Tuesday, March 24, 2009

என்னால் தொடங்கிய விவாதங்களுக்கு. . .

என்னால் தொடங்கிய விவாதங்களுக்கு. . . நண்பர் நவீனின் கடைசி கட்டுரையைப் படித்த பிறகு, ஏன் நான் என்ன கொம்பனா? மன்னிப்புகூட கேட்கத் தயங்குகிறோமே எனச் சுருக்கென தோன்றியது. ஆகையால் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் முன்பே சொன்னது போல எனக்கு விவாதிக்கும் திறனே இதுதான் முதல் அனுபவம் என்பதால் நான் முன்வைத்து நானே சிக்கிக் கொண்ட சில பதற்றங்களை, தடுமாற்றங்களை எண்ணி வருத்தம் கொள்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள், புத்திமதியோ அல்லது தனி மனிதனை அவனுடைய பழைய தவறுகளை சுட்டிக் காட்டி பேச வேண்டுமென்றால், நேரிலேயே முகத்திற்கு முகம் பேசிவிட்டு போனால் அவை அவ்வளவு கசப்பாக இருக்காது என நினைக்கிறேன்.

பா.சிவம் சொன்னது போல உண்மையில் மரணத்தைவிட கொடியதுதான் நண்பர்களின் பிரிவு. என்னத்தெ கொண்டு போவ போறோம்? என்னை முன்னிறுத்தி நான் ஆடிய அபத்த விவாதங்களில் கொஞ்சம்கூட நியாயம் இருக்குமோ இல்லையோ, தாராளமாக மன்னிப்பு மட்டும் கேட்கத் தோன்றுகிறது.

நண்பர்களே, மீண்டும் நான் எல்லோரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என்னால் தொடங்கிய விவாதம்தான் இந்த அளவிற்குக் காத்திரம் பெற்று எங்கொங்கோ சென்று இழிவான நிலைக்குச் சென்றுள்ளது. இறுதியாக ஒன்று மட்டும், எல்லோரையும் திருப்திப்படுத்த இயலாத நிலையில் சிலவேளைகளில் முரண்பட்டுப் போகிறேன். நவீன் நீங்கள் அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகியது தங்களின் சுதந்திரம். இனி அநங்கத்தின் ஆலோசகர் குழு இல்லை. அநங்கத்தை இன்னும் வளர்க்க பாடுபடுவேன். மேலும் விலகினாலும் நீங்கள் கடைசியாக சொன்ன ஆலோசனைகள் படி அநங்கத்தை இன்னும் தீவிரமாக்க முயற்சிப்பேன்.

நண்பர்கள் படைப்புகளை அனுப்பி அநங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வர வேண்டும். யுவராஜன் சொன்னதை அப்பொழுதே கேட்டிருக்கலாம் போல. மன்னிப்புக் கேட்டுத் திருத்திக் கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்க வேண்டியிருக்காது. நுண் அரசியலோ மண்ணாங்கட்டி அரசியலோ, இன்றும் இந்த அரசியல் வைத்தே நான் சிலரால் மதிபீடப்படுகிறேன். நானா அரசியலை கேட்டேன்? நானா செயலாளர் பதவியை வலிந்து வந்து பெற்றுக் கொண்டேன்? நம்பிக்கையின் பெயரில் ஒருசில மூத்தவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட எழுத்தாளர் சங்கம் செயலாளர் பொறுப்பை ஒரு பொறுப்பாக மட்டுமே பார்த்தேன். அது தரப்பட்டு சில நாட்களிலேயே உடனே வெளியேறு என்று கோரிக்கைவிட்டால், என்ன இது நியாயம்?

எல்லாவற்றுக்கும் சில முறைகள் உள்ளதே. நமது கால் கடிக்கப்படுகிறதே என்பதற்காக நல்லா இருக்கும் காலையும் பிடுங்குமாறு உத்தரவுவிட முடியுமா? என்னவோ. . நானே அறியாத எதிர்பார்க்காத தருணத்தில் பலரிடம் பகைத்துக் கொண்டதாக போயிற்று. இனி அவர்களிடம் நேர்மையா தவறை ஒப்புக் கொண்டு சென்றாலும் நான் சந்தர்ப்பவாதி எனக் கருதபடுவேனா? வேண்டாமப்பா! மனதிலிருந்து வரும் குரல் இது. என்னைத் திருத்திக் கொண்டு என் பலவீனங்களைத் துறந்து, இனி படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என தீவிரமடைந்துள்ளேன். மீண்டும் எங்காவது சந்தித்தால், ஒரு புன்னைகையோடு எதிர்க்கொள்வோம்.

விபச்சாரி யோனி குறித்து நான் சிறுகதை எழுதுகிறேனோ நாவல் எழுதுகிறேனோ அது என் பாடு. நானே வலிந்து ஏற்படுத்திய கட்டமைப்பைக் கொஞ்சம் தளர்த்தும்போது மனம் இலேசாகுகிறது. பா.சிவம் சொன்னது போல மரபு கவிஞர்கள் குறித்து எதற்குக் கவலைபட வேண்டும்? உண்மைதான். நாம் நம் வழியில் எழுதிக் கொண்டே போகலாம் என நினைக்கிறேன். (இது எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்) சில சமயங்களில் எதிர்வினையாற்ற வேண்டிய இடத்தில் அமைதி காத்திருக்கிறேன். இனியாவது இந்த மண்டைக்கு அதன் முக்கியத்துவம் குறித்து உறைக்குமா என்று பார்ப்போம்.

சிவம் சொன்னது போல நான் யாருடைய எதிர்ப்பார்ப்பிற்கும் எழுதவும் இல்லை, அதே சமயம் பிறரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் எதிர்வினையாற்றவும் தேவையில்லை. சறுக்கி மீண்டும் எழுந்து கொள்வதுதான் மன வலிமை போல. இப்பொழுது எழுந்து முன்பைவிட உறுதியாக நிற்பது போல தோன்றுகிறது. எங்கிருந்து எல்லாம் தவறுகளும் நிகழ்கிறது என ஆராயவும் தோன்றவில்லை. மிகச் சரியாக நடந்து கொள்ளவும் அவ்வளவு துல்லியமாக இயலவில்லை. இருந்தும் சில கற்பிதங்கள்-சில பகிர்தல்-அதே சமயம் சில அவதூறுகள் என எல்லாவற்றையும் சம்பாரித்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறேன்.

இறுதியாக நவீனுக்கு: அதுதான் மின்னஞ்சலிலேயே அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டீர்களே! பிறகு ஏன் இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்? பகீங்கரமாக எல்லோரும் அநங்கத்தைவிட்டு வெளியேறுவதை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டுமா? வலிக்கிறது நண்பா மனம். . . .

சிவம் சொன்னது போல அந்த தெய்வீகமானவர்களை வம்புகிளுத்ததால் கிடைத்த பலனா? தெரியவில்லை. வலு பெறும் நம்பிக்கைகளுடன். . அநங்கத்தின் எழுத்துப் பிழைகளைக் குறைக்க களைய ஆசிரியர் குழுவில் சொல்லி சீரமைப்பேன்.. . சிவம், நவீன் முன்வைத்த நட்பான எதிர்வினையில் மனம் இலேசாகி எல்லாம் தவறுகளையும் என் மீதே சுமத்திக் கொண்டு நிற்கலாம் எனத் தோன்றுகிறது. அன்புக்கு இவ்வளவு சக்தியா?

அன்புடன்
கே.பாலமுருகன்

No comments:

Post a Comment