Wednesday, April 22, 2009

ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றா, இசா சட்டம்?!


இசா சட்டம் என்பது 'உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்' என்ற சொல்லின் சுருக்கம். இச்சட்டம் மிகவும் பிரபலமானது அண்மையில் தான். முன்னாள் பிரதமர் (துன்) அப்துல்லா அகமட் படாவியின் ஆட்சிக் காலத்தில் ஹிண்டிராஃப் பேரணி நடத்தியபோது இச்சட்டத்தின் காட்டத்தை மலேசிய இந்திய மக்கள் பெரிதாக - மிக வெளிப்படையாக உணரத் தொடங்கியிருந்தனர். அதன் பிறகு மற்ற எதிர்க்கட்சிகளும் கூடவே வழக்கறிஞர் மன்றத் தலைவியாக இருந்த அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்களோடு மன்ற உறுப்பினர்களும் இசா சட்டத்திற்கு எதிராக கலகக் குரல்கள் துன் அப்துல்லா காலத்தில் எழுப்பியது துரதிஷ்டமா அல்லது அவரின் கையாண்ட விதம் பலவீனமா என ஆய்வாளர்களின் சிந்தைகளிலிருந்து விரைவில் வெளிப்படக்கூடிய ஒன்று எனலாம்.

ஹிண்டிராஃப் பேரணி விஷயத்தில் பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் சர்வாதிகாரத்தனமாக நடந்து கொண்டது சரியா? துன் மகாதீரே இருந்திருந்தால் எப்படி நடந்துக் கொண்டிருப்பார்? போன்ற கோணங்களை ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்hம் தாண்டி இசா சட்டம் தேவையா இல்லையா என நாமும் கருத்துக் கூறலாமே என 'அஞ்சடிக்கு' வந்திருக்கிறேன்.

கடுமையானது, கொடுமையானது, மனுஷத்தன்மையே இல்லாதது; இப்படித்தான் மனித உரிமை போராட்டவாதிகள் 1960-ல் இயற்றப்பட்ட இசா சட்டத்திற்கு அடையாளமிடுகிறார்கள். இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள், நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கண்டிப்பாக தேவைப்படுகின்ற சட்டம் என அறிவிக்கின்றனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இச்சட்டம் தேவையா இல்லையா என்ற சர்ச்சை உருவாகி, பரபரப்பாகி, பிறகு அமைதியாகும். இம்முறையும் எப்போதும் போல பிரதமர் பதவியேற்றவுடன் முதல் அறிவிப்பாக ‘இசா சட்டம் முழுமையாக ஆராயப்படும்’ என டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.

அரசியல் எதிர்க்கட்சிகள் யாவும் மிகவும் ஆவலோடும் திக்..திக்.. மனவொலியோடும் எதிர்பார்த்திருக்கின்றனர். அந்த அறிவிப்பே நாட்டு மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது என்பது உண்மையே!இச்சட்டம் அறிமுகமானதிலிருந்து 2005 வரை 10,662 பேர் கைதியாகியுள்ளனர். 4,139 பேருக்கு வழக்கமான தடுப்பு உத்தரவிற்குள்ளும் 2,066 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறைகளுக்குள்ளும் ஆட்படுத்தப்பட்டிருந்தனர். இன்று வரை 27 பேர் தடுக்கப்பட்டும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றனர்.இச்சட்டத்தை எதிர்பார்ப்பவர்களின் வாதம் என்னவெனில் விசாரிக்கப்படாதபடிக்கு தடுத்து வைப்பதாகும். இது அடிப்படை மனித உரிமையையே மீறுவதாகும்.

இசா சட்டத்தின் கீழ் ஒருவர் தடுக்கப்படும்போது அல்லது கைதாகும்போது அவருக்கு நீதி விசாரணை மறுக்கப்படுகிறது. குற்றப்பத்திரிகை இல்லை. இதன் அர்த்தம், அந்த ஒருவர், தன்னை தற்காத்துகொள்வதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவர் விசாரணையின்றி குற்றவாளி என தடுக்கப்பட்டிருப்பார்.ஒருவர் இசா சட்டத்தின் கீழ் கைதாகும்போது 60 நாட்களுக்கு போலீஸ் காவலில் இருப்பார். அச்சமயங்களில் நீதிமன்ற விசாரணையோ எவ்வித விசாரணையோ இன்றி இருப்பார். 60 நாட்களுக்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சு தடுக்கப்பட்டிருப்பவரை விடுதலை செய்யக்கூடும் அல்லது எவ்வித விசாரணையுமின்றி இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்கப்படும்.

மாநில உள்துறை அமைச்சு ஒருவரை இரண்டு ஆண்டுகள் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமானால் தடுத்து வைக்கப்பட்டவர் பேராக்கிலுள்ள கமுண்டிங் கேம்-மிற்கு அனுப்பப்பட்டு அங்கு இரண்டு ஆண்டுகளை கடூக்க வேண்டும். அக்காலக்கட்டம் முடிந்ததும் அதனை நீடிக்கச் செய்வதற்கு மாநில அமைச்சுக்கு சட்டம் அனுமதி தருகிறது.மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவாரான ரகுனாத் கேசவன் இதுகுறித்து, "அச்சட்டமானது ‘குற்றத்தை நிரூபிக்கும்வரை குற்றவாளியல்ல’ எனும் அடிப்படை கொள்கைக்கு எதிரானது" என்றார்.

"தடுத்து வைக்கப்பட்டவர் தன்னை தற்காத்துக்கொள்ள வடூயில்லாதபோது அமைச்சானது அவரைப்பற்றி மக்களிடையே பலவிதமாக பல குற்றங்களை சுமத்திட முடியும். இது நியாயமில்லை", என்றார் அவர்.செக்ஷன் 8(1) இசா சட்டமானது, நாட்டிற்கு அபாயகரமானவர்களாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலாகவும் இருப்பவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு தடுத்து வைக்க மாநில உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் கொடுக்கிறது."கமுண்டிங்கிலுள்ள அநேக கைதிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கே அவர்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றம் இன்னதென்று தெளிவில்லாமல் இருக்கிறார்கள். தங்களை தற்காத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாத சூழலே இருக்கிறது", என்றார் ரகுநாத்.

"நாம் குற்றம் இழைத்து தண்டிக்கப்பட்டால் முடிவு என்னவென்றாவது தெரியும், "என சொல்லிய அவர், இசாவின் கீழ் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தாலும் 15 ஆண்டுகளுக்கு மேல் தடுக்கப்பட்டிருப்போரும் அங்கே உண்டு என்றார்.

மேலும் அவர், நீதிமன்றம் ‘நாட்டின் பாதுகாப்பு’ தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்ய மறுக்கிறது. அது தடுக்கும் விஷயத்திற்குரிய நுட்பங்களை மட்டும் ஆய்வு செய்ய ஆயத்தமாய் இருக்கிறது.இவ்விஷயத்தைக் குறித்து, நீதிமன்றம் திறந்த மனப்பான்மையுடன் செயல்படாமல் அரசாங்கத்திற்கு இதுபோன்ற விஷயங்களுக்கு அடிமை போல செயல்பட்டு வருகின்றது.

இசா சட்டம் இந்நாட்டில் அறிமுகமானது 1960-ல். கம்யூனிஸ தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் இது. காலப்போக்கில் கலகக்குரல் மாணவர்கள், அரசியல் எதிரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சியினர், இயக்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், போலி கடப்பிதழ் செய்வோர் ஆகியோரும் கூட இச்சட்டத்தில் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

இசா-வில் தடுக்கப்பட்ட அனேகர் தங்கள் இயல்பு வாழ்வை இழந்திருக்கின்றனர் என்று இசா ரத்து இயக்கத்தின் (GMI) தலைவர் சைட் இப்ராஹிம் கூறினார்.

குடும்பம் உடைகிறது; மனைவி மணவிலக்கு கேட்கிறாள்; பிள்ளைகள் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்; மனரீதியில் பாதிப்படையும் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது" என்றார்.

இசா சட்டத்தின் கீழ் தடுக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடத்தப்படுகிறார்கள். அதற்கு உதாரணமாக முன்னாள் இசா கைதி அப்துல் மாலிக் ஹ¥சேன் என்பவர் 1998-ல் அடிக்கப்பட்டும் சித்திரவதைக்குட்பட்டும் இருந்திருக்கிறார்.

இன்னொரு நபரான சஞ்சீவ் குமார் என்பவர் ஒற்றர் என குற்றஞ்சாட்டி இடுப்பிற்கு கீழே கால்வரை செயலற்றுப்போகும்வரை தடுப்புக் காவலில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் ஷாரி சுங்ஙிப் இசா சட்டத்தின் கீழ் முன்பு கைது செய்யப்பட்டவர் சொல்வதாவது "இந்த இசாவானது இஸ்லாமிய போதனைக்கு எதிரானது என்றார். பாரிசானின் சட்டத்துறை அமைச்சரான டத்தோ ஸைட் இப்ராஹிம், இசா மிகவும் சிக்கலானது, மறு ஆய்வு செய்வதை விட அதனை ரத்து செய்வதே மேல் என கருத்துரைத்தார்.

உண்மையாகவே ஒரு நாட்டின் பாதுகப்பிற்காக சட்டங்கள் தேவைப்படுமேயானால் உதாரணமாக பிரிட்டனில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் போல், புதிய சட்டங்கள் தெளிவாகவும் நியாயமாகவும் இயற்றப்பட வேண்டும்.ரகுநாத்தும் ஸைட்டின் கருத்துக்கு உடன்படுகிறார். இசா சட்டம் மறு ஆய்வுக்குப் போவதை விட ரத்து செய்யப்படுவதே மேல் என்பதாகும்.

கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய சோஸலிஸ்ட் கட்சி தலைவருமான (PSM), டாக்டர் முகமட் நாசீர் ஹாஷிம் இந்த இசா சட்டம் மலேசியாவிற்கு தேவையில்லை. அடூக்கப்பட வேண்டிய ஒன்று."நமக்கு இசா தேவையில்லை. அதன் தோற்றம் சரியில்லை. நமக்கு இசா இருந்தால், நமக்கு அரசியல் சட்டதிட்டம் தேவையில்லை. இசாவானது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது. மனித சுதந்திரத்திற்கும் இயக்க உருவாக்கத்திற்கும் கூட எதிரானது", என்ற அவர், இசாவின் கீழ் லிம் கிட் சியாங்கோடும் முகமட் சபூவோடும் ஒன்றாக தடுக்கப்பட்டிருந்தவர் ஆவர்.

1991-ல் 59 நாட்கள் இசா-வின் கீழ் தடுக்கப்பட்டு அதன் சித்திரவதைகளை அனுபவித்த இன்றைய அறிவியல் மற்றும் புத்தாக்க அமைச்சரான டத்தோ ஸ்ரீ டக்டர் மக்ஸிமஸ் ஓங்கிலி-யின் கருத்து சற்று வித்தியாசமானது. நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் இந்த இசா சட்டம் தேவை என்றாலும் கையாளும் வகையில் சிறு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

"அந்தச்சட்டமானது நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆபத்தானவர் என நினைக்கும் ஒருவரிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் நோக்கத்தை உடையதாக இருக்கக்கூடாது", என்றார் அவர்.மேலும் அவர், அச்சட்டத்திற்குரிய அதிகாரம் முடிவான முடிவாக தனியொருவரின் கரத்தில் இருக்கலாகாது, காரணம் சுலபமாக அவர் அதனை தவறாக பயன்படுத்தக்கூடும் என்று சொன்னார்.

பயங்கரவாதத்தை இந்நாட்டில் கையாளப்போவது எப்படி? இப்போது இல்லை. வருங்காலத்தில் நடக்கலாம் அல்லவா?, அதைத் தவிர இசா என்பது ஒருவரை வைத்து நிர்ணயிப்பது அல்ல, மேலும் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்த வாய்ப்பளிக்கக் கூடாது", என்றார்

ஒவ்வொரு முறையும் பிரதமர் பதவியேற்பு நடந்து முடியும்போது இசா சட்ட கைதிகளின் விடுதலை அறிவிப்பு கண்டிப்பாக இடம் பெற்றிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால் பிரதமர் நினைத்தால் மாத்திரமே இசா கைதிகள் விடுதலையாக்கப்படுகிறார்கள். பிரதமர் மட்டுமே இப்படி விடுதலை செய்வது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டிருக்கிறது. இதுவோர் அரசியல் அதிரடி விளம்பரம் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். தங்களுடைய கட்சி ஆளுங்கட்சியாக இருக்கையில், எதிர்க்கட்சிகள் செய்யும் தீவிர பிரசாரங்களும் நடவடிக்கைகளும் தங்களுக்கு எதிரான சதியோ, படுகுடூயோ, வீழ்த்திவிட சந்தர்ப்பமோ கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் பெரும்பாலும் இசா சட்டம் பாய்ந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளும்கூட ஆளுங்கட்சியாக ஆட்சிபீடத்தில் அமரும்போது இதே இசா சட்டத்தை இதே நோக்கத்தில் பயன்படுத்துவார்களோ என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே இருந்து வருகிறது.எப்படியோ இந்த இசா சட்டத்திற்கு பகிரங்கமான எதிர்ப்பு வந்தது ஹிண்டராஃப் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய சமூகத்தினிடையே ஒரு பெரிய அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில், குறுஞ்செய்தி வாயிலாக தன் சக்தியை நிரூபித்ததில் நாம் ஹிண்டராஃபிற்கு நன்றி கூறத்தான் வேண்டும். அதற்கு மேல்...... பல கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கிறேன். நியாய அநியாயங்களை கண்டிருக்கிறேன். பலவீனங்களை, அவசரத்தனங்களை, சோரத்தை, தன்னை முன்னிலைப்படுத்தும் போக்கை, பக்கா அரசியல்தனங்களை கண்டிருக்கிறேன்.

ஒரே ஒரு திருப்தி மட்டும்தான்.

ஓர் உருப்படியான கல்விமான்களை - சட்டங்களை நன்கு அறிந்த அறிவுஜீவிகளை ஒன்று சேர்த்திருக்கிறது. அதுகூட எதிர்காலத்தில் இவர்கள் ஒன்றுப்பட்டிருப்பார்களா என்ற சந்தேகம் என்மனதில் வலுத்திருக்கிறது.

மஹாத்மன்

No comments:

Post a Comment