டு சோதனை முடிந்து விடுமுறை தொடங்கியதும் அம்மாவுக்கு பயம் வந்திருக்கக்கூடும். ஒன்றரை மாதமும் நான் சரவணனோடு செய்யப்போகும் சாகசங்கள் அவரின் கற்பனையில் எட்டியிருக்க வேண்டும்.எனக்கும் சரவணனுக்கும் ஏற்பட்டிருக்கும் இடைவெளி அவர் அறியாதது.பள்ளி விடுமுறையில்'தாமான் கங்கோங்கில்' இருந்த என் மாமாவின் உணவகத்தில் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார்.எனக்கும் சரவணனுக்கு இடைவெளி மேலும் விரிவடைய அதுவும் ஒரு காரணமாக இருந்தது.
முதலில் மங்குகளைக் கழுவுவது மேசை துடைப்பது போன்ற அடிப்படையான வேலைகள் எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.ஒரு சில நாட்களிலேயே நான் அவற்றில் தேறிவிட்டேன்.குவிந்து கிடக்கும் எச்சில் படிந்த மங்குகள் முதலில் அலுப்பை மூட்டினாலும் பின்னாலில் மங்குகளைக் கழுவுவதில் உள்ள லாவகமும் விரல்களில் அவற்றை சுற்றி சுழற்றி அடுக்கி வைக்கும் பாவனையும் ஒரு விளையாட்டு போல் ஆனது.கடித்து உரிஞ்சப்பட்ட எலும்புத்துண்டுகள் மட்டும் பல்வேறு வகையிலான, அளவிலான பற்களை நினைவுறுத்துவதாய் இருந்தன.
கடையிலிருந்து வீடு திரும்ப எனக்கு அனுமதி இல்லை.கடையின் மேல் தளத்தில் இருந்த அறையில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களோடு தங்கிக் கொண்டேன்.பகலில் கடுமையாக உழைக்கும் அவர்களுக்கு இரவில் ஒரே ஆறுதல் பீர் பாட்டில்கள்தான்.ஏறக்குறைய நான்கு தமிழ் நாட்டு நண்பர்கள் போதையில் என்னைப்புடைச் சூழ சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.நான் போர்வையை தலை வரை இழுத்து மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருப்பேன்.நான் அங்குத் தங்கியிருந்த நாட்கள் முழுவதும் அவர்கள் என்னை பீர் குடிக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கினர்.மௌனங்களாலும் தூக்கங்களாலும் அவர்களை நிராகரித்துக் கொண்டிருந்தேன்.நண்பர்களால் கட்டாயப்படுத்தப்படுவது கொடுமை.பதிலுக்குத் திட்ட முடியாது.முற்றிலும் ஏற்கவும் முடியாது.திட்டாமல் நிராகரிக்கும் ஒரு மெல்லிய கோட்டில் பயணிக்க வேண்டும்.
அதைவிட பெரிய கொடுமை சில தினங்களுக்குப் பின் எனக்கு நிகழ்ந்தது.
தொடரும்
தொடரும்
No comments:
Post a Comment