Wednesday, April 22, 2009

பிச்சை புகினும்...

வணக்கம்,

எல்லாம் முடிந்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்க எத்தனிக்கும் தருணத்தில் மீண்டும் திரு.பாலமுருகன் பிரசன்னமாகியுள்ளார்.பொதுவாக நான் தனிமனிதர்கள் ஒட்டிய மோதல்களைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.நவீன்,மஹாத்மன்,சிவம்,சந்துரு எனஅத்தனைப் பேரோடும் கடுமையாய் பொருதியிருக்கிறேன்.மஹாத்மனோடு கிட்டதட்ட ஒரு வருடமும் (அடிக்கடி காணமல் போவதால்நீண்ட இடைவெளி), நவீனோடு சுமார் ஆறு மாதம்.சிவம் என்னைச் சந்திக்க விரும்பாத இருந்த காலமும் உண்டு.(இப்போதும்தான்)பெரும்பாலும் இலக்கிய சர்ச்சைதான். இவ்வாறான சமயங்களில் இருவர் தரப்ப்பிலும் வெளிபட்ட கண்ணியமான மொழியும் மௌனமும் இப்போது நினைத்துப் பெருமூச்சு விடவேண்டியதுதான்.

நிற்க,
நவீன் வல்லினத்துக்காக பலரிடம் பிச்சையெடுப்பதை திரு.பாலமுருகன்

வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.நவீனின் இன்றைய நிலைமைக்கு நானும் காரணமாய் இருப்பதால் சில செய்திகளைப் பகிர்ந்துக் கொள்ள அவா.

நகைச்சுவைப் பகுதி
சில வருடங்களுக்கு முன் நவீன் 'மலேசிய வைரமுத்து'வாகவும்,சிவம் 'மலேசிய அறிவுமதி'யாகவும்,சிவா பெரியண்ணன் 'மலேசிய அப்துல் ரகுமான்'ஆகவும் பட்டொளி வீசி பறக்க தொடங்கியிருந்தனர்.(இன்னொரு சிவா..இப்போதைக்கு வேண்டாம்.) இவர்களின் அபரிதமான வளர்ச்சியைக் கண்டு பீதியில் வயிறெரிந்தான் உங்களால் நாட்டாமை என்றழைக்கபடும் யுவராஜன்.யுவராஜனைப் பற்றி சில குறிப்புகள்இவன் மலேசியாவில் எழுதும் யாரையும் வாசிக்கமாட்டான். எப்பொழுது பார்த்தாலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கே வால்பிடித்து அலைவான்.யாராவது சண்முகசிவாவின் எழுத்தைச் சிலாகித்தால் 'ம்... என்ன இருந்தாலும் வண்ணதாசன் போல்..'என்று ஆரம்பிப்பான்.சில அரைவேக்காடு சிறுகதைகளைப் போட்டிகளுக்கு மட்டும் எழுதுவான்.

நிற்க,
சிவா பெரியண்ணனனை முதலில் பிடித்தான்.நைசாக பேசி அவனிடம் வைத்தீஸ்வரனின் கவிதைத் தொகுப்பை கையில்திணித்தான்.சிவா அதோடு காலி.இப்போது ஜோகூர் பக்கம் இருப்பதாக கேள்வி.அடுத்து சிவம்.மலாயா பல்கலைக் கழகநூலகத்தில் தேமேவென்று பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தார் சிவம்.'குட்டி ரேவதி'யின் கவிதையை வாசித்திருக்கிறீர்களா? என்று ஆரம்பித்தான்.அவரும் ஓடிப் போனார்.கடைசியாக மிஞ்சியது நவின்.பேரவை கதையின் பரிசளிப்பு விழாவில் மாட்டினான் நவீன்.அந்தப் போட்டியில் யுவராஜனுக்குப்பரிசு விழுந்திருந்தது.வாழ்த்துச் சொல்ல கை நீட்டிய நவீன் வசமாக மாட்டிக் கொண்டான்.அந்த கண நேரத்திலும் இருபதுக்கும்மேலான கவிஞர்களின் பெயரைச் சொல்லி இவர்களைப் படிக்காமல் மேலும் எழுதுவது வீண் என்று முத்தாய்ப்பாய் முடித்தான்.

சீரியஸ் பகுதி
சரியாக ஒரு வருடம் கழிந்து நவீனிடமிருந்து அழைப்பு.'காதல் ' என்ற இலக்கிய பத்திரிகையை திரு. தமிழ்மணியின் அவர்களின் உதவியோடுதொடங்குவதாக திட்டம்.முதல் சந்திப்பிலேயே அய்யாவை ஏற்படபோகும் இழப்பு குறித்து எச்சரித்தோம்.திரு. தமிழ்மணி எதைப் பற்றியும்அலட்டி கொள்வதாக தெரியவில்லை.பத்து இதழ்களோடு கிட்டதட்ட ஐம்பதாயிரத்தை விழுங்கி கொண்டு தொண்டையடைத்து மடிந்தது 'காதல்'.திரு.தமிழ்மணி அவர்களின் நிறைய கருத்துகளோடு முரண்படுபவன் நான்.'காதல்' நிச்சயம் நட்டமாகும் என்பதை ஆரம்பத்திலேயேஉண்ர்ந்திருப்பார்.ஆர்வமான இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நல்லெண்ணத்தைத் தவிர வேறெதையும் உணரமுடியவில்லை.நெகிழ்ச்சியான நன்றியும் அன்பும் எப்போதும் என் மனதில் திரு.தமிழ்மணி அவர்களுக்கு உண்டு.

பிறகு வல்லினம்.நவீன் அதைப் பற்றி எழுதி விட்டதால் மேலும் வேண்டாம்.'பிச்சை' என்று சில மொட்டை கடித சொறிப் பேர்வழிகளும்,அனாமதேய வெறிப் பேர்வழிகளும் சொல்லலாம்,நீங்கள் சொல்லலாமா திரு.பாலமுருகன் அவர்களே!மலேசியாவில் இலக்கியத்தில் மாற்று சிந்தனையை நம்புபவர்கள் விரும்பி ஏற்க வேண்டிய கடப்பாடு அல்லவா...உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் ஒதுங்கி செல்லுங்கள்.நவீன் புனிதர் இல்லைதான்.அவருடைய பலவீனங்களை ஓரளவு அறிந்தவன்தான்.இதையெல்லாம் மீறி நாட்டின் நவீன இலக்கியத்தில் அவர் பங்கு மிக முக்கியமானது.

ஏற்கனவெ இதழ்ப் பணி அவரின் படைப்பு மனத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பதில் சோர்வாகத்தான் இருக்கிறார்.ஒளவையார் பாட்டி சொன்னதாக தமிழ்ப்பள்ளியில் படித்தது;

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

சோர்வுடன்,
சு.யுவராஜன்.

பி.கு : நகைச்சுவை பகுதியொட்டி சிறுவிளக்கம். கேலியும், அவதூறுகளோடுதான் நவீன இலக்கியம் இந்நாட்டில் வளர்ந்து வந்திருக்கிறது.ஆச்சரியமாக யாருமே உறவுகளை முறித்துக் கொண்டதாக செய்தியில்லை.அத்தனை கருத்து வேறுபாடுகளோடும் ஒருவர் ஆளுமை மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதைதான் காரணமோ? அஞ்சடியைப் பிரபலபடுத்த உங்களைக் கொச்சைப்படுத்தும் அவசியம் நவீனுக்கு இருப்பதாக நான் நம்பவில்லை திரு.பாலமுருகன்.அதன் அத்தனை சாத்தியங்களையும் உதறித் தள்ளியவர் நவீன்.அதற்கு நானே சாட்சி.இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை.நல்ல எழுத்தாளர்களின் ஆளுமை அப்படிதான் இருக்கும்

No comments:

Post a Comment